
உங்கள் வாழ்வில் விரைவில் வெளிப்படப்போகும் தேவனுடைய புதிய திட்டத்தின் லாபங்களை, நன்மைகளை நீங்கள் தான் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்றால், நீங்கள் தான் அவற்றிற்கான சிலுவையைச் சுமக்க வேண்டும்.
ஆதி 45:7 பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க, உங்களை ஆதரிக்கிறதற்காகவும் பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும், தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.
தேவன் உன்னை பெரிய இரட்சிப்பினால் காக்க வேண்டுமென்று விரும்புகிறார். நீ தேவனிடத்தில் சிறுசிறு இரட்சிப்புகளைக் கேட்கிறாய். அன்றன்றைக்கு, அந்தந்த மாதத்திற்கு, அந்தந்த வருடத்திற்கான இரட்சிப்பை நீ கேட்கிறாய். கர்த்தர் ஒரு இரட்சிப்பைக் கொடுக்க விரும்புகிறார். அந்த இரட்சிப்பு உன் வாழ்நாள் முழுவதற்கும் போதுமான பெரிய இரட்சிப்பை கர்த்தர் உனக்குக் கொடுக்க விரும்புகிறார்.
அவரிடத்தில், நீ எதிர்பார்ப்பது சிறிய அளவிலான இரட்சிப்பு. அதாவது, தற்போதைக்கு என் பிரச்சனை தீர்ந்தால் போதுமென்று நீ நினைக்கிறாய். இப்போதைக்கு உன் பிரச்சனை தீர்வது முக்கியமல்ல. இனி உனக்கு பிரச்சனையே வராமல் இருக்க வேண்டும். கடந்தகாலத்தில் நீ சந்தித்த காரியங்களை இனி நீ எந்தக் காலத்திலும் சந்திக்கவே கூடாது என்பதுதான் உன்னைப் பற்றிய தேவனுடைய சித்தமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட பெரிய இரட்சிப்பிற்காக, நீ கொஞ்சகாலம் அழுதுகொள். துடித்துக்கொள். வேதனைப்பட்டுக்கொள். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, நீ அழவே கூடாது. இடுக்கண் மறுபடியும் உன் வாழ்வில் வரவே கூடாது என்பது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
இன்று அவர் உன்னைப் பார்த்து சொல்லுகிறார். ‘நான் உன்னைச் சிறுமைப்படுத்தினேன். இனி உன்னைச் சிறுமைப்படுத்தாமலும் இருப்பேன்.’ இத்தனை நாட்களும் நீ சிறுமைப்பட்டதற்குக் காரணம், அவர்தான் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். ’ஆம், நான் தான் உன்னைச் சிறுமைப்படுத்தினேன். ஆனால், உன்னைச் சிறுமைப்படுத்த மாட்டேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர் ’சிறுமைப்படுத்தமாட்டேன்’ என்று சொல்லுகிறார் என்றால், உன் பேரைப் பெருமைப்படுத்தப்போகிறார் என்று அர்த்தம்.
உன் மேல் இருக்கிற எந்த மனிதனுடைய நுகம், எந்தச் சூழ்நிலையினுடைய நுகம், எந்தப் பிரச்சனையினுடைய நுகம் இருக்கிறதோ, அந்த நுகங்களை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். உன் பேருக்கு இனி வித்து விதைக்கப்படுவதில்லை. உன்னைக் குறித்து கர்த்தர் கட்டளை கொடுத்துவிட்டார். இனி உன்னைக் குறித்து கேவலமாகப் பேசி, உன் பேரைப் பழித்து உரைத்து, உன்னை மோசமாய் பேசுகிற மனிதர்களுடைய நாவுகள் அடைக்கப்பட்டுப்போகும். உன் பேருக்கு வித்து விதைக்கிற மனிதர்கள் இனி எழும்புவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்படிப்பட்டவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும், அவர்கள் அறுப்புண்டு போவார்கள்.
கர்த்தர் உனக்காக எழுந்துவிட்டார். உன்னுடைய பிரச்சனைகளைத் தீர்க்கும்படியாக, இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள், உன் வாழ்க்கையின் மலைகளின் மேல் வந்துவிட்டது. யூதாவே உன் பண்டிகைகளை ஆசரி. உன் பொருத்தனைகளைச் செலுத்து. தேவன் உனக்காக எழும்பிவிட்டார். இனி கொண்டாட்ட காலம். இனி பொருத்தனைகளைச் செலுத்துகிற காலம். உன் ஆண்டவரிடத்திலேயே நீ சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளப்போகிற பொழுது, இனி பூமியிலே உன் சமாதானத்தைப் பறிக்கிற சக்தி என்று ஒன்று இல்லவே இல்லை.
நாம் இன்றைய நாளையும், நிகழ்காலத்தையும் அவற்றிற்கான மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் மட்டுமே பார்க்கிறோம். தேவனோ, அவற்றோடு நாளையையும், எதிர்காலத்தையும் அவற்றிற்கான, உன் வாழ்வின் ஆயத்தங்களையும் தான் பார்க்கிறார். அவருடைய அந்த ஆயத்தங்கள், சில வேளைகளில் நம்முடைய நிகழ்காலத்தைத் துக்கத்தில் மூழ்கடித்து விடும். ஆனால், எதிர்காலமோ தேவனிடத்திலிருந்து நமக்கு நிரந்தரமான நிம்மதியையும், நீண்ட சந்தோஷத்தையும் நிறைவையும் சுமந்துகொண்டு, உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், நிகழ்காலம் அதற்கென்றே ஆயத்தத்தின் அடையாளமாக, துக்கத்தில் மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இரண்டு விதங்களிலே, இரண்டு மனிதர்கள், எகிப்திலே வாழப்போகிற வாழ்க்கைக்காக ஆயத்தப்பட்டார்கள். ஒருவன் யாக்கோபு. இன்னொருவன் யோசேப்பு. இவர்கள் இரண்டு பேரும் ஒருவரையொருவர் உயிருக்குயிராய் நேசித்தார்கள். ஒருவன், மகனைப் பிரிந்து வாடி கண்ணீர் விட்டான். இன்னொருவன், தகப்பனைப் பிரிந்து, அடிமையாய் அந்நிய தேசத்திலே வாழ்ந்து, வீண்பழிகளைச் சுமந்து, கட்டுகளுக்குள்ளும் சிறைக் கம்பிகளுக்குள்ளும் அடைக்கப்பட்டு, தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, வீண்பழிகளைச் சுமந்து, இன்னொரு பக்கம் கர்த்தரால் உருவாக்கப்பட்டான். இங்கே தகப்பனுடைய கண்ணீர் சிந்தப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே மகனுடைய கண்ணீர் சிந்தப்பட்டுக் கொண்டிருந்தது. இரண்டு பேரும் தாங்கள் வாழப்போகும் எகிப்தின் மேன்மையான வாழ்க்கைக்கு, தங்களைத் தாங்களே அறியாமல், வேதனைகளையெல்லாம் அனுபவித்தார்கள். இந்த இரண்டு பேரும் தான் பிற்பாடு மேன்மைப்பட்டார்கள். எப்படியென்றால், ஒருவன் சிறைச்சாலையில், கால்கள் கட்டப்பட்டும், வீண்பழிகளைச் சுமந்தும், எகிப்திலே அடிமையாய் கிடந்தான். அவன் எகிப்திற்கு அதிபதி ஆனான். அவன் அதிபதி ஆனதின் மேன்மையில் தானும் பங்கு பெறும்படி, தகப்பனாகிய யாக்கோபு கானானிலிருந்து புறப்பட்டு வந்து, பார்வோனையே ஆசீர்வதிக்கும் அளவுக்குக் கனத்தைப் பெற்றான்.
இன்று உன் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் பிரிவும், நீ நேசிக்கிற மனிதர்கள் உன்னை விட்டுப் பிரிந்து நிற்பதும், தேவனுடைய சித்தம். இதனை தேவன் தான் உனக்காகச் செய்து முடித்தார். பிரிக்க வேண்டிய நேரத்தில் பிரிப்பதும், சேர்க்க வேண்டிய நேரத்தில் சேர்ப்பதும், இருவரையும் பிரித்து, இருவரையுமே தனித்தனியாக உருவாக்கி, இருவரும் உருவாக்கப்பட்ட பிறகு அவர்களை ஒன்றாகச் சேர்ப்பதும் தேவனுடைய சித்தம். நாம் அவருடைய கரத்தின் கிரியைகள். இது நம்முடைய நன்மைக்கென்றே, அவரால் செய்யப்படுவது. அவருடைய நன்மைக்காக அல்ல. உன் வாழ்வு முடிவு பரியந்தம் சமாதானமாக இருக்க வேண்டுமென்றால், இது நடந்தே தீர வேண்டும்.
உருவாக்கப்படாத ஒரு மனிதன், உடைக்கப்படாத ஒரு மனைவி, உடைக்கப்படாத ஒரு கணவன், உடைக்கப்படாத பிள்ளைகள், ஒன்றுபட்டு வாழ முடியாது. அப்படியே வாழ்ந்தாலும், அவர்களுடைய வாழ்வில் சமாதானத்தை அவர்கள் அனுபவிக்க முடியாது. தனித்தனியே தேவன் வைப்பார். உடைப்பார். உருவாக்குவார். பணி தீர்ந்த பூரணமான கற்களாகத் தனித்தனியே மாற்றுவார். பணி தீர்ந்த கற்களெல்லாம் பின்பு ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மாளிகையாக மாற்றப்படும்.
கற்கள் என்பவை உடைக்கப்படும்போது, தனித்தனியாகத்தான் உடைக்கப்படும். ஆனால் உடைக்கப்பட்ட கற்களெல்லாம், எவையெல்லாம் ஒரே அளவில் காணப்படுமோ, அவை எல்லாம் ஒன்று சேர்க்கப்படும். ஒரே அளவாகக் காணப்படாத கற்கள், புறந்தள்ளப்பட்டுப்போகும். உன் வீடு கட்டப்பட வேண்டுமென்றால், உன் குடும்ப வாழ்வு கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றால், உன் குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவரும் உடைக்கப்பட வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாக இருக்கிறது.