பொன்னாலான தலையான பாபிலோனின் கதை! நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்

இவ்வளவு பயங்கரமான சுவர்களை இடித்துக்கொண்டு நுழைவதோ, கன்னமிட்டு நுழைவதோ முடியாத காரியம். எனவே இதற்கு மாற்று வழியை யோசித்த மேதிய – பெர்சிய படைகள், கோட்டைக்குள் நடுவாய் பாயும் யூப்ரடீஸ் ஆற்றின் போக்கிற்கு எதிராக ஆழத்தில் உலோகக்கட்டிகளை இறக்கினர். நீரோட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, திசை திருப்பப்பட்டு கோட்டைச்சுவர்கள் பக்கமாய் திரும்பியது. இதனால் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட, அந்த ஆற்றுப்பாதையைப் பயன்படுத்தி கோட்டைச்சுவருக்குக் கீழே நகரத்திற்குள் நுழைந்தனர்.
– ASV YESHURUN

பாபிலோன். உலக அதிசயங்களுள் ஒன்றாக இருந்த தொங்கும் தோட்டத்திற்கு புகழ்பெற்ற பழம்பெரும் நகரம். செல்வச்செழிப்பின் அடையாளமாக விளங்கிய இந்நகரத்தை மையமாகக் கொண்டு, கல்தேய சாம்ராஜ்ஜியமும் அதனைத்தொடர்ந்து மேதிய – பெர்சிய சாம்ராஜ்ஜியமும் எழுச்சி பெற்றன.

கி.மு. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹம்முராபி என்ற அரசனின் காலத்தில்தான் பாபிலோன் ஒரு தலைநகராக உருப்பெற்றது. ஹம்முராபியின் வழித்தோன்றலாகிய இரண்டாம் நேபுகாத்நேச்சார் எனும் கல்தேய இன மன்னனின் ஆட்சியில்தான், பாபிலோன் பெரும் புகழ்பெற்று பொன்னகராக விளங்கியது. கல்தேய மன்னர்களின் தலைமையில் மீண்டும் எழுச்சிபெற்ற பாபிலோன் சாம்ராஜ்யத்தை NEO BABYLONIAN EMPIRE என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் வலுவான மூன்று இராஜாக்கள் நேபுபொலாசார், நேபுகாத்நேச்சார், மொரொதாக் என்பவர்கள்.

உலக அளவில் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்ற தொங்கும் தோட்டங்களும், பிரம்மாண்டமான இஷ்டார் வாசலும் இந்த மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் தான் கட்டப்பட்டன. அதோடு, பாபிலோன் என்ற ஓர் நகர ராஜ்யம், பிற நாடுகளையும் உள்ளடக்கி சாம்ராஜ்யமாக மாறியதும் இவனுடைய ஆட்சிக்காலத்தில் தான் எனலாம்.

இப்படி உலகம் வியக்க ஓர் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மன்னன் நேபுகாத்நேச்சார், ஒருநாள் தன் தூக்கத்தில் வித்தியாசமான கனவு ஒன்றைக் கண்டான். அது அவனுக்குள் கலக்கம் ஏற்படுத்த, தேசத்தின் சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் வரவழைத்து, தான் கண்ட கனவையும் அதன் அர்த்தத்தையும் தெரிவிக்கச் சொன்னான். அவர்களால் அது கூடாமற்போகவே, மன்னனிடமிருந்து தேசத்தின் எல்லா ஞானிகளும் சாஸ்திரிகளும் கொல்லப்பட வேண்டுமென்கிற ஆணை பிறந்தது.

தானியேல் 2:5 ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.

இந்நிலையில், மன்னனின் இந்தக் கனவுக் கலக்கமும், கோபக் கொலையாணையும், இஸ்ரவேலில் இருந்து பாபிலோனுக்கு சிறையிருப்பாய் கொண்டு வரப்பட்ட இளம் ஞானி தானியேலுக்கும் அவனது தோழர்களுக்கும் தெரியவந்தது. தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள தேவனாகிய கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய்தார்கள். தொடர்ந்து, இரவு வேளையில் மன்னன் நேபுகாத்நேச்சார் கண்ட கனவும் அதன் அர்த்தமும், தானியேலுக்கு தரிசனம் மூலம் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது. தானியேல் மன்னன் கண்ட கனவையும் அவனிடத்தில் சொல்லி, அதன் அர்த்தத்தையும் அவனுக்கு விவரித்தான்.

தானியேல் 2:31-35

31 ராஜாவே, நீர் ஒரு சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. 32 அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் கைகளும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், 33 அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாய் இருந்தது.

34 நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டு வந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.

35 அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடை காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப் போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக் கொண்டு போயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியை எல்லாம் நிரப்பிற்று.

நேபுகாத்நேச்சாரின் கனவில் வந்த பயங்கரமான சிலையின் பல்வேறு உலோகப் பகுதிகளும், அன்றைய பாபிலோன் தொடங்கி, உலகில் அடுத்தடுத்து எழும்பப்போகும் பல்வேறு ராஜ்யங்களைக் குறிக்கின்றன என்பதே தேவன் தானியேல் மூலம் கொடுத்த விளக்கம்.

சிலையின் பொன்னாலான தலைப்பகுதி, கனவைக் கண்டு கலங்கிய நேபுகாத்நேச்சாரையே குறிக்கிறது என்பதை தானியேல் மூலம் நேரடியாகவே தெளிவுபடுத்திய தேவன், அடுத்தடுத்து வரப்போகும் மற்ற சாம்ராஜ்யங்களின் தன்மைகளையும் வெளிப்படுத்தினார்.

தானியேல் 2:38 சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.

பொன்னாலான தலை: பாபிலோன் பேரரசு

…….பொன்னான அந்தத் தலை நீரே. (தானியேல் 2:38)

நேபுகத்நச்சார் கண்ட கனவில் நேபுகத்நச்சாரை தேவன் ஏன் பொன்னான தலையாகக் குறிப்பிடுகிறார்? அதற்கான பின்னணி என்ன?

இன்று நமக்கெல்லாம் அரிதான ஒன்றாகத் தெரிகிற தங்கமானது, கல்தேயர் தலைநகரான பாபிலோனில் கோட்டைகள் துவங்கி கோவில்கள் வரைக்கும், மூல விக்கிரகங்கள் துவங்கி தோப்பு விக்கிரகங்கள் வரைக்கும், எங்கும் எதிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பாபிலோனின் தங்கத்தில் 80 சதவீதம் அதன் கோயில்களில் தான் இருந்தது. ஆம். அங்கே கோயில்களில் இருந்த விக்கிரகங்களில் பெரும்பாலானவை பொன்னால் செய்யப்பட்டவை.

மிரள வைக்கும் மெரொதாக் பற்றிய தீர்க்கதரிசனம்!

பாபிலோன் பிரதான கோயில் அருகே இருந்த மார்துக் சிலையானது, தன் மொத்த எடை முழுக்க தங்கமாகவே இருந்திருக்கிறது. சரி, அதன் மொத்த எடை தான் என்ன என்றால், 40,000 பவுண்டு என்கிறது எடை மேடை முடிவுகள்.

இந்த |மார்துக்| என்ற பாபிலோனிய தெய்வத்தைத்தான் தமிழ் வேதாகமம், |மெரொதாக்| எனக் குறிப்பிடுகிறது. பாபிலோன் பிடிக்கப்பட்டுக் கொள்ளையிடப்படும் காலத்தில், இந்த மெரொதாக் எனும் 40 ஆயிரம் பவுண்டு எடையுள்ள சிலையானது, அதன் தங்கத்துக்காக நொறுக்கப்படும் என்பதை நம் தேவன் எரேமியா தீர்க்கதரிசியின் மூலமாக முன்னறிவித்திருந்தார். தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட காலம் கி.மு.710. அது நிறைவேறிய காலம் கி.மு.539. இடையில் 171 வருடங்கள். அதாவது, மெரொதாக் சிலை நொறுக்கப்படும் என்பதை தேவன் 171 வருடங்கள் முன்பாகவே தம் தீர்க்கதரிசி மூலம் அறிவித்திருந்தார். அதாவது, பாபிலோனை உலக அரங்கில் உயர்த்திய நேபுகாத்நேச்சார் வரலாற்றில் வெளிப்படுவதற்கு முன்பாகவே இந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது.

எரேமியா 50:2 பாபிலோன் பிடிபட்டது, பேல் வெட்கப்பட்டது, மெரொதாக் நொறுங்குண்டது, அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது, அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள், இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம் பண்ணுங்கள்.

மேற்கண்ட வசனத்தில் மெரொதாக் என்ற மார்துக் பற்றி மட்டுமே சொல்லப்படவில்லை. |சிலைகள்…. விக்கிரகங்கள்….| என்று மேலும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மெரொதாக் அதன் முழு எடையும் தங்கமாக இருந்ததால் நொறுக்கப்பட்டது. மற்ற விக்கிரகங்களும் ஏன் நொறுக்கப்பட்டன? விடை இதோ…

மார்துக் மட்டுமல்ல. பாபிலோனின் வடக்கு வாசலிலுள்ள இஷ்டார் கோயிலில் இருந்த இஷ்டார் எனும் பெண் தெய்வத்தின் சிலையின் உயரம் 18 அடி. எடை 35000 பவுண்டுகள். மார்துக் போலவே இந்த மொத்த எடையும் தங்கம் தான். இதுதவிர சுமார் 217 சிறு சிலைகளும் இதே கோயிலுக்குள் இருந்திருக்கின்றன. அவை யாவும் கூட 100 சதவீதம் பொன் தான். மிகப்பெரிய மார்துக் மற்றும் இஷ்டார் கோயில்கள் மட்டும் தான் என்றில்லை. நடைபாதைக் கோயில்களில் கூட பொன்னாலான சிலைகள் இருந்திருக்கின்றன.

இந்த சர்வம் தங்கமயம் தான் தேவன் தீர்க்கதரிசனமாய் முன்னறிவித்தது போலவே, பாபிலோனின் தெய்வச்சிலைகளை, விக்கிரகங்களை எல்லாம் அதன் எதிரிகள் தரையிலே மோதியடித்து உடைப்பதற்கும் நொறுக்குவதற்கும் காரணமாக இருந்தன.

இதுபோதாதென்று சுத்தப் பொன்னாலான மேடை ஒன்றும் இதே கோயிலுக்குள் இருந்ததாம். அதன் நீளம் 40 அடி. அகலம் 15 அடி. இப்படி கோயில்களும், அரண்மனையும் கொண்டிருந்த பொன்னையெல்லாம் ஒன்று கூட்டினால் ஒரு பெரிய மலையளவு வரும். அதனால் பொன் வேலை செய்யும் கொல்லர் மட்டும் அங்கே 40,000 பேர் இருந்தார்களாம்.

தெய்வச் சிலைகளிலெல்லாம் தங்கம் இருக்கவேண்டுமென்பது மரபு என்பதால், முழுவதுமாய் தங்கத்தில் செய்யாவிட்டாலும் சிலைகளின் நெற்றி, நெஞ்சு ஆகிய பகுதிகளை மட்டும் தங்கத்தாலும் ஏனைய பகுதிகளை வேறு உலோகங்களாலோ மரத்தாலோ செய்திருக்கிறார்கள்.

உறுதிப்படுத்தும் அகழ்வாராய்ச்சியாளர்கள்!

இப்படிப்பட்ட சிலைகள் எல்லாம், பாபிலோனிய கோயில்களை ஆராய்ந்த டாக்டர்.வெர்னர் கெல்லர் என்பவரால் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் சிலைகளுக்குள் தங்கம் என்ன, தகரம் கூட இல்லை. அதுமட்டுமில்லை. அவற்றுள் பெரும்பகுதி சிலைகள் மதக்கலவரத்தில் அகப்பட்ட ஆள் மாதிரி கையில்லாமல், காலில்லாமல் ஊனமுற்றிருந்தன. பல சிலைகளுக்கு நெஞ்சு இல்லை. நெற்றியும் இல்லை. தங்கத்திற்காக சிலைகள் சூறையாடப்பட்டு, தரையில் மோதி உடைக்கப்பட்டு இருந்தன.

இந்த தீர்க்கதரிசனங்கள், கி.மு. 710-ல் உரைக்கப்பட்டவை. அதாவது நேபுகாத்நேச்சார் பாபிலோனை ஆள்வதற்கு முன்பாகவே. ஆனால், அவனது காலத்துக்குப் பிறகு, பற்பல வருடங்களுக்குப் பிறகு இவ்வசனங்கள் அட்சர சுத்தமாய் நிறைவேறியிருக்கின்றன.

தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிய வரலாறு!

தேவன் பாபிலோனை அழிப்பதையும், அதன் விக்கிரகங்களை நொறுக்குவதையும் குறித்து மட்டுமே தீர்க்கதரிசனமாய் அறிவிக்கவில்லை. பாபிலோனை யாரைக்கொண்டு அழிப்பேன் என்பதையும் தீர்க்கதரிசனமாய் முன்னறிவித்திருந்தார். அதுவும் வரலாற்றில் அப்படியே நிறைவேறியது.

இதோ நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; (ஏசாயா 13:17)

கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்க வேண்டுமென்பதே அவருடைய நினைவு; (எரேமியா 51:11)

சரி. சிலைகளில் இருந்த தங்கங்களை எல்லாம் கொள்ளையிட்டவர்கள் யார்? கி.மு. 539-ல் மேதிய – பெர்சிய ராஜ்ஜியங்களின் படை பாபிலோனைப் பிடித்தபோது அந்நகரம் முதன்முறையாகக் கொள்ளையிடப்பட்டது. அடுத்து, அலெக்சாண்டர் மேதிய-பெர்சிய சாம்ராஜ்யத்தை வீழ்த்தி பாபிலோனை பிடித்தபோது, இரண்டாவது முறையாகக் கொள்ளையிடப்பட்டது.

ஏசாயா 21:9 இதோ ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான், பாபிலோன் விழுந்தது, விழுந்தது. அதின் விக்கிரக தேவர்களை எல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான்.

அலெக்சாண்டரின் சாம்ராஜ்ஜியத்தை அவனுடைய நான்கு தளபதிகளும் நான்காக வகுத்துக்கொண்டு ஆண்டபோது, ஆறுமுறை பாபிலோன் கொள்ளையிடப்பட்டது. பாபிலோன் கொள்ளையிடப்பட்ட ஒவ்வொரு முறையும் கோயில்களும் சிலைகளுமே தாக்குதலுக்கு இலக்காகின. காரணம் தங்கம்.

கஜினி சோமநாதபுரத்து கோயில் மேல் படையெடுத்து கொள்ளையிட்ட வரலாற்றைப் போல, ஒவ்வொரு முறையும் பாபிலோன் சிலைகள் உடைக்கப்பட்டு தரையில் தள்ளப்பட்டு தங்கம் எடுக்கப்பட்டது. இவையெல்லாம் வரலாறு காட்டும் உண்மை. ஆனால், அந்த வரலாறு இந்த தீர்க்கதரிசன வசனங்களின் நிறைவேறுதலாகவே நிகழ்ந்து முடிந்திருக்கிறது.

ஏசாயா 51:52 கர்த்தராகிய நான் பாபிலோனின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்.

எரேமியா 51:47 ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும், அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்து கிடப்பார்கள்.

| பாபிலோனின் வீழ்ச்சியின்போது பெல்ஷாத்சார் |

கி.மு. 539-ஆம் ஆண்டு. பாபிலோனில் வருடந்தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. மக்கள் எல்லாம் நகரத்தின் மத்தியப்பகுதியில் கொண்டாட்டத்தில் இருந்தார்கள். மன்னன் பெல்ஷாத்சாரோ தன் பிரபுக்கள் ஆயிரம் பேருக்கு பெரிய விருந்தொன்றை வைத்துக்கொண்டிருந்தான்.

| தானியேல் 5:1-6 | 1 பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம் பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான். 2 பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். 3…. அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும், அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். 4 அவர்கள் திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள். 5 அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான். 6 அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.

பெல்ஷாத்சாரின் தந்தை நேபுகாத்நேச்சாரின் ராஜ்ஜியத்தில் முக்கியமான அதிகாரியும் அவனது ஞானிகளுக்குள் பிரதானமானவனுமாயிருந்த தானியேல் தீர்க்கதரிசி வரவழைக்கப்பட்டான். நேபுகாத்நேச்சாரின் கனவுக்கலக்கத்திற்கு அர்த்தம் சொன்னவன், அவனது மகனின் கையுறுப்புக் கலக்கத்திற்கும் அர்த்தம் சொன்னான்.

தானியேல் 5:24 எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.

| மெனே | முடிவுக்கு வந்த கல்தேயர் சாம்ராஜ்ஜியம் |

தானியேல் 5: 26 இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்ஜியத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,

வசனம் வரலாற்றில் நிறைவேறிய விதம்: தானியேல் இந்த வார்த்தைகளை பெல்ஷாத்சாரிடத்தில் விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்த அதே வேளையிலேயே, மேதிய – பெர்சிய படைகள், பாபிலோனுக்குள் நுழையும் தங்கள் அதிதீவிர முயற்சியில் வெற்றிபெறத் தொடங்கி இருந்தார்கள். அவர்கள் பாபிலோனுக்குள் நுழைவதில் வெற்றி அடைந்து விட்டார்கள், அன்று இரவே பெல்ஷாத்சாரின் ராஜ்ஜியத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்போகிறார்கள் என்பதால்தான், தேவன் ‘முடிவுண்டாக்கினார்’ என்ற செய்தியைக் கையுறுப்பின் மூலம் எழுதியிருந்தார்.

ஆம். செல்வச்செழிப்புமிக்கக் கனவுநகரமான பாபிலோனைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கி.மு. 539-ல் கோரேஸ் தலைமையில் மேதிய – பெர்சியர்கள் (பாரசீகர்கள்) பாபிலோனை முற்றுகையிட்டனர். பாபிலோனின் தேசிய திருவிழா காலம். கல்தேயர்கள் எல்லாம் நகரத்தின் மையத்திலும், சடங்குகள் என்ற பெயரில் பலவித அருவருப்பான கொண்டாட்ட முறைமைகளிலும் மூழ்கியிருக்கும் நேரம். பாபிலோனைப் பிடிக்க இதுதான் சரியான தருணம் எனத் திட்டம் தீட்டி வந்திருந்தனர் பக்கத்து ராஜ்ஜியங்களான மேதிய-பெர்சியர்கள்.

ஆனால், அவர்களுக்கு எதிராக பாபிலோன் கோட்டையின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. சரி. கோட்டைச்சுவர் மேல் ஏறலாம் இடிக்கலாம் என்றால், வானத்துக்கும் பூமிக்குமாய் அத்தனை அடி உயரத்தில் நிற்பதை இடிப்பதென்பதும் சாமான்ய காரியமில்லை. வெளிக்கோட்டைச் சுவர் உயரம் மட்டும் சுமார் 300 அடி. அகலம் 87 அடி. இதை மிகவும் கடினப்பட்டு தகர்த்தாலும் கூட உள்ளே இதைவிட வலுவான மற்றொரு சுவர்.

இவ்வளவு பயங்கரமான சுவர்களை இடித்துக்கொண்டு நுழைவதோ, கன்னமிட்டு நுழைவதோ முடியாத காரியம். எனவே இதற்கு மாற்று வழியை யோசித்த மேதிய – பெர்சிய படைகள், கோட்டைக்குள் நடுவாய் பாயும் யூப்ரடீஸ் ஆற்றின் போக்கிற்கு எதிராக ஆழத்தில் உலோகக்கட்டிகளை இறக்கினர். நீரோட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, திசை திருப்பப்பட்டு கோட்டைச்சுவர்கள் பக்கமாய் திரும்பியது. இதனால் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட, அந்த ஆற்றுப்பாதையைப் பயன்படுத்தி கோட்டைச்சுவருக்குக் கீழே நகரத்திற்குள் நுழைந்தனர்.

அதற்குப்பிறகு நகரத்தைக் கைப்பற்றுவதொன்றும் அவர்களுக்குக் கடினமாக இருக்கவில்லை. பெரும்பான்மை பாபிலோனியர்கள் நகரத்தின் மையத்தில் இருக்க, புறநகர்ப்பகுதிகளை எளிதாக வென்று, நகரின் மையப்பகுதிக்குக்கும் நகர்ந்தது. அவர்கள் இவை எதையும் அறியாதவர்களாக எவ்வித ஆயத்தமில்லாமல் இருந்ததாலும், கேளிக்கைகளில் மூழ்கி இருந்ததாலும் பாபிலோன் மொத்தமாக பெர்சியர்களால் பிடிக்கப்பட்டது. நியோ-பாபிலோனிய பேரரசு எனப்படும் பெல்ஷாத்சார் தலைமையிலான ‘கல்தேயர்களின் சாம்ராஜ்ஜியத்திற்கும் தேவனுடைய வார்த்தையின்படியே முடிவு உண்டானது.

கோட்டையின் ஒட்டுமொத்தக் கதவுகளும் பூட்டப்பட்டுவிட்ட பிறகு, எவராலும் அசைக்க முடியாத தங்கள் கோட்டைச்சுவரைத் தகர்த்துக்கொண்டு, ஒருவராலும் நகரத்திற்குள் நுழைந்துவிட முடியாது என்ற ஏற்கத்தக்க நம்பிக்கையுடன் அவர்களெல்லாம் நகரத்தின் மையத்தில் குவிந்துவிட்டார்கள். கோட்டைச்சுவர்களை மட்டுமல்ல. கோட்டை வழியாகப் பாய்ந்துசெல்லும் யூப்ரடீஸ் நதியையும் அவர்கள் தங்கள் பலமாகவும் பாதுகாவலாகவும் பார்த்திருப்பார்கள் போல! எப்பொழுதும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியின் வழியாகவா படையெடுத்து வர முடியும் என நினைத்திருப்பார்கள் போல! ஆனால், அந்த ஆற்றைக்கொண்டுதான் மேதியர்கள் தங்கள் வெற்றிகணக்கையே தொடங்கியிருந்தார்கள்.

ஆனால், இது எதையும் ராஜா அறியாதவனாக இருந்தான். தானியேலும் தேவனுடைய ஆவியினாலே கையுறுப்பு எழுதிய வார்த்தைகளின்படி, பெல்ஷசாரின் ராஜ்ஜியம் மேதிய – பெர்சியருக்குக் கொடுக்கப்பட்டது என்று சொன்னானே ஒழிய, அவை அன்று இரவே பாபிலோனைக் கைப்பற்றப்போகின்றன என்பதை அவனும் அறிந்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கையுறுப்பு எழுதியதைப் படித்து தானியேல் சொன்னபடியே, பாபிலோன் அன்று இரவே மேதிய – பெர்சிய சாம்ராஜ்ஜியங்களின் கீழ் வந்தது. பாபிலோனுக்கு மேதியனாகிய தரியு ராஜாவானான். கோரேசும் அதன் மீது அதிகாரமுடையவனாக இருந்தான்.

| தெக்கேல் | கொலை செய்யப்பட்ட பெல்ஷாத்சார் |

தானியேல் 5:27 தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும்,

தேவனுடைய தராசிலே பெல்ஷாத்சார் நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டதன் விளைவு, அன்று இரவே அவன் கொலை செய்யப்பட்டான்.

தானியேல் 5:30 அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். 31 மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.

| பெரேசின் | இரண்டாய் பிரிக்கப்பட்ட பாபிலோன் |

தானியேல் 5:28 பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.

தானியேல் 5:31 மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.

இதோ நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; (ஏசாயா 13:17)

கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்க வேண்டுமென்பதே அவருடைய நினைவு; (எரேமியா 51:11)
5:30-31)

| பாழாய்ப்போன பாபிலோன் |

எரேமியா 51:55 கர்த்தர் பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியப்பண்ணுவார்.

ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும். (ஏசாயா 13:19)

எரேமியா 50:13 கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும், பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல் போடுவான்.

எரேமியா 50:23 சர்வபூமியின் சம்மட்டி எப்படி முறிந்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படி பாழாய்ப்போயிற்று!

எரேமியா 51:29 அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும், பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்.

• | குடியற்றுப்போன பாபிலோன் |

எரேமியா 51:37 அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தாபரமும், பாழும், ஈசல் போடப்படுதலுக்கு இடமுமாய்ப்போகும்.

பாபிலோன் இப்போது மனிதன் ஒருவனும் குடியிராத மண்மேடாகவே வெறுமையாய் காட்சியளிக்கிறது. யூப்ரடீஸ் – டைகிரீஸ் எனும் இருபெரும் ஆறுகளுக்கிடையே அமைந்துள்ள பாபிலோன் இன்று பாலைவனம் போல் பரிதாபமாய் காணப்படுகிறது. வாய்கால் தண்ணீர் ஓடும் கிராமங்கள் கூட விவசாயம் செய்ய, பாபிலோனிலேயோ வெறும் பாலைவனத் தாவரங்களாகிய கற்றாழையும், முள், குருக்கு போன்றவையும் தான் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட பாழும் பகுதிகள் வலுசர்ப்பங்களின் வாழிடமாகத்தான் இருக்கும் என்பதில் ஆச்சரியமொன்றும் இல்லையே!

|1974-இல் இப்பகுதியை ஆராய்ந்த டி.ஜே.வைஸ்மேன் சொல்கிறார், பாபிலோனில் இன்று மண்ணில் ஒருவித அமிலத்தன்மை படர்ந்து காணப்படுகிறது. காற்றடித்து மணல் தூசி நம்மீது விழுந்தால் கூட சிறு கொப்புளங்கள் தோன்றும் வாய்ப்புள்ளது. எனவே, இது மனிதர் வசிக்க ஏற்றதாயில்லை. அமில மண் ஆகவே, இங்கு புல் கூட முளைப்பது கடினம்.|

அதன் செழுமையினாலும், பெருமையினாலும் ’மகா பாபிலோன்’ என்றழைக்கப்பட்ட நகரம். அப்படிப்பட்ட நகரம், வெகு வளமாய் கோலோச்சிய காலத்திலேயே அது எதிர்காலத்தில் இப்படித்தான் பாழாய்க்கிடக்கும் என்பதைக் நம்முடைய தேவன் தான் எவ்வளவு துல்லியமாய் தம் தீர்க்கதரிசகள் மூலம் அறிவித்திருக்கிறார் பாருங்கள்!

எரேமியா 51:43 பாபிலோன் வறண்டதும், வனாந்திரமுமான பூமியுமாய் ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுஷனும் கடவாததுமான நிலமுமாகும்.

ஏசாயா 13:20 இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை. அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.

அன்று கி.மு.வின் காலத்தில் நம் தேவனாகிய கர்த்தர் தீர்க்கதரினமாய் சொல்லிய வார்த்தைகளுக்குத்தான் இன்று கி.பி.யின் காலத்தில் அகழ்வாராய்ச்சியாளர்கள் தம் ஆராய்ச்சிகள் மூலம் சாட்சி பகர்கிறார்கள். சொன்னது யார்? சத்திய தேவனாயிற்றே! அவருடைய வார்த்தை எப்படிப்பட்டது? சத்திய வார்த்தையாயிற்றே! நீர்த்துத்தான் போகுமா? இல்லை நிறைவேறாமல் தான் போகுமா?

சதாம் உசேனின் முயற்சி!

….பாபிலோனை அழிக்க வேண்டுமென்பதே அவருடைய நினைவு; (எரேமியா 51:11)

தேவனுடைய நினைவின்படியும் தீர்மானத்தின்படியும் தீர்க்கதரிசனங்களின்படியும் அழிக்கப்பட்டு, பல நூற்றாண்டுகளாக பாழும் வெளியாய் கிடக்கிற பாபிலோனை மீண்டும் எடுப்பித்துக்கட்டும் பணிகளில் இறங்கினார் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன். மேலும், தன்னை நேபுகாத்நேச்சாரின் பேரன் எனவும் அறிவித்துக்கொண்டார் அவர். அப்படி அவர் அறிவித்துக்கொண்டதில் ஒன்றும் தவறு இல்லை.

ஏனெனில், ஈராக் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களில் பலர், பொதுவாக பாபிலோனிய பேரரசன் நேபுகாத்நேச்சாரின் கல்தேய இனத்தைச் சார்ந்தவர்கள் தான். பிற்பாடு அவர்கள், கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் எழும்பிய இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள். ஆனால், அதற்கும் முன்னால் அவர்கள் தங்கள் கல்தேய இனத்தின் பல தெய்வ வழிபாட்டிலும், பலவிதமான சிலை வழிபாட்டு முறைமைகளிலும், அவை சார்ந்த சடங்குகளிலும் மூழ்கிக்கிடந்தவர்கள் தான். ஆக, தழுவிய மதத்தால் இஸ்லாமியரானாலும், தலைமுறை தலைமுறையான இனத்தால் கல்தேயர்களே.

எந்த மதத்தில் இருந்தாலும் யாருக்குத்தான் தம் மொழி மீதும் தம் இனத்தின் மீதும் ஈடுபாடும் பற்றுதலும் இல்லாமற்போகும்! அதிலும் சதாம் உசேன் போன்ற சர்வாதிகாரிகளின் அஸ்திபாரங்களே இவை போன்ற இனம், மொழி மீதான அதீத ஈடுபாடுகளின் மீதே கட்டப்பட்டிருக்கும். போன்ற பணிகளும் நடந்தன. ஆனாலும், அவரால் அதனை முடிக்க முடியவில்லை. மாறாக, அவர் தான் பரிதாபமாக முடிந்துபோனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *