’ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர்’ – தடைகளை உடைத்து தீர்க்கதரிசன நிறைவேறுதல்களுக்கு வித்திட்ட ட்ரம்பின் முதல் கையெழுத்து!

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

டிசம்பர் 6 2017,  புதன்கிழமையன்று வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப், அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ள அவர், அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

’இந்த முடிவை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாகக் கருதமுடியாது என்றும், அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும்’ எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும், பாலஸ்தீனும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கலாம் என அறிக்கைகள் கூறியிருந்தன. டொனால்ட் டிரம்ப் ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக தன்னிச்சையாக அங்கீகரிக்க உள்ளதாக, டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், டெல் அவிவ்வில் இருக்கும் அமெரிக்க தூதகரத்தை டிரம்ப் உடனடியாக ஜெருசலேமிற்கு மாற்றமாட்டார் என்றும் அவர்கள்  தெரிவித்திருந்தனர். மேலும், ஜெருசலேம் விவகாரம் குறித்து, புதன்கிழமை அன்று டிரம்ப் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அப்படியே, உரையாற்றிய ட்ரம்ப், வரலாற்றுச்சிறப்புமிக்க ஒரு திருப்புமுனை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆனால், அதிகாரிகள் கூற்றுக்கு மாறாக, அமெரிக்க தூதரகம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திலிருந்து விரைவாகவே ஜெருசலேமிற்கு மாற்றப்படும் என்பது ட்ரம்பின் அறிவிப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

1947ம் ஆண்டு, ஐநா சபையின் எல்லை பிரிப்பு திட்டப்படி, ஜெருசலேமிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அதாவது, சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் அந்த நகரம் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜெருசலேமின் மதம் சார்ந்த முக்கியத்துவங்களுக்காக இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அடுத்த வருடம் 1948ம் ஆண்டு மே 14 ஆம் தேதி புதிய நாடாகப் பிறந்த இஸ்ரேல் மீது, அடுத்த நாளே அரபு நாடுகள் போர் தொடுத்தன. அந்தப்போரில், இஸ்ரேலுக்காகப் போரிட்ட ஜியோனிஸ்ட் யூத இயக்கப் படையினர், ஜெருசலேமின் மேற்கு பகுதிகளை கைப்பற்றி, ’இஸ்ரேலுடன் அது இணைந்த பகுதி’ என அறிவித்தனர்.

மீண்டும் 1967ம் ஆண்டு இஸ்லாமிய நாடுகள் மீண்டும் தன் மீது தொடுத்த போரில், ஜோர்டன் ஆக்கிரமித்து வைத்திருந்த ஜெருசலேமின் கிழக்கு பகுதியையும் இஸ்ரேல் பிடித்தது. இப்படி, தன் பூர்வீகத்தலைநகரை இரண்டு பங்காகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த இஸ்ரேல், அங்கே தன் சட்ட திட்டங்களை அமல்படுத்தியது. இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதாகப் பார்க்கப்பட்டது. 1980ம் ஆண்டு, ’ஜெருசலேம் சட்டம்’ என்ற ஒரு சட்டத்தை பிறப்பித்த இஸ்ரேல், ’ஒருங்கிணைந்த ஜெருசலேமே இனி தன் தலைநகர்’ என்று அறிவித்தது.

இதற்கு பதிலடியாக, ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில், 1980ல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, இஸ்ரேலின் சட்டம் செல்லாது என அறிவித்தது. கிழக்கு ஜெருசலேம் ஒரு ஆக்கிரமிப்பு பகுதி மட்டுமே என்றுதான் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் அறிவித்தன.

இந்நிலையில், 1995 – இல், அமெரிக்க நாடாளுமன்றம் இஸ்ரேலில் இருக்கும் தங்கள் தூதரகத்தை, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திலிருந்து இஸ்ரேலின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டிருந்த ஜெருசலேமிற்கு மாற்றியமைக்க சட்டம் கொண்டுவந்தது. இப்படி தூதரகத்தை மாற்றி அமைப்பதன் மூலம், ’ஜெருசலேமிற்கு இஸ்ரேலின் தலைநகர்’ என்ற அங்கீகாரத்தை தரவிரும்பியது அமெரிக்க நாடாளுமன்றம். ஆனாலும் அந்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அதனால், அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்பவர்கள், அந்த தூதரக மாற்றச்சட்டத்தைத் தள்ளுபடி செய்யும் வகையில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை, தள்ளுபடி பத்திரத்தில் கையெழுத்திடுவார்கள்.

இதன்மூலம், கிழக்கு எருசலேமை உள்ளடக்கிய எருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாக இத்தனை வருடங்களாக தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்தது. ஒபாமா வரைக்கும் இவ்வழக்கமே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இந்த வழக்கத்திற்கு தற்போது ட்ரம்ப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப், ’அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றுவேன்’ என்பதை தன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, அமெரிக்க மக்கள் முன்னால் வைத்து வெற்றிபெற்றவர். ட்ரம்ப் மட்டுமில்லை. பில்கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் போன்றவர்களும், ஏற்கெனவே இதே வாக்குறுதியை முன்வைத்தவர்களும் வெற்றி பெற்றவர்களுமாயிருந்தார்கள். ஆனாலும் அதிபர் பதவிக்கு வந்ததும் அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தார்கள். தூதரகம் மாற்றும் ஆணைக்கு தடைவிதிக்கும் ஆவணங்களில் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கையெழுத்திட்டார்கள். அமெரிக்க வாழ் யூதர்களையும், இஸ்ரேலையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கினர்.

ஆனால், அவர்களைப்போல அல்லாமல், அதிபர் ட்ரம்ப், தான் பதவியேற்றுக்கொண்ட ஒன்றரை வருடத்திற்குள்ளாகவே, தன் தேர்தல் வாக்குறுதியை எவருக்கும் அஞ்சாமல் நிறைவேற்றி இருக்கிறார். அவர் நினைத்திருந்தால், அவரும் எல்லா அதிபர்களைப் போலவும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தள்ளுபடி பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்க முடியும். அதனால் அவருக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால், ட்ரம்ப் அப்படி செய்யாமல், இஸ்ரேலைப் பற்றிய இறுதிக்கால பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதற்கு அவர் ஒரு துவக்கப்புள்ளியை வைத்திருக்கிறார்.

நெகிழ்ந்த நெதன்யாஹூ

டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ’இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்’ என்று கூறினார், மேலும், ’இஸ்ரேல் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீன் எச்சரிக்கை

முன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலஸ்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ”இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்ற தகவல், அவரது அதிகாரிகளால் வெளியிடப்பட்டவுடனே, டிரம்ப் இவ்வாறு எந்த முடிவையும் அறிவிக்கக்கூடாது என்பதை வலியுறுத்த, சர்வதேச ஆதரவை திரட்டும் முயற்சியில் இறங்கியிருந்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், இது தொடர்பாக ஃபிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் மற்றும் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக பாலஸ்தீன அதிபர் அலுவலகம் கூறியிருந்தது. அதனைத்தொடர்ந்து, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரிக்குமானால், இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு துண்டிக்கப்படலாம் என்றும், இத்தகைய நடவடிக்கை முஸ்லீம்களுக்கான சிவப்புக் கோட்டை தாண்டுவதாக அமையும் என்றும் துருக்கி அதிபர் ரிசெஃப் தாயிப் எர்துவான் எச்சரித்திருந்தார். மேலும்,  இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா ஒருதலைபட்சமாக அறிவிக்கக்கூடும் என்பது குறித்து தான் கவலை கொண்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், அதிபர் டிரம்பிடம் தெரிவித்திருந்தார். இது குறித்து எந்த முடிவாக இருந்தாலும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அமெரிக்க செயலாளரிடம் பேசிய ஜோர்டன் அமைச்சர்

ஜோர்டனின் அமைச்சர் ஐமன் சஃபாடியோ, “ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து தான் அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம் பேசியுள்ளதாகவும், இந்த முடிவு அரபு மற்றும் இஸ்லாம் நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதோடு, எரிப்பொருள் பதட்டத்தை உருவாக்கி, அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை பாதிக்கும் வகையில் அமையும் எனக் கூறியதாகவும் ட்விட்டரில் கூறியிருந்தார்.

ஆனால், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஹோகன் கிட்லி, ’இந்த விவகாரத்தில் அதிபர் மிகவும் தெளிவாக உள்ளார் என்றும், இது நடந்துவிட்டால் என்ற விஷயமல்ல, எப்போது நடக்கவுள்ளது என்பதே விஷயம்’ என்றும் கூறி, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதிலும், அதன் ஓர் மிக முக்கியமான அடையாளமாக அமெரிக்க தூதரகத்தையும் அங்கேயே மாற்றுவதிலும் ட்ரம்புக்கு இருக்கும் தெளிவையும் உறுதியையும் வெளிப்படுத்தினார். செய்தித்தொடர்பாளர் தெரிவித்தபடியே, எவருடைய எதிர்ப்புகளையும் அழுத்தங்களையும் கேட்டு தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல், எருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ட்ரம்ப்.

தன்னிச்சையாகவே அறிவித்தாலும் அதிபரின் முடிவை நாம் அமெரிக்காவின் முடிவாகத்தான் பார்க்க வேண்டும். ஏனெனில், அவர் ஏற்கெனவே 1995-இல் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு, அதிபர்கள் மூலமாகவே இருந்துவந்த ஓர் தடையை ஓர் அதிபராகவே தகர்த்தெறிந்திருக்கிறார். ஆக அமெரிக்க சட்டப்படியே அவர் செயல்பட்டிருக்கிறார். அதனால் அவரது முடிவு  ஒட்டுமொத்த அமெரிக்காவின் முடிவு. ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவு, இத்தனை வருடங்களுக்குப் பிறகு மாற்றம் கண்டுள்ளதால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில், 8 நாடுகள் இந்த வார இறுதியில் அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உதவாத அமெரிக்காவின் இந்த முடிவோடு மாறுபடுவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். இந்த நகர்வை தங்கள் நாடுகள் ஆதரிக்கவில்லை என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்கும், ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்க்கெலும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத் தூதுவர் ஃபெடரிகா மொகெரினி இந்த நடவடிக்கையை ‘பெரும் கவலைக்குரியது’ என்று வருணித்துள்ளார். “பெரும் மன உளைச்சல் ஏற்படுத்தும் தருணம் இது” என்று கூறிய ஐ.நா. தலைமை செயலாளர் ஆண்டானியோ கட்டரஸ் ’இரு தேசக் கொள்கைக்கு மாற்று இல்லை’ என்று தெரிவித்தார். பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசின் ஃபடா கட்சி, இது குறித்து ஐ.நா.விடம் முறையிடப்போவதாகக் கூறியுள்ளது. இஸ்லாமியவாதக் குழுவான ஹமாஸ் புதிய கிளர்ச்சி ஒன்றுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரின் அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டம் வெடித்ததாகவும், ஜோர்டான் தலைநகர் அம்மானிலும் போராட்டம் வெடித்ததாகவும், இயேசு கிறிஸ்துவின் பாரம்பரியப் பிறப்பிடமான, மேற்குக் கரையில் உள்ள பெத்லஹேமில் கிறிஸ்துமஸை ஒட்டி ஏற்றப்பட்ட மின் விளக்குகளை பாலஸ்தீனியர்கள் அணைத்ததாகவும் பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யார் எதிர்த்தாலும், ஒவ்வொரு யூதனுக்கும் மட்டுமல்ல, பைபிளை அறிந்திருக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தெரியும். ஜெருசலேம் என்பது யூதர்களுக்கு மட்டுமே உரியது என்பது. அந்தவகையில் பைபிளை அறிந்த ஒரு கிறிஸ்தவராக ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அவரது இந்த அறிவிப்பு இஸ்ரேலுக்கு மகிழ்ச்சியானதாக இருந்தாலும், இனிதான் இஸ்ரேலைக்குறித்த வேதனைக்குரிய தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறப்போகின்றன என்பதும், அதற்கேற்ப இஸ்ரேல் தான் மீண்டும் தனிநாடாக செயல்படத் தொடங்கியதில் இருந்து 70 வருடங்களை 2018 மே 14-ஆம் தேதியோடு நிறைவுசெய்யப்போகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *