,

அணு ஆயுத’ பயன்பாடும் வெளிப்படுத்தின விசேஷ தீர்க்கரிசனமும்!!


அணுசக்தி. ஆக்க சக்தியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆல்ஃப்ரெட் நோபல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, மனித இனத்திற்கே அச்சுறுத்தலாய் மாறிய ஓர் அழிவு சக்தி. இந்தச் சக்தியைப் பயன்படுத்தி தான், ஆயுதங்களில் எல்லாம் பயங்கரமானவையான அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டன.

இந்த அணுகுண்டுகளையும் விட மூவாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகள், இன்று உலகின் பல நாடுகளிடம் இருக்கின்றன. இவை ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டால், உலகத்தையே ஒரு சில நொடிப்பொழுதுகளில் அழிக்க வல்லவை.

மீண்டுமொரு உலக யுத்தம் மூண்டால், அது அணு ஆயுத யுத்தமாகவே இருக்குமென்பதும், உலகத்தின் அழிவில் அணு ஆயுத யுத்தங்களுக்கு மிக முக்கியப் பங்கிருக்கப்போகிறது என்பதும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகளின் அறைகூவல் ஆகும்.

அணு ஆயுதங்களால் இனி வரும் உலகத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துகளை விஞ்ஞானிகள் எச்சரித்தது, அவை ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் ஏற்படுத்திய பேரழிவை கண்ட பிறகுதான்; ஆனால், சத்திய வேதமான பைபிளோ, அணு ஆயுதங்களால் உண்டாகும் அழிவு எப்படிப்பட்டதாக இருக்குமென்பதை 1918 வருடங்களுக்கு முன்பே சபைக்கு முன்னறிவித்துவிட்டது.

அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்திய இரண்டாம் உலக யுத்தம்

அணுகுண்டு என்றும் ஓர் ஆயுதம் இருக்கிறது என்பதை உலகம் அறிந்துகொண்டதே, இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவில்தான். இந்த யுத்தத்தில் அலைஸ் (ALLIES) மற்றும் ஆக்சிஸ் (AXIS) என்ற பெயர்களில் பத்து நாடுகள் யுத்தக்களம் கண்டன. அலைஸ் எனும் ‘கூட்டாளிகள் அணி’யில் பிரிட்டன், ப்ரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, சீனா மற்றும் பிரிட்டன் இந்தியா (பிரிட்டிஷ் இந்தியா) ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன. ஆக்சிஸ் எனும் அச்சு நாடுகள் அணியில், யுத்தம் துவங்குவதற்குக் காரணமான ஜெர்மனியுடன் இத்தாலி கைக்கோர்த்தது. இதே அணியில், ஏற்கெனவே சீனாவுடன் இரண்டு வருடங்களாக யுத்தம் செய்துகொண்டிருந்த ஜப்பானும் இணைந்தது.

இருபெரும் தலைகள் இறந்த ஏப்ரல் இறுதி!

1939, செப்டம்பர் 1-ஆம் தேதி சிறிய அளவில் துவங்கிய இந்த யுத்தம், அடுத்தடுத்த ஆண்டுகளில், பல நாடுகள் பங்களிப்புடன் உலக யுத்தமாக மாறி, 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்படி, 1945-லும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த வருடத்தின் ஏப்ரல் மாதம், கூட்டாளிகள் அணிக்கும் உலகத்திற்கும் அடுத்தடுத்த நற்செய்திகளை வைத்திருந்தது. அந்த மாதத்தின் 28-ஆம் தேதியில், இத்தாலியின் சர்வாதிகாரி பெனிட்டோ முஸ்ஸோலினி சொந்த நாட்டவர்களாலேயே கொல்லப்பட, 30-ஆம் தேதியில், ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் யுத்தத் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார். ஜெர்மனியும் இத்தாலியும் எவ்வித நிபந்தனையுமில்லாமல் கூட்டாளிகள் அணியிடம் சரணடைந்தன.

சரணடைவை நிராகரித்து யுத்தம் செய்த ஜப்பான்!

ஆக்சிஸ் அணியில் அங்கம் வகித்த மூன்று நாடுகளில், இரண்டு நாடுகளின் இருபெரும் தலைவர்களும் மரணமடைந்து, இரு நாடுகளும் சரணடைந்துவிட்டதால், யுத்தம் கிட்டத்தட்ட முடிவுக்கே வந்துவிட்டது. ஆனால், ஜப்பான் மட்டும் தொடர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டது. ஜீலை மாதம், பிரிட்டன் கூட்டு நாடுகள், ஜப்பானை எவ்வித நிபந்தனையும் இன்றி சரணடைய அழைத்தன. அன்றைய ஜப்பான் அரசோ அந்த அழைப்பை நிராகரித்துவிட்டது.

எதிர்பாராமல் இறங்கிய ’அணு இடிகள்’

அதனைத் தொடர்ந்து வந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி… காலை 8.15 மணிக்கு, அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று, ஜப்பானிய மாநகரமான ஹிரோஷிமா மீது ‘லிட்டில் பாய்’ (LITTLE BOY) எனும் அணு ஆயுதத்தை இறக்கியது. உலக வரலாற்றில் முதல் அணு ஆயுதத்தாக்குதல். குண்டு வெடித்த அந்த நொடியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 70-ஆயிரம். தொடர்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 60-ஆயிரம் பேர் வரை இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஜப்பான் அலறிக்கொண்டு சரணடையப்போகிறது என நினைத்த எதிரணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதனால் இரண்டு நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 11 மணி அளவில் FAT MAN எனும் புளுட்டோனியம் குண்டு நாகசாகி நகரத்தை நோக்கிக் களமிறங்கியது. உடனடியாக நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை 35-ஆயிரம். தொடர்ந்தும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஆயிரம் வரையாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளுக்குமான வேறுபாடுகள்:

அணு ஆயுதங்கள் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், ஹிரோஷிமா – நாகசாகி கால ஆயுதங்களும், அவற்றைத் தொடர்ந்து வந்த ஹைட்ரஜன் ஆயுதங்களும் அடிப்படையில் வேறுவேறானவையே.

பிளப்பு குண்டுகள்

ஆம். லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் ஆகியவை, FISSION BOMBS எனும் பிளப்பு குண்டுகள் வகையைச் சேர்ந்தவை. இவை யுரேனியம் மற்றும் புளுட்டோனியத்தால் உருவாக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பவுண்டுகள் எடையுள்ள வெடி மருந்துகளுடன் பற்றவைக்கப்பட்டன. இந்த எரியூட்டுதலின் விளைவாக உண்டான பெரு வெடிப்புகள், பேரழிவை உண்டாக்கும் அணுக்களை சங்கிலி தொடர் எதிர்வினையாய், பல கிலோ மீட்டர் பரப்பளவுக்குப் பிளந்துவிட்டன. அந்த அணுக்கள், ஆபத்தான அணுக்கதிர்வீச்சை பரப்பிவிட்டன. இப்படிப்பட்ட அணு நிறை அதிர்வு அலைகளால் உண்டான அதிபயங்கர ஆற்றல், ஹிரோஷிமா நாகசாகி நகரங்களை சில நிமிடங்களிலேயே தரைமட்டமாக்கியது.

வெப்ப ஆற்றல் அணுகுண்டுகள்

ஹைட்ரஜன் குண்டுகள், டிடிரியம் மற்றும் டிரிடியம் ஆகிய ஐசோடோப்களை தன் அணுக்களாகக் கொண்டவை. இந்த ஐசோடோப்கள் ஒன்றிணையும்போது வெளிப்படும் ஹீலியம் எனும் வேதிப்பொருளே, அதீத சக்திவாய்ந்த வெப்ப ஆற்றலை ஹைட்ரஜன் குண்டுகளில் சங்கிலித்தொடர் எதிர்வினையாய் பரவச்செய்கிறது. இந்த ஹைட்ரஜன் குண்டுகள் தெர்மோ நியூக்ளியர் என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகின்றன.

பூமியிலிருந்து புறப்பட்ட செயற்கை மேகங்கள்!

ஹிரோஷிமாவில் போடப்பட்ட லிட்டில் பாய் குண்டிலிருந்த வெளிப்பட்ட வெடிப்பானது, 15 கிலோ டன் ஆற்றலை வெளியிட்டது. காளான் வடிவ செயற்கை மேகம் ஒன்றையும் வானத்திற்கு சுமார் 25,000 அடி வரை அனுப்பி வைத்தது. ஃபேட் மேனோ, சுமார் 21 கிலோ எடையுள்ள ஒரு வெடிப்பை உருவாக்கியது.

அமெரிக்காவின் அதிநவீன ஹைட்ரன் குண்டு!

இவற்றோடு ஒப்பிடும்போது, அதற்குப்பிறகு அமெரிக்கா தயாரித்த, B83 எனும் அதிநவீன ஹைட்ரஜன் ஆயுதம், 1.2 மெகா டன்கள் ஆற்றல் உடையதாகவும், லிட்டில் பாயை விட 80 மடங்கு அதிக சக்திவாய்ந்ததாகவும் இருந்தது.

உலகை உலுக்கிய சோவியத் ரஷ்யாவின் ’அணு ஆயுத சோதனை’

அமெரிக்காவின் ஹைட்ரஜன் ஆயுதங்களையும் மிஞ்சி திகிலூட்டியது, 1961 ல் சோவியத் ரஷ்யாவால் சோதித்துப் பார்க்கப்பட்ட ’த்சார் பாம்பா’ (TZAR BOMBA) எனும் மிகப்பெரிய அணு ஆயுதம். 50 மெகா டன் ஆற்றலுடன் தயாரிக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் குண்டு, ஹிரோஷிமாவை முழுமையாக அழித்த லிட்டில் பாயை விட 3333 மடங்கு அதிக சக்திவாய்ந்ததாக இருந்தது.

இந்த குண்டு சோதித்துப் பார்க்கப்பட்டதன் மூலம், புறப்பட்ட ஒரு காளான் வடிவ புகை மேகமானது, ஏறக்குறைய 130,000 அடி உயரங்கள் வரையிலும் எழும்பிற்று. அது, எவரெஸ்ட் சிகரத்தை விட, நான்கரை மடங்கு மேலான உயரமாக இருந்தது. அதுமட்டுமல்ல. உலகம் முழுமைக்கும் ஒரு முறைக்கு மூன்று முறை அதிர்ச்சி அலைகளை அனுப்பி வைத்தது. இது சோதித்துப் பார்க்கப்பட்டு, சுமார் 57 வருடங்கள் ஆகிவிட்டாலும், இதுவே இன்றுவரை உலகின் மிகப்பெரியதும், மிக சக்தி வாய்ந்ததுமான அணு ஆயுதமாகக் கருதப்படுகிறது.

ஆயிரக்கணக்கில் அணுகுண்டுகள் வைத்திருக்கும் அமெரிக்கா – ரஷ்யா

இன்றைய நிலையில், இப்படிப்பட்ட அதிநவீன ஹைட்ரஜன் குண்டுகள் உள்பட 8000 அணு ஆயுதங்களைத் தன் வசம் வைத்திருக்கும் ரஷ்யா, அணு ஆயுத வல்லரசு நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அணுகுண்டுகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி, பல நாடுகளையும் அணு ஆயுத உற்பத்தி மற்றும் அவற்றிற்கான பல லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகளை நோக்கித் தள்ளிய அமெரிக்கா, 7400 குண்டுகளுடன் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது.

தற்போது உலக அளவில் இருக்கும் 16,300 அணு ஆயுதங்களில், 15400 ஆயுதங்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தான் வைத்திருக்கின்றன. மீதியான 800 குண்டுகள் மட்டுமே முறையே ப்ரான்ஸ், சீனா, யுனைடட் கிங்டம், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா மற்றும் ஈரான் நாடுகளிடம் இருக்கின்றன.

மீண்டும் ஒரு உலக யுத்தம் வந்தால், அணு ஆயுதங்களை அளவில்லாமல் சேமித்து வைத்திருக்கும் இந்த 10 நாடுகளுடைய பங்களிப்பும் இல்லாமல், அது முற்றுப்பெறாது எனலாம்.

சரி. இறுதிக்காலத்தில் இப்படி நாடுகள் மத்தியில் அணு ஆயுதப் பயன்பாடுகள் அதிகரித்திருப்பது பற்றி சத்திய வேதம் கொடுக்கும் சாட்சி என்ன?

அணு ஆயுதங்களை முன்னறிவித்த பைபிள்!

அக்கினியினாலே சுட்டெரிப்பார்கள்!

வெளி 18:8 ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.

மகா பாபிலோன் எனும் மாநகரத்திற்கு உண்டாகும் நியாயத்தீர்ப்பு பற்றி, வெளிப்படுத்தின விசேஷம் 18-ஆம் அதிகாரம் விரிவாகப் பேசுகிறது. இந்நகரம் அந்திகிறிஸ்துவின் ஆட்சிக்காலத்தில் உலகுக்கே ஓர் வணிகத்தலைநகராக விளங்கப்போகிறது.

உபத்திரவக்கால உலகைக் கெடுக்கப்போகும் இந்நகரத்திற்கு அக்காலம் முடிந்ததும் தேவன் நியாயத்தீர்ப்பைக் கட்டளை இடுவார். அப்பொழுது, அந்திகிறிஸ்துவை ஆதரிக்கும் 10 நாடுகளும் இந்த மகா பாபிலோனுக்கு எதிராக எழுந்து, அதனை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.

வெளி 17:16 நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.

மகா பாபிலோன் நெருப்பினால் தான் சுட்டெரிக்கப்படப்போகிறது என்பதை நாம் பார்த்த இந்த வசனங்கள் மூலம் அறிந்துகொண்டோம். சரி. எவ்வகை நெருப்பினால் சுட்டெரிக்கப்படுகிறது என்பதோர் கேள்வியும் எழுகிறது. ’மாம்சத்தைப் பட்சித்து’ என்ற வார்த்தை இதற்கு சாட்சி பகர்கிறது.

லேவி 10:2 அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.

அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி….

’பாழும் நிர்வாணமும் ஆக்கி…’ என்ற வார்த்தை…. மகா பாபிலோன் புற்கள், செடி கொடிகள், மரங்கள் தொடங்கி மனிதர்கள், கட்டிடங்கள், கட்டமைப்புகள் என எதுவுமே இல்லாமல் பாழும் வெறுமையுமாகப் போகுமளவுக்கு அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. ஆக, அந்நகரம் சுட்டெரிக்க மட்டும் படவில்லை. மாறாக, முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டு விடுகிறது என்பதையும் அறிந்துகொள்கிறோம்.

ஒரு முழு நகரம், அதுவும் மாநகரம். உலகமே கண்டு வியக்கப்போகிற, உலகத்துக்கே வர்த்தகத்தலைநகராய் விளங்கப்போகிற, பரிசுத்த வேதாகமத்தாலேயே ’மகா’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிற மிகப்பெரும் நகரம். ’ஒரு மணி நேரத்திற்குள்’ (IN ONE HOUR) சுட்டெரிக்கப்பட்டும் பாழும் வெறுமையாகவும் அழியப்போகிறது என்றால், இன்னும் இன்னும் செறிவூட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தெர்மோ நியூக்ளியர் வகை அணு ஆயுதங்களால் மட்டுமே, அப்படிப்பட்ட அதிவேக அழிவை மகா பாபிலோனின் மீது ஏற்படுத்த முடியும் எனலாம். இது மறுக்க முடியாத உண்மையும் கூட.

அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து

பட்சித்தல் என்ற வார்த்தைக்கு ’முழுமையாய் விழுங்கி விடுதல்’ என்று அர்த்தம். மிகுந்த உபத்திரவக்காலத்தில் அந்திகிறிஸ்து தலைமையில் எழும்பப்போகும் 10 நாடுகளும், ’மகா பாபிலோனை’ அணு ஆயுதத்தாக்குதலின் மூலம் முழுமையாகப் பூமியிலிருந்து விழுங்கிப்போடுவார்கள். ஒன்றையும் மீதியாக வைக்காமல் உண்டு விடுவதைத்தான் நாம் விழுங்கிவிட்டான் விழுங்கிவிடுவாள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவோம்.

புகை சொல்லும் பாடங்கள்:

’ஒரு மணி நேரத்திற்குள் அழிவு’ என்ற வார்த்தையை மட்டுமே வைத்து, மகா பாபிலோன் அணுகுண்டுகளினால் தான் அழிக்கப்படப்போகிறது என நான் சொல்ல வரவில்லை. அது சுட்டெரிக்கப்படுவதால் உண்டாகப்போகும் புகையின் அளவைப் பொருத்தும் கூட, அது அணு ஆயுதத்தினால் தான் அழிக்கப்படப்போகிறது என்ற கருத்தை
முன்வைக்கிறேன்.

வெளி 18:17 மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று: 18 அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,

அணுகுண்டு தாக்குதலுக்குள்ளான மகா பாபிலோன், அக்கினியில் வெந்து கொண்டிருக்கிறதையும், அதனால் உண்டாகும் புகையானது உயரமாக எழும்புகிறதையும், தூரத்திலே கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் கப்பல்களின் மாலுமிகளும், வேலையாட்களும், பயணிகளும் பார்க்கிறார்கள். இந்நிகழ்வை அவர்கள் பார்ப்பதென்னவோ தங்களுக்கு பாதிப்பு உண்டாகாத தூரத்திலிருந்து தான். ஆனாலும், நகரம் முழுமையாக அழிந்துவிட்டதை அறிந்து, ’ஒரு மணி நேரத்திலே இவள் பாழாய்ப்போனாளே!’ என அழுது துக்கித்து ஓலமிடுகிறார்கள். காரணம், நகரத்தின் பேரழிவை அழுத்தந்திருத்தமாகச் சொல்லும் வண்ணம் அடர்த்தியும் உயரமுமாகப் புறப்படும் புகை.

வெளி 18:9 அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,

மகா பாபிலோனின் ஒரு மணி நேர அதிவிரைவான அழிவு, அதன் கடற்பரப்பில் கப்பல்களில் பயணிக்கிறவர்களுக்கு நேரடியாகவே தெரிய வரும் என்றால், உலக நாடுகளின் தலைவர்களுக்கோ அது, இன்றைய நேரலை ஊடகங்கள் மூலம் தெரியவரும் எனலாம். அவர்களும், அந்நகரத்தோடு வர்த்தகம் செய்து, பெரிய அளவில் லாபம் பார்த்தவர்கள் என்பதால், அந்நகரம் சுட்டெரிக்கப்பட்டு வேகிறதினால் எழும்பும் மாபெரும் புகையை தொலைக்காட்சிகள் மற்றும் இன்றைய அதிவிரைவு சமூக வலைத்தளங்கள் வழியாகப் பார்த்து, அதற்காக அழுது புலம்புவார்கள்.

1961-ஆம் ஆண்டும். ரஷ்யாவால் சோதித்துப் பார்க்கப்பட்ட ’த்சார் பாம்பா’ எனும் ஹைட்ரஜன் குண்டு வெடித்தபோது, அதனால் உண்டான ஒரு காளான் வடிவ புகை மேகமானது, வானத்தை நோக்கி 1,30 ஆயிரம் அடிவரை புறப்பட்டது என்றும், அது எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விடவும் நான்கரை மடங்கு அதிக உயரமாய் இருந்தது என்றும் ஏற்கெனவே பார்த்தோம். 1945-ஆம் ஆண்டில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட ’லிட்டில் பாயை’ விட இது 3333 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

ஆக, 1945-1961 வரையிலான 16 வருடங்களுக்குள் இத்தனை ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்த ஒரு ஆயுதத்தை ஒரு தேசத்தால் உருவாக்க முடியும் என்றால், 1961-ஆம் ஆண்டிலிருந்து 2021 வரையிலான இந்த 61 ஆண்டுகளுக்குள் இன்னும் எத்தனையாயிரம் மடங்கு அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்க-ரஷ்ய நாடுகள் உருவாக்கியிருக்கும்? தொழில்நுட்பம் அதன் உச்சத்தைத் தொடப்போகும் இனிவருங்காலத்தில் இன்னும் எவ்வளவு பயங்கரமான ஆயுதங்களை இந்த நாடுகள் உருவாக்கும்?

அப்படி அணு ஆயுதத் தொழில்நுட்பங்கள் அதன் உச்சைத்தைத்தொடப்போகும் அந்திகிறிஸ்துவின் ஆட்சிக்காலத்தில் தான், மகா பாபிலோன் அழிவைச் சந்திக்கப்போகிறது. ஆக, அப்படிப்பட்ட கொடிய குண்டுகளினால் உண்டாகும் புகை எத்தனை அடி உயரத்திற்கு எழும்பும்!

இவை மட்டுமில்லை. இன்னொரு வார்த்தையும் மகா பாபிலோன் அணுகுண்டினால் தான் அழிக்கப்படப்போகிறது என்பதற்கு சாட்சி பகர்கிறது.

பயந்து, தூரத்திலே நின்று…!

வெளி 18:10 அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

அணு ஆயுதத்தினால் தாக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு நகரத்தின் அருகில் நம்மால் போக முடியுமா? அந்தப் பகுதி எங்கும் பரவியிருக்கும் பெருவெப்பம், பெரும்புகை இவற்றோடு கதிர்வீச்சும் பல கிலோ மீட்டர்களுக்குப் பரவியிருக்குமே! ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் கதிரியக்கம், எத்தனை கிலோமீட்டர்களுக்கு, எத்தனை லட்சம் மக்களுக்கு, எப்படிப்பட்ட பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்தியது என்பதையும், இப்போதுவரை அதன் பாதிப்புகள் புற்றுநோய் உள்ளிட்ட பல வடிவங்களில் தொடர்கிறது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோமே!

அணுகுண்டுகளின் ஆரம்பகால யுரேனியம் குண்டுகளின் கதிரியக்கமே அந்த அளவுக்கு உடனடியாகவும் நீண்டகாலமாகவும் தலைமுறைகள் தாண்டிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றால், இன்றைய நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் ஹைட்ரஜன் குண்டுகளின் இனிவரப்போகும் பரிமாணங்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அப்படிப்பட்ட அணு ஆயுதங்கள் தான் மகா பாபிலோன் மீது நடத்தப்படப்போகும் தாக்குதலில் பயன்படுத்தப்படும். அதனால் அந்நகரத்தின் அருகிலேயே எவரும் போகமுடியாது. அச்சத்தோடு தூரத்திலேயே தான் நிற்க முடியும். இதனை இன்னொரு வசனமும் உறுதி செய்கிறது.

வெளி 18:15 இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி, அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று:
மகா பாபிலோன் நகரமானது, அணு ஆயுதங்களினால் தான் அழிக்கப்படப்போகிறது என்பதை இன்னொரு வசனம் மூலமாகவும் விளக்க விரும்புகிறேன்.

வெளி 18:21 அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய எந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.

ஒரு எந்திரக்கல் கடலில் எறியப்படும்போது, அது விழுகின்ற அந்த நொடிப் பொழுதிலேயே நம் கண்களை விட்டுக் காணப்படாமற் போய்விடும். அப்படி ஒரு எந்திரக்கல் இருந்தது என்பதற்கே, அதற்குப்பிறகு சாட்சி இல்லாமல் போய்விடும். அப்படியே மகா பாபிலோன் நகரமானது, அணு ஆயுதங்களினால் ஒரு மணி நேரத்திலேயே சுட்டெரிக்கப்படப்போகிறபடியால், அந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அக்காலக்கட்டத்தில், அதனைப் பார்த்து மிகவும் பிரமிக்கும் மக்களை விட்டுக் காணப்படாமற்போகும்.

அந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அதன் அழகோ, ஆடம்பரமோ, ஆளுகையோ உலகில் மேலும் காணப்படாது. இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்படியொரு நகரம் உலகில் இருந்தது, உலகை ஆண்டது என்பதற்கான அடையாளங்கள் கூட இல்லாத அளவுக்கு அது அழிக்கப்பட்டுப்போகும். ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட குண்டுகளாவது சில கட்டிடங்களையாவது பழைய நகரத்திற்கு அடையாளமாக விட்டுச்சென்றன. ஆனால், இன்று உலக நாடுகளிடத்தில் இருக்கும் அணு ஆயுதங்களோ, சில நிமிடங்களில் பட்சித்துப் போடும் சக்தி வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி 17:16 நீ மிருகத்தின் மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்

ஒரே நாளில் சுட்டெரிப்பார்கள்!

வெளி 18:8 ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.

அக்கினியால் மகா பாபிலோனை சுட்டெரிக்கப்போகிற பத்து நாடுகளின் இராணுவம், அதற்கு ஒரே ஒரு நாளை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. ஆயிரக்கணக்கான படை வீரர்கள், குறிப்பிட்ட ஒரு நகரத்தைச் சூழ்ந்துகொண்டு, ஒரு நாள் முழுக்க அதனை அக்கினியினால் சுட்டெரிப்பதெல்லாம் அந்தக்காலம். இன்று, ஒரு குட்டி நாட்டின் இராணுவம் கூட இப்படிப்பட்ட பற்றவைக்கிற வேலைகளைச் செய்வதில்லை. குறிப்பிட்ட நகரம் அதன் குறிப்பிட்ட பகுதி என குறிவைத்து, ஏவுகணைகள் மூலம் குண்டுகளை வீசி, அப்பகுதியை அக்கினிக்காடாக்குகிறார்கள்.

ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அணுகுண்டுகளினால் அக்கினி உண்டான விதமும், அதனைத்தொடர்ந்து அவை தரைமட்டமாக்கப்பட்ட விதமும் நமக்குத் தெரியும். அணுகுண்டுகள் தான் என்றில்லை. விமானங்களை குறிப்பிட்ட நிலைகளின் மீது மோதி, வெடிக்கச்செய்து அந்நிலைகளை அக்கினிக்கிரையாக்கவும், தரைமட்டம் ஆக்கவும் முடியும் என்பதனை அமெரிக்காவின் ’இரட்டைக்கோபுர (TWIN TOWER) தாக்குதல்கள் உலகுக்கு உணர்த்தின. அதேநேரத்தில், அணுகுண்டுகளின் தாக்குதல்களும், விமான வெடிப்பு தாக்குதல்களும் ஒன்றாகிவிட முடியாது.

ஆக, வெளிப்படுத்தின விசேஷத்தில் காணப்படும் மகா பாபிலோன் நகரம் மனிதர்களால் அல்ல. ஹைட்ரன் குண்டுகளால் உண்டாகும் அக்கினியினாலேயே சுட்டெரிக்கப்படப்போகிறது. கேள்விகள் எழும்படியாக விஞ்ஞானிகள் தங்கள் கூற்றுகளை முன்வைக்கலாம். ஆனால், கேள்விகள் எழும்படியாக ஒரு வேதபோதகன் தன் கருத்துகளை முன்வைக்கக்கூடாது. அந்த வகையில், ஒரே நாளில் அழியப்போகும் மகா பாபிலோனின் முடிவு அணுகுண்டுகளால் தான் சுட்டெரிக்கப்படப்போகிறது என்பதை நிரூபிக்கும் வகையிலான மூன்று வசனங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

ஒரே மணி நேரத்தில் பாழாய்ப்போவாள்!

வெளி 18:10 அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

வெளி 18:16 ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும், இரத்தினங்களினாலும், முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

வெளி 18:19 தங்கள் தலைகள் மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயையோ! மகா நகரமே! சமுத்திரத்தில் கப்பல்களையுடைய அனைவரும், இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.

நாம் பார்க்கும் இந்த மூன்று வேத வசனங்களுமே மகா பாபிலோன் ’ஒரே நாழிகையில்’ அழியும் என்கிற செய்தியை நமக்கு அழுத்தந்திருத்தமாகத் தெரிவிக்கின்றன.

சரி. ’நாழிகை’ என்றால் என்னவென்பதை நாம் முதலாவது தெரிந்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது.
தமிழ் ஆய்வுக்கூற்றுகளின்படி ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் எனக் கணக்கிடப்படுகிறது. அதாவது இன்றைய அரை மணி நேரம் எனப்படும் 30 நிமிடங்களுக்கு 6 நிமிடங்கள் குறைவு. இந்த நாழிகை என்ற வார்த்தையைத்தான் சோதிடம், பஞ்சாங்கம் போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர். அதே ’நாழிகை’ என்ற வார்த்தைதான் தமிழ் மொழி வேதாகமத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உலக அளவில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் ஆங்கில வேதாகமங்களிலோ, 24 நிமிடங்களைக் குறிக்கும் இந்த ‘நாழிகை’ என்ற வார்த்தைக்கு பதிலாக 60 நிமிடங்களைக் குறிக்கும் 1 மணி நேரம் என்ற கால அளவையே பயன்படுத்தி இருக்கின்றனர். அதாவது, ஆங்கில வேதாகமங்கள், மகா பாபிலோன் ‘ஒரு மணி நேரத்தில் (IN ONE HOUR) அழிக்கப்படும் என்றே கூறுகின்றன.

KJV | 18:10 Standing afar off for the fear of her torment, saying, Alas, alas the great city Babylon, the mighty city! For in one hour is thy judgement come.

NIV | 18:16-17 and cry out: ‘’Woe! Woe, O great city, dressed in fine linen, purple and scarlet, and glittering with gold, precious stones and pearls! 17 In one hour such great wealth has been brought to ruin!

NAS| 18:19 And they threw dust on their heads and were crying out, weeping and mourning, saying, ‘Woe, woe, the great city, in which all who had ships at sea became rich by her wealth, for in one hour she has been laid waste!’

ஆக, இவை அனைத்தும் மகா பாபிலோன் என்ற மாநகரம், ’ஒரு மணி நேரத்தில்’ அழிக்கப்படும் என்பதற்கு மூன்று வெவ்வேறு வேதாகமங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆதார வசனங்களாய் இருக்கின்றன. ஆக, எந்த நாளின் ஒரு மணி நேரத்திலே மகா பாபிலோனானது அதிபயங்கர ஹைட்ரஜன் குண்டுகளினால் அழிக்கப்படப் போகிறதோ, அந்த நாளிலேயே அதன் சாவும் துக்கமும் அதற்கு நேரும்.

இன்றைய நிலையில், ஒரு பெரிய நகரத்தின் மீது சக்தி வாய்ந்த ஹைட்ரன் வகை குண்டுகள் வீசப்பட்டால், அவை நிச்சயம் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த நகரத்தை முழுமையாக அழித்து முடித்துவிடும்.

ஏனெனில், அவற்றில் இருந்து புறப்படும் அதிபயங்கரமான நெருப்பு, சிலபல நிமிடங்களிலேயே பல கிலோ மீட்டர்களுக்கு பற்றிப்பரவி எல்லாவற்றையும் சுட்டெரித்துவிடும்.

ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அணுகுண்டுகளினால் அக்கினி உண்டான விதமும், அதனைத்தொடர்ந்து அவை தரைமட்டமாக்கப்பட்ட விதமும் நமக்குத் தெரியும். அணுகுண்டுகள் தான் என்றில்லை. விமானங்களை குறிப்பிட்ட நிலைகளின் மீது மோதி, வெடிக்கச்செய்து அந்நிலைகளை அக்கினிக்கிரையாக்கவும், தரைமட்டம் ஆக்கவும் முடியும் என்பதனை அமெரிக்காவின் ’இரட்டைக்கோபுர (TWIN TOWER) தாக்குதல்கள் உலகுக்கு உணர்த்தின. அதேநேரத்தில், அணுகுண்டுகளின் தாக்குதல்களும், விமான வெடிப்பு தாக்குதல்களும் ஒன்றாகிவிட முடியாது.
ASV YESHURUN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *