இதோ, இயேசுவின் வருகைக்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் உள்ள தொடர்புகளை அதன் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளின் வாயிலாகக் காணவிருக்கிறோம். தேவனுடைய கரம் இடைப்பட்டால் உங்கள் வாழ்வையே மாற்றியமைக்கக்கூடிய இக்கட்டுரையை கண்ணும் கருத்துமாகக் வாசியுங்கள்.
இயேசு எருசலேமைப் பார்த்து: லூக்கா: 19: 42-44 (கி.பி. 33)
உன்னை சந்திக்குங் காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில் போட்டு, உன்னை வளைந்து கொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப் போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்’’
தீர்க்கதரிசிகள் வாயிலாக முன்னறிவிக்கப்பட்ட மேசியா எனும் மீட்பரை யூதர்கள் நூற்றாண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அந்த மேசியா இயேசு எனும் யேஷூவாவாக எளிய தச்சனாக எதிர்வந்து நின்றபோதோ அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலுவை மரணத்தையே அவருக்குக் கையளித்தனர். தங்கள் முன் நிற்பவர் உலகத்தைப் படைத்த தேவாதி தேவன் என்பதை எருசலேம் வாழ் யூதர்கள் அறியாமற் போனதினால் அவர்களுக்கு நிகழப்போகும் ஆபத்தைத்தான் இயேசுவின் இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் பிரதிபலித்தன. அவர் இந்த வார்த்தைகளை கி.பி. 33 ஆம் ஆண்டில் தெரிவித்தார். அவை 37 ஆண்டுகள் கழித்து கி.பி. 70-இல் இப்படி நிறைவேறின.
கி.பி. முதலாம் நூற்றாண்டு. 70 ஆம் வருடம். ரோமப் பேரரசின் ஆதிக்கத்தை எதிர்த்து இஸ்ரேல் வாழ் யூதர்கள் கலகம் செய்தனர். வெகுண்டெழுந்த ரோமப் பேரரசின் படை, ஆளுநர்கள் டைடஸ் மற்றும் திபேரியஸ் ஜூலியஸ் அலெக்சாண்டர் தலைமையில் யூதர்களுக்கு எதிராகக் களமிறங்கி, எருசலேமை முற்றுகையிட்டது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வயது வித்தியாசம் இல்லாமல் சுமார் 11 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மீதியான லட்சக்கணக்கான மக்களோ தாங்கள் வாழ்ந்து வந்த இன்றைய இஸ்ரேல், பாலஸ்தீன், ஜோர்டான் பகுதிகளை விட்டு விரட்டப்பட்டு உலகமெங்கும் சிதறிப்போயினர். எருசலேம் நகரமும் அதிலிருந்த தேவாலயமும் தீக்கிரையாக்கப்பட்டு இடித்துப் பாழாக்கப்பட்டன.
கர்த்தர் இயேசு: மாற்கு 13:2 (கி.பி. 33)
இந்தப் பெரிய கட்டிடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும்’’ என்றார்.
இஸ்ரேலில் இருந்து உலகமெங்கும் சிதறடிக்கப்பட்ட யூதர்களுக்கு அங்கேயாவது மன நிம்மதி கிடைத்ததா? பரிசுத்த வேதாகமமும் யூதர்களின் வரலாறும் என்ன சொல்கின்றன?
கர்த்தர் உன்னை பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனை மட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்;
ஆம். யூதர்கள் கண்டங்கள் பல தாண்டி எல்லா இடங்களுக்கும் சிதறிப்போயினர். நம் அண்டை மாநிலமான கேரளாவின் கொச்சி நகரின் மட்டாஞ்சேரி என்ற பகுதியில் கூட அவர்கள் வசித்திருக்கின்றனர்.
அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது. உன் உள்ளங்கால்கள் தங்கித்தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்கு தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்து போகிற கண்களையும் மன சஞ்சலத்தையும் கொடுப்பார்.
ஆம். யூதர்கள் தாங்கள் குடியேறிய நாடுகளில் எல்லாம் துயரக்கடலில் தத்தளித்தனர். இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷியா உள்ளிட்ட 10 நாடுகள் அவர்களை பல்வேறு காலகட்டங்களில் வலுக்கட்டாயமாக வெளியேற்றின. பல நாடுகளில் கேட்பார் இல்லாமல் கொலை செய்யப்பட்டனர். ஜெர்மனியின் ஹிட்லர் தன் ஆட்சிக்காலத்தில் மட்டும் 60 முதல் 65 லட்சம் வரையிலான யூதர்களை மிகக் கொடூரமாக இனப்படுகொலை செய்தான்.
கர்த்தரின் சாபம்: உபாகமம் 28:64-67 (கி.மு. 1451)
உன் ஜீவன் உனக்கு சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப் பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும், பகலும் திகில் கொண்டிருப்பாய்.
யூதர்களை ஹிட்லர் அழித்த விதம், நவீன உலகம் அதுவரை காணாத கொடூரத்தின் உச்சமாக இருந்தது. ஒவ்வொரு கணமும் பயமும் திகிலும் அவர்களை ஆட்கொண்டிருந்தன.
கர்த்தரின் சாபம்: உபாகமம் 28:64-67 (கி.மு. 1451)
நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்’’.
சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 1878 வருடங்கள். கொஞ்சம் குறைய என்றால் 1900 வருடங்கள். நூற்றாண்டுகளில் சொல்ல வேண்டுமென்றால் 19 நூற்றாண்டுகள். இவை, யூதர்கள் தங்கள் சொந்த நாடான இஸ்ரேலை விட்டு உலகம் முழுதும் சிதறிக்கிடந்த காலம். அவர்கள் மறுபடியும் சேர்வதற்கோ, சேர்ந்தாலும் தாய்நாட்டை அடைவதற்கோ, அடைந்தாலும் அதனை ஆள்வதற்கோ கொஞ்சமும் சாதகங்கள் இல்லாத சூழ்நிலை. ஆனால், மற்றொரு பக்கமோ பரிசுத்த வேதாகமமான பைபிளில், யூதர்கள் தங்கள் நிலப்பரப்பிற்கு திரும்பி வருவார்களென்றும், அதிலே சுகமாக வாழ்வார்களென்றும், அவர்களுக்கு மகா உபத்திரவம் ஏற்படும் ஓர் காலத்தில் இயேசு கிறிஸ்துவே அவர்களைக் காக்கும் ராஜாவாக பூமிக்கு இறங்கி வருவார் என்றும் பல காரியங்கள் எழுதப்பட்டிருந்தன. அவைகளை எல்லாம் யூதர்கள் நம்பினார்களோ இல்லையோ… ’சிதற அடிப்பேன்’ என முன்னறிவித்து அவர்களை சிதற அடித்த தேவனே, ’சேர்த்துக்கொள்வேன்’ என்றும் சொல்லியிருந்தார். அதைச் சொன்ன அவரே அதைச் செய்தும் காட்டினார்…
எசேக்கியேல் 37:14 (கி.மு.587)
நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
ஏசாயா 27:12 (கி.மு. 712)
இஸ்ரவேல் புத்திரரே , நீங்கள் ஒவ்வொருவராய் சேர்க்கப்படுவீர்கள்.
கர்த்தர் : ஆமோஸ் 9:9, (கி.மு. 787)
இதோ, சல்லடையினால் சலித்தெரிக்கிறது போல இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தெரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்.
கர்த்தர் : ஆமோஸ் 9:14, 15 (கி.மு. 787)
என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்;
அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்,
கர்த்தர் (ஏசாயா 43:5) (கி.மு. 712)
பயப்படாதே நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலிருந்தும் கூட்டிச்சேர்ப்பேன்.
இஸ்ரேலின் உருவாக்கத்தில், இரண்டாம் உலகப்போருக்கு பெரும்பங்கு உண்டு. பல நாடுகளுக்கும் இழப்புகளை ஏற்படுத்திய அந்தப் போர், இஸ்ரேலுக்கோ பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்தது. அந்தப் போரின் முடிவு 60 லட்சம் யூதரைக் கொன்ற அடால்ப் ஹிட்லருக்கும் ஓர் முடிவுரை எழுதியது. ஜெர்மனிக்குள் புகுந்த நேச நாடுகளின் படை, யூதர்களுக்கு நேர்ந்த மகா கொடுமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டின. அவை யூதர் மீது ஐ.நா. சபை வரை அனுதாபத்தை ஏற்படுத்தின. எல்லாவற்றிற்கும் மேலாக, இங்கிலாந்து வரலாற்றுச் சிறப்புமிக்கதோர் அறிவிப்பை வெளியிடவும் இந்த இரண்டாம் உலகப்போரே காரணமாக இருந்தது. என்ன அறிவிப்பு அது? எப்படி நிகழ்ந்தது அது?.
Doctor.Chaim weizman. இங்கிலாந்தில் வசித்துவந்த இந்த யூதர், சோளத்திலிருந்து அசிட்டோன் எனும் பீரங்கிகளுக்கான மருந்து தயாரிப்பதைப் பற்றி ஆய்வு செய்து வந்தார். அன்றைய நிலையில், அது ஐரோப்பாவின் ஒருவகை மரத்திலிருந்தே தயாரிக்கப்பட்டு வந்தது. 2-ஆம் உலகப் போரின் போது அந்த மரத்தை தன் நாட்டிற்கு இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்பட, பீரங்கிகளை வெடிக்கச்செய்ய அசிட்டோன் இல்லாமல் தோல்வி பயத்தில் தத்தளித்தது இங்கி்லாந்து. இந்த நேரத்தில் தான் ஆபத்பாந்தவனாக உள்ளே வந்தார் செய்ம் வெய்ஸ்மன். அரசின் வேண்டுகோளுக்கிணங்க அவர் அதிவேகமாய் சோள வகைகளிலிருந்து அசிட்டோன் தயாரித்துக் கொடுக்க, தடைகள் எல்லாம் நீங்கி போரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. தொடர்ந்து, செய்ம் வீஸ்மனுக்கு நல்லதோர் வெகுமதியை கொடுக்க விரும்பிய பிரிட்டன், வீஸ்மனின் வேண்டுகோளுக்கிணங்க, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்த இஸ்ரேலுக்குள் யூதர்கள் குடியேறுவதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து, ஐ.நா. சபையில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் யூதர்களுக்கு தனிநாடு என்ற தீர்மானத்தை ஆதரித்தன. 1948 மே மாதம் 14 ஆம் தேதி மாலை இஸ்ரேல் நாடு பிரகடனம் செய்யப்பட்டது. கத்தியின்றி ரத்தமின்றி தேவ திட்டம் நிறைவேற காரணமாக இருந்த செய்ம் வீஸ்மனே இஸ்ரேலின் முதல் ஜனாதிபதி ஆனார்.
ஏசாயா 11:12 (கி.மு. 713)
ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களை சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலிமிருந்து கூட்டுவர்.
இன்றைய நவீன இஸ்ரேல் உருவான விதம்!
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன்னதாக, உலகத்தின் கடைசி காலத்தில், இஸ்ரேல் என்ற நாடு உருவாகும் என்ற பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களின் படியே எப்படி இஸ்ரேல் உருவானது என்பதை வசன ஆதாரங்களோடு பார்த்தோம். அதேநேரத்தில், நாடு உருவானால் மட்டும் போதாது, பல்வேறு காலக்கட்டங்களில் உலகமெங்கும் சிதறிப்போன பூர்வீகக் குடிகளான 12 கோத்திரங்களும் இஸ்ரேலுக்குத் திரும்ப வேண்டியதும் கர்த்தரின் விருப்பம்.
ஏசாயா 43:5-7 (கி.மு.712)
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டு வா என்பேன்.’’
ஆமோஸ் 9:9
இதோ, சல்லடையினால் சலித்தெரிக்கிறது போல இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தெரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன். ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை.
தங்களுக்கென ஒரு தனி நாடு உருவானதால், இந்தியா உள்பட பல நாடுகளில் வாழ்ந்துவந்த யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பினர். அதேநேரத்தில், இஸ்ரேல் அரசும், இன்னும் பல அமைப்புகளும் உலகின் ஒவ்வொரு நாடுகளையும் சல்லடை போட்டு சலித்தெடுத்து, யூதர் உள்ளிட்ட இஸ்ரேலின் 12 கோத்திரங்களின் மக்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ஏசாயா 11:12 (கி.மு. 713)
ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களை சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலிமிருந்து கூட்டுவர்.
1948 துவங்கி இதற்கானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. அப்படி மனாசே என்ற கோத்திரத்தார் இந்தியாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களில் சிலர் சமீபத்தில் இஸ்ரேலுக்கு திரும்பியுள்ளனர். மீதியான மக்களையும் வரவழைக்கும் பணிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
எசேக்கியேல் 36: 24
நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களை சகல தேசங்களிலிமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டு வருவேன்.
அரபிய, ஆப்ரிக்க பகுதிகளில் வாழ்ந்த ஏழை யூதர்களையோ இஸ்ரேல் அரசாங்கமே விமானங்கள் மூலம் இஸ்ரேலுக்குக் கொண்டு வந்து குடியிருப்புகள் உள்பட எல்லா வசதிகளையும் அமைத்துத் தந்திருக்கிறது. எத்தியோப்பியாவின் உள்நாட்டுக் கலவரத்தின்போது, அங்கு வாழ்ந்துவந்த 15 ஆயிரம் யூதர்களையும், இஸ்ரேல் அரசு 38 மணி நேரத்திற்குள் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தது இன்றளவும் உலக சாதனையாகக் கருதப்படுகிறது.
ஏசாயா 60:8 (கி.மு. 698)
மேகத்தைப் போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப் போலவும் பறந்து வருகிற இவர்கள் யார்?
அமெரிக்கா, யுனைடட் கிங்டம் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பணக்கார யூதர்களும் தங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும். இவர்கள் ஒன்றுகூடி, தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென இந்தக் கடைசி காலத்தில் ஒரு தேவாலயத்தை எழுப்புவார்கள். ஏனெனில் ஏற்கெனவே எருசலேமில் இருந்த 2 தேவாலயங்கள் யூதர்களின் எதிரிகளால் அழிக்கப்பட்டன. அதனால் பழைய தேவாலயம் இருந்த இடத்திலேயே புதிய தேவாலயம் ஒன்றை எழுப்புவது இஸ்ரேலரின் முதன்மை நோக்கம். அதற்கு அவர்களின் முதல் தேவையாக இருந்தது, கிழக்கு எருசலேம் எனப்படும் பழைய எருசலேம் நகரம். அது நவீன காலத்தில் ஜோர்டான் நாட்டின் கைகளுக்குப் போய்விட்டது. ஆனாலும் கர்த்தர் அதனையும் இஸ்ரேலர்களின் கைகளுக்குக் கொண்டுவந்து சேர்த்தார். எப்படி தெரியுமா?
1967. எகிப்து, ஜோர்டான், சீரியா ஆகிய அரபு நாடுகள் ரஷ்யாவின் முழு ஆதரவுடன் இஸ்ரேல் மீது இரண்டாம் முறையாகப் போர் தொடுத்தன. ஆனால், வெற்றி என்னவோ இஸ்ரேலுக்கே 2-ஆவது முறையும் கிடைத்தது. அதோடு, ஜோர்டான் கைவசமிருந்த கிழக்கு எருசலேமும் இஸ்ரேலுக்குக் கிடைத்தது. யூதர்களின் பழைய தேவாலயம் இருந்த அந்நகரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இஸ்ரேலின் கைகளுக்கு வந்தது.
இஸ்ரேலுக்கு தேவையான பழைய எருசலேம் நகரத்தை போர் என்ற பெயரில் தேடி வந்து அதனிடமே கொடுத்துவிட்டுப் போனது ஜோர்டான் நாடு. இஸ்ரேலும் தேவைக்கு அதிகமான நிதி, உயர்ரகக் கட்டுமானக் கற்கள், பரிசுத்த வேதாகம அடிப்படையிலான வழிபாட்டு முறைகள், சிறப்புப் பயிற்சியுடன் உருவாக்கப்பட்ட நவீன லேவியர்கள்… என எல்லாவற்றோடும் ஆயத்த நிலையில் இருக்கிறது. ஆனால், எல்லாமிருந்தும் பழைய பரிசுத்த தேவாலயம் இருந்த இடத்தில் தற்போது இருக்கும் இஸ்லாமியர்களின் மசூதி இஸ்ரேலின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஏனெனில், இஸ்லாமியர்கள் மெக்கா, மெதினா வரிசையில் எருசலேமையும் மூன்றாவது புண்ணியஸ்தலமாகக் கருதுகிறார்கள். ஆனால், இஸ்ரேல் எந்த நேரத்திலும் தேவாலயக் கட்டுமானப் பணிகளில் இறங்கலாம் என்பதே இன்றைய நிலை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இஸ்ரேலை சுற்றியிருக்கும் 22 அரபு நாடுகள் அதனைக் குறித்து என்ன மனநிலையில் இருக்கின்றன என்பதையும் கொஞ்சம் பார்த்து விடுவோமா?
15.5.1948 –இல் அரபு கூட்டு நாடுகளின் பொதுக்காரியதரிசி ஆஜம் பாஷா
’’இந்த யுத்தம் குருசு யுத்தம் அல்லது மங்கோலியப் படுகொலையைப் போல் சடுதியில் சம்ஹாரம் செய்து யூதரை கூண்டோடு அழிக்கும் யுத்தமாக இருக்கும்’’ என்றார்.
25.05.1965-இல் எகிப்திய ஜனாதிபதி நாசர் – ஈராக் ஜனாதிபதி ஆரப் கூட்டறிக்கை
அரபியருடைய தேசீய நோக்கம் இஸ்ரவேலை அழித்துத் தீர்த்துக்கட்டி விடுவதுதான்.
1.6.1967 –இல் இராக் ஜனாதிபதி ஆரப் பாக்தாத் ரேடியோவில் பேசியது
நாம் கூட்டாகவும், உறுதியாகவும், நமது ஒரே தெளிவான நோக்கமாகிய இஸ்ரவேல் நாட்டை உலகப் படத்திலிருந்து அழித்துப்போடத் தீர்மானித்து விட்டோம். இந்தக் கறையை கழுவிப்போட இதுதான் தருணம்.
இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளின் தலைவர்கள் இதுபோல் பேசுவார்கள் என்பதை கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே தாவீது என்கிற தீர்க்கதரிசன வரம் பெற்ற மன்னனின் மூலமாக தேவனாகிய கர்த்தர் முன்னறிவித்திருக்கிறார்.
முன்னுரைப்பு: சங்கீதம் 83:4-7 (கி.மு.1000)
அவர்கள் இனி ஒரு ஜாதியாயிராமலும், இஸ்ரேலின் பேர் இனி நினைக்கபடாமலும் போவதற்காக, அவர்களை (இஸ்ரேலர்களை) அதம் பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
இஸ்ரேல் பற்றிய தீர்க்கதரிசனங்களும் இயேசு கிறிஸ்துவின் வருகையும்
ஒரு நாடு அது உருவான அடுத்தநாளே போரைச் சந்திக்கும் சூழ்நிலை உலகில் இஸ்ரேலுக்கு மட்டுமே ஏற்பட்டிருக்கும் எனலாம். அதேநேரத்தில், அப்படிப்பட்டதோர் திணிக்கப்பட்ட போரில் வெற்றிபெற்ற பெருமையும் இஸ்ரேலையே சேரும். அரபு நாடுகள் தன் மீது தொடுத்த ஐந்து யுத்தங்களிலும் வெற்றிபெற்று, இஸ்ரேல் உலக அரங்கில் சிம்மசொப்பனமாகத் திகழ்கிறது. போர்களின் தோல்விகள் அரபு நாடுகளை பாதித்திருக்கிறதோ இல்லையோ, அவற்றிற்கு உதவி செய்து இஸ்ரேலை அழித்துவிடத் துடிக்கும் ரஷ்யாவை ரொம்பவே பாதித்திருக்கிறது எனலாம். எல்லா மட்டத்திலும் இஸ்ரேல் அழிப்பையே நோக்கமாகக் கொண்டிருக்கும் ரஷ்யாவும் இதர அரபு நாடுகளும் வருங்காலத்தில் இஸ்ரேல் மீது பெரும்போர் ஒன்றை தொடுக்கப்போகின்றன என்றால் அதனை உங்களால் நம்ப முடிகிறதா? வாருங்கள்…. தீர்க்கதரிசனங்களின் வழி அதனை நோக்குவோம்…
கர்த்தரின் முன்னறிவிப்பு : எசேக்கியேல் 38 :16
நீ தேசத்தைக் கார்மேகம் போல் மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி வருவாய்; கடைசி நாட்களிலே இது சம்பவிக்கும்;
ரஷ்யா இஸ்ரேலின் மீது படையெடுத்து வரும். ரஷ்யாவின் தலைமையில் இஸ்ரேலுக்கு எதிரான அரபு நாடுகளின் இராணுவங்களும் அணிவகுத்து வரும்.
எசேக்கியேல் 38: 5
அவர்களோடே கூட பெர்சியரும் (ஈரானியரும்), எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்;
பெர்சியா என்ற பெயர் ஈரானைக் குறிக்கும். இந்தப் பெயர் மாற்றம் 1935 இல் நிகழ்ந்தது. இன்று இஸ்ரேலின் பரம எதிரி யார் என்று கேட்டால் ஈரான் என்று உலகச்செய்திகளை உற்று கவனிக்கிற எவராலும் அழுத்தமாகச் சொல்ல முடியும். அந்த அளவுக்கு இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான உறவு முற்றிலும் மோசமடைந்து, எந்நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற நிலைமை உருவாகி உள்ளது. 1932 –இல் ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் நிகழ்ந்த ஓர் ஒப்பந்தம், ரஷ்யா…, ஈரான் வழியாக இஸ்ரேலை தாக்கக் கடந்துபோக அனுமதிக்கிறது. மேலும், ஈரான் இன்று உலக அரங்கில் அணு ஆயுத அச்சம் தரும் நாடாக உயர்ந்ததற்குப் பின்னணியிலும் ரஷ்யாவே இருக்கிறது. ஆக, இஸ்ரேலுடனான ஆறு யுத்தங்களிலும் தோற்றதனால், அரபு நாடுகள் ரஷ்யாவின் தலைமையில் மகா பெரிய படையுடன் இஸ்ரேலை அழிக்க வரும்.
எசேக்கியேல் 38: 6
கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும், வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனே (ரஷ்யாவுடனே) கூட இருப்பார்கள்.
கோமேர் என்ற வம்சம் இன்றைய உலகில் ஜெர்மானியரைக் குறிப்பதாகவும், தோகர்மா வம்சமோ துருக்கியரைக் குறிப்பதாகவும் வேத ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆக, இஸ்ரேல் மீதான ரஷியப் படையெடுப்பில் ஈரான், எத்தியோப்பியா, லிபியா நாடுகளோடு பலம் வாய்ந்த ஜெர்மனி மற்றும் துருக்கி நாடுகளின் இராணுவங்களும் பங்கேற்கும் என்பதை சத்திய வேதத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. என்னதான் இஸ்ரேல் பலம் வாய்ந்த நாடாக இருந்தாலும், அதனால் இத்தனை நாடுகள் சேர்ந்த ஓர் மகா மகா இராணுவத்தை எதிர்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது தான். ஆனால், இப்படியோர் படையெடுப்பை இஸ்ரேல் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையே சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முன்னதாக முன்னறிவித்திருக்கும் கர்த்தர், யுத்தத்தில் இஸ்ரேல் எப்படியெல்லாம் காக்கப்படும் என்பதையும், அதின் எதிரிகள் எப்படியெல்லாம் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் முன்னறிவித்திருப்பார் அல்லவா?
கர்த்தர் :எசேக்கியேல் 38 :18
இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு (ரஷ்யா) வரும்காலத்தில் என் உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 38:19
அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய (பூமி) அதிர்ச்சி உண்டாகி….
எசேக்கியேல் 38:20
….மலைகள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய் சொல்லுகிறேன்.
உலகத்தில் இதுவரை எத்தனையோ பூமி அதிர்ச்சிகள் உண்டாகி இருக்கின்றன. ஆனால், எவற்றிலும் மலைகள் இடிந்ததாகத் தகவல்கள் இல்லை. ஆனால், இஸ்ரேலில் வரப்போகும் பூமி அதிர்ச்சியோ மலைகளே இடியும் அளவுக்கு மகா பயங்கரமானதாக இருக்குமென வேதாகமம் சொல்லுகிறது. அதேபோல, செங்குத்தானவைகள் விழும் என்ற தீர்க்கதரிசன வார்த்தையும், நவீன உலகின் கட்டிடக்கலையாக இருக்கும் பல அடுக்குமாடி கட்டிடங்களின் வீழ்ச்சியையே குறிக்கிறது எனலாம்.
எசேக்கியேல் 38:22
கொள்ளை நோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன் மேலும் அவன் இராணுவங்களின் மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின் மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப் பண்ணுவேன்.
எசேக்கியேல் 39:4
நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன்.
எசேக்கியேல் 39: 12
இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களை புதைத்துத்தீர ஏழுமாதம் செல்லும்.
தன் ஆற்றலால் தான் உருவாக்கிய செயற்கையான அம்சங்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த மனிதனால் கூடுமானால், தன் ஆற்றலால் தான் உருவாக்கிய இயற்கையை தன் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த எவ்வளவு அதிகமாய் தேவனால் கூடும்! இஸ்ரேலை அழிக்கவரும் இராணுவங்களுக்கு எதிராக கர்த்தர் களமிறக்கப்போகும் தளவாடங்களும், கையிலெடுக்கப்போகும் ஆயுதங்களும் கூட இயற்கையும் அதன் சீற்றங்களுமே! இப்படி தான் தேர்ந்துகொண்ட புனித பூமியையும் மக்களையும் அதன் எதிரிகளிடமிருந்து அதிசயகரமான வகையில் மீட்கப்போகும் இயேசு கிறிஸ்து, மீண்டும் இந்த உலகிற்கு வரப்போவதும் இஸ்ரேலின் எருசலேமை மையமாகக் கொண்டிருந்தார்.
அப்போஸ்தலர் நடபடிகள் 1:14
உங்களிடத்தினின்று எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
சகரியா 14
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின் மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவ மலை தன் நடு மையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும், ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
…என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லா பரிசுத்தவான்களும் வருவார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த CAMPUS CRUSADE FOR CHRIST என்ற நிறுவனம், ஒலிவ மலையில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றை கட்ட விரும்பியது. கட்டிடப் பொறியாளர்கள் அதற்கானப் பரிசோதனைகளில் ஈடுபட்டபோது, ஒலிவ மலையானது கீழிருந்து மேலாகப் பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது எனக் கண்டுபிடித்தனர். அந்தப் பிளவானது இயேசு கிறிஸ்துவின் பாதங்கள் படத்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா? ஆக, இஸ்ரேல் என்ற நாடு உருவாகிவிட்டது…. தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான திட்டங்களும் தயார்நிலையில் இருக்கின்றன… ரஷ்யா, ஈரான் நாடுகளும் இஸ்ரேலின் மீது படையெடுக்க தயார் நிலையில் இருக்கின்றன… ஒலிவ மலையும் கூட தனக்குள்ளாகக் கர்த்தரின் பாதங்களை வரவேற்க பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது…. இவையெல்லாம் எதை உணர்த்துகிறது? இயேசுவின் வருகை நெருங்கிவிட்டது என்பதையே!
இரக்கத்தின் உருவமாகவே அறியப்பட்டு வரும் அவரது, உக்கிரக் கோபத்துடனே யாரால் சகிக்க முடியும்? இன்றே உங்களின் எல்லா பாவ, அக்கிரமச் செயல்களையும் விட்டு மனந்திரும்புங்கள்! இந்த பூமியின் ராஜா தன் குடிமக்களை அவரவர்களின் செயல்களுக்கேற்ப நியாயந்தீர்க்க வருகிறார்…
மத்தேயு 24:
அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலு திசைகளிலிமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.
யூதா 1 : 14, 15
….இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தி உள்ளவர்கள் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தி உள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்…
குமாரன் (இயேசு கிறிஸ்து) கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்யவான்கள். (சங்கீதம் 2:12)
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். (மாற்கு 16:16)
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 22:12)
ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
Leave a Reply