பாபிலோன். உலக அதிசயங்களுள் ஒன்றாக இருந்த தொங்கும் தோட்டத்திற்கு புகழ்பெற்ற பழம் பெரும் நகரம். இந்நகரை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த இனங்களில் கல்தேயர் எனும் இனத்தின் இரண்டாம் நெபுகத்நஸ்ஸார் எனும் மன்னன் குறிப்பிடத்தக்கவன். கட்டிடக்கலைக்கு புகழ்பெற்ற தொங்கும் தோட்டங்களும், பிரம்மாண்டமான இஷ்டார் வாசலும் இவனுடைய ஆட்சிக்காலத்தில் தான் கட்டப்பட்டன. அதோடு, பாபிலோன் என்ற ஓர் நகர சாம்ராஜ்யம், பிற நாடுகளையும் உள்ளடக்கி மிகப்பெரும் சாம்ராஜ்யமாக மாறியதும் இந்த மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் தான்.
| கனவுக்கலக்கமும் கோபக் கொலையாணையும் |
உலகம் வியக்க ஓர் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மன்னன் நெபுகத்நஸ்ஸார், ஒருநாள் தன் தூக்கத்தில் சில கனவுகளைக் காண்கிறான். அவை அவனுக்குள் கலக்கம் ஏற்படுத்த, தேசத்தின் சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் வரவழைத்து தான் கண்ட கனவையும் அதன் அர்த்தத்தையும் தெரிவிக்கச் சொல்கிறான். ஆனால், அவர்களால் அது கூடாமல் போகவே, மன்னன் இடத்திலிருந்து தேசத்தின் எல்லா ஞானிகளும் சாஸ்திரிகளும் கொல்லப்பட வேண்டுமென்கிற ஆணை பிறக்கிறது.
| தானியேலுக்குக் கிடைத்த தரிசனம் |
மன்னனின் இந்தக் கனவுக் கலக்கங்களும், கோபக் கொலையாணையும் இஸ்ரவேலில் இருந்து பாபிலோனுக்கு போர்க்காலத்தில் கொண்டு வரப்பட்ட இளம் ஞானி தானியேலுக்கும் அவனது தோழர்களுக்கும் தெரிய வருகிறது. தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள தேவனாகிய கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிறார்கள். தொடர்ந்து, இரவு வேளையிலே மன்னன் நெபுகத்நஸ்ஸார் கண்ட கனவும் அதன் அர்த்தமும், தானியேலுக்கு தேவனால் தரிசனம் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. தானியேல் மன்னன் கண்ட கனவையும் அதன் அர்த்தத்தையும் அவனுக்கு விடுவிக்கிறான். என்ன கனவு அது? என்ன அர்த்தம் அது?
தானியேல் 2: 31-35 ராஜாவே, நீர் ஒரு சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசும் பொன்னும், அதின் மார்பும் அதின் கைகளும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாய் இருந்தது.
நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டு வந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடை காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப் போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக் கொண்டு போயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியை எல்லாம் நிரப்பிற்று.
நெபுகத்நஸ்ஸாரின் கனவில் வந்த பயங்கரமான சிலையின் வெவ்வேறு உலோகப் பகுதிகளும், உலகில் அடுத்தடுத்து தோன்றப்போகும் வெவ்வேறு ராஜ்யங்களைக் குறிக்கின்றன என்பதே தானியேல் மூலமாக தேவன் கொடுத்த விளக்கம். அதேநேரத்தில், சிலையின் பொன்னாலான தலை, கனவைக் கண்ட நெபுகத்நஸ்ஸாரின் பாபிலோனிய சாம்ராஜ்யத்தையே குறிக்கிறது என்பதையும் தேவன் தெளிவுபடுத்தி விட்டார். தொடர்ந்து, ஒவ்வொரு சாம்ராஜ்யத்தின் தன்மையை குறித்தும் கூட தேவன் தானியேல் தீர்க்கதரிசியின் மூலமாக நெபுகத்நெஸ்ஸாரிடம் பேசினார்.
- பொன்னாலான தலை: இரண்டாம் நேபுதாக்நேச்சார் தலைமையிலான பாபிலோன் சாம்ராஜ்யம்
பொன்னான அந்தத் தலை நீரே. (தானியேல் 2:38)
இன்று நமக்கெல்லாம் அரிதாக இருக்கும் தங்கமானது, கல்தேயர் தலைநகரான பாபிலோனில் கோட்டைகள் துவங்கி கோவில்கள் வரைக்கும், மூல விக்ரஹங்கள் துவங்கி தோப்பு விக்ரஹங்கள் வரைக்கும் எங்கும் எதிலும் கிலோ கணக்கில் பயன்படுத்தப்பட்டிருந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால் தான் பரிசுத்த வேதாகமமான பைபிள் கூட பாபிலோனை ’பொன்னகர்’ எனக் குறிப்பிடுகிறது. அந்தப் பொன்னகரின் தலைவனான நேபுகாத்நேச்சார், தேவன் காண்பித்த கனவுச்சிலையில் பொன்னான தலையாக இடம்பெறுகிறார்.
உலகில் பரந்துவிரிந்த பேரரசுகள் எத்தனையோ தோன்றி இருக்கின்றன. ஆனால், இரண்டாம் நேபுகாத்நேச்சார் தலைமையிலான கல்தேய சாம்ராஜ்யமே முதன்முதலாக பல பிரதேசங்களை வெற்றிகொண்ட பரந்துபட்ட ராஜ்ஜியமாக விளங்கிற்று எனலாம். யூத இனத்தானான தானியேல், தங்கள் இனத்தை அடிமைப்படுத்திய மன்னன் என்றும் பாராமல் நேபுகாத்நேச்சாரைப் பற்றிப் பதிவு செய்திருக்கிற வார்த்தைகளில் இருந்தே, நேபுகாத்நேச்சார் எந்த அளவுக்கு வல்லமை பொருந்திய ராஜாவாக வரலாற்றில் இருந்திருக்கிறான் என்பதை உணர முடிகிறது.
| பாபிலோனின் வீழ்ச்சி |
பெரும்புகழோடு அரசாண்ட நெபுகத்நஸ்ஸாருக்குப் பிறகு, அவனது கல்தேய இனத்தின் சாம்ராஜ்ஜியம், கி.மு. 539-இல் CYRUS எனும் கோரேஸ் தலைமையில் நிகழ்ந்த MEDIANS-PERSIANS எனும் மேதிய – பெர்சியர்களின் கூட்டுப் படையெடுப்பால் முற்றிலும் அகற்றப்பட்டது.
இதோ நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; (ஏசாயா 13:17)
கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்க வேண்டுமென்பதே அவருடைய நினைவு; (எரேமியா 51:11)
நேபுகாத்நேச்சாரின் பேரனும் அப்போதைய பாபிலோன் ராஜாவுமாகிய பெல்ஷாத்சார் இந்தப் படையெடுப்பின்போது கொலை செய்யப்பட்டான். இந்த அழிவைக் குறித்து, கையுறுப்பைக் கொண்டும், தானியேல் தீர்க்கதரிசியைக் கொண்டும் தேவன் சொல்லிய தீர்க்கதரிசன வார்த்தைகள், சொல்லப்பட்ட நாளின் இராத்தியிலேயே நிறைவேறித் தீர்ந்தன. பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தை மேதியர்களும் பெர்ஷியர்களும் இரண்டாகப் பிரித்துக்கொண்டனர். பாபிலோன் மாநகரம் மேதியர்களுடைய ஆளுகைக்குள் வந்தது. மேதியனாகிய டேரியஸ் எனும் தரியு அதன் ராஜாவாய் பொறுப்பேற்றுக்கொண்டான்.
தானியேல் 5:26 பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.
30 அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். 31 மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான். (தானியேல் 5:30-31)
| பாழாய்ப்போன பாபிலோன் |
பாபிலோன் என்பது இன்றைய நிலையில், ஈராக் நாட்டின் பாபேல் என்னும் மாகாணத்தில் உள்ளது. இந்த பாபேல் ஈராக் தலைநகர் பாஹ்தாத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது. தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளின்படியே பல நூற்றாண்டுகளாக பாழடைந்து கிடக்கும் இந்த பாபிலோனை, தேவ வார்த்தைகளுக்கு எதிராக மறுபடியும் எடுப்பித்துக்கட்டும் பணிகளில் இறங்கினார் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன். தன்னை இரண்டாம் நேபுகாத்நேச்சாரின் மகன் எனவும் உருவகப்படுத்திக்கொண்டார். 1983 தொடங்கி பணிகளும் நடந்தன. ஆனாலும், அவரால் அதனை முழுமையாக முடிக்க முடியவில்லை. மாறாக, அவர் தான் முடிந்துபோனார்.
ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும். (ஏசாயா 13:19)
- வெள்ளியாலான பாகங்கள்: மேதிய – பெர்ஷிய சாம்ராஜ்ஜியம்
உமக்குப் பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும். (தானியேல் 2:39)
பாபிலோனை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த கல்தேயர் சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய மேதிய- பெர்சியப் பேரரசர்கள், அதே பாபிலோனை மையமாகக் கொண்டே ஆட்சி புரியத்தொடங்கினார்கள். அவர்களுடைய ’அக்கமெனிட்’ எனப்பட்ட ராஜ்ஜியம் மேற்கில் எகிப்து துவங்கி கிழக்கே இந்தியா வரைக்கும் 127 நாடுகளுக்கும் பரவியிருந்தது.
இந்து தேசம் (இந்தியா) முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது. (எஸ்தர் 1:1)
பாரசீகப் பேரரசு என தமிழில் குறிப்பிடப்படும் மேதிய – பெர்ஷிய சாம்ராஜ்யம் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் உலகைக் கோலோச்சியது.
மேதிய-பெர்ஷிய சாம்ராஜ்யத்தினர், இன்றைய ஈரான் மற்றும் துருக்கி பகுதிகளில் கோலோச்சியவர்கள். ஈரான் நாடும் கூட பல நூற்றாண்டுகளாக பெர்ஷியா என்ற பெயரில் தான் (தமிழில் : பாரசீகம்) இயங்கிவந்தது. 1935-இல் தான் ஈரான் என்ற பெயர்மாற்றம் கண்டது. இந்த பெர்சிய சாம்ராஜ்யத்திற்கும் கிரேக்கத்திற்கும் இடையே நிகழ்ந்த போர்கள் வரலாற்றுப் முக்கியத்துவம் வாய்ந்தவை.
தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளின்படியே, நெபுகத்நஸ்ஸாரால் 70 வருடங்கள் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர்களை, மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தின் மூலமாகத்தான் கர்த்தர் விடுதலை செய்தார். கர்த்தர் எழுப்பின கோரேஸ் (CYRUS) என்ற மன்னன், யூதர்களின் 70 வருட சிறையிருப்புக்கு முடிவு கட்டி, எருசலேமுக்குப் போய் தேவாலயத்தையும் கட்டுவிக்கும்படி கட்டளை இட்டான்.
2 நாளா 36:22 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ரஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 23 அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம் பண்ணினான்.
| மீண்டும் கட்டப்பட்ட எருசலேமும் ஆலயமும் |
தேவனுடைய ஆலயப்பணிகளுக்கும், எருசலேமின் அலங்கப்பணிகளுக்கும் மேதிய – பெர்சிய ராஜாக்கள் உதவி செய்வது – தடை விதிப்பது என இருவேறான நிலைப்பாட்டை மாறி மாறி எடுத்து வந்ததை எஸ்றா, நெகேமியா போன்றவர்கள் தங்கள் புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர். எனினும், இந்த பேரரசர்களின் காலத்தில், இவர்களுடைய ஆணை மற்றும் உதவிகளுடன் தான் தான் எருசலேம் தேவாலயமும் அலங்கமும் மீண்டும் எழும்பின. இவர்களின் காலத்தில் யூதர்கள் போர் உள்ளிட்ட எந்தவித பாதிப்புகளுமின்றி இஸ்ரேலில் சுகமாகத் தங்கியிருந்தனர். மேலும் இவர்களின் காலத்தில் தான் தானியேல், ஆகாய், சகரியா போன்ற தீர்க்கதரிசிகளும், மொர்தெகாய், எஸ்றா, நெகேமியா போன்ற புகழ்பெற்ற யூதத்தலைவர்களும் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெண்கலத்தாலான வயிறு மற்றும் தொடை பகுதிகள் : கிரேக்கப் பேரரசு
ஆனாலும் பராக்கிரமுமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான். (தானியேல் 11:3)
ஆனாலும் பராக்கிரமுமுள்ள ஒரு ராஜா எழும்பி…(தானியேல் 11:3)
மகா அலெக்சாண்டர். மாவீரன் அலெக்சாண்டர். அலெக்சாண்டர் தி கிரேட். உலகில் தோன்றிய ராஜாக்களில், வல்லமை, வீரதத்துவம், பராக்கிரமம் போன்ற வார்த்தைகளின் அடையாளமாக இன்றளவும் கொண்டாடப்படும் மன்னன். இந்த வீரம்மிக்க மாசிடோனிய இளைஞனின் எழுச்சிதான், க்ரீக் அல்லது கிரேக்கம் என்ற நிலப்பரப்புக்குள்ளேயே அடங்கியிருந்த கிரேக்க சிற்றரசுகளை ஒருங்கிணைத்து, கிரேக்கப் பேரரசாக உருமாற்றியது. உலகத்தையே வெற்றிகொள்ள வேண்டும் எனப் புறப்பட்ட அலெக்சாண்டரின் படைகள், போகிற போக்கில் சுமார் இருநூறு ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த மேதிய-பெர்ஷிய சாம்ராஜ்யத்திற்கும் ஓர் முடிவு கட்டி விட்டுச் சென்றன.
| பிரபலமாய் ஆண்டு… (தானியேல் 11:3) |
எத்தனையோ ராஜாக்கள் எத்தனையோ நாடுகளில் தோன்றி இருந்தாலும், உலகம் எங்கும் வாழும் எல்லா இனத்தாரும் அறிந்த ராஜாவாக இன்று வரை அலெக்சாண்டரே இருக்கிறான். ஆக, அவனைப் போல பிரபலமாய் ஆண்ட அரசன் வரலாற்றில் ஒருவனுமில்லை எனலாம்.
| தனக்கு இஷ்டமானபடி செய்வான். (தானியேல் 11:3) |
உலகத்தையே வெல்ல வேண்டும் என தன் இஷ்டத்தின் படி புறப்பட்டது முதல், நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற வெறியில் தொடர் பயணங்களாலும் யுத்தங்களாலும் படை வீரர்களை பலி வாங்கியது வரை… அலெக்சாண்டர் எல்லாவற்றையுமே தன் இஷ்டப்படிதான் செய்தான். இளம் மனைவியின் பிரிவுத்துயரம், பல காலநிலைகளில் பல சூழ்நிலைகளில் நிகழ்ந்த நீண்ட நெடிய போர்களால் தன் படைவீரர்களுக்கு உண்டான சிரமங்கள் என எதையுமே அவன் பொருட்படுத்தவில்லை. ஆனால், மீண்டும் தன் சொந்த நாட்டிற்குக் திரும்பும் வழியில், பாபிலோனிலேயே அவன் இறந்து போனது மட்டும், அவன் வாழ்வில் அவனுடைய இஷ்டமில்லாமல் எடுக்கப்பட்ட ’முடிவாகவே’ இருந்தது. 20 வயதில் தொடங்கி எல்லோரையும் போரில் வீழ்த்தியவனை 32 வயதிலேயே நோய் வீழ்த்தியது.
| கிரேக்கப் பேரரசின் வீழ்ச்சி |
பாபிலோன் சாம்ராஜ்யத்தை மேதிய-பெர்சிய படைகள் வீழ்த்தின. மேதிய – பெர்சிய சாம்ராஜ்யத்தை அலெக்சாண்டர் தலைமையில் எழுச்சி கண்ட மாசிடோனிய கிரேக்கப் படைகள் வீழ்த்தின. ஆனால், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை போர்க்களத்தில் செலவிட்டு, அலெக்சாண்டர் கட்டி எழுப்பிய சாம்ராஜ்ஜியமோ, அற்ப ஆயுளினால் அவனுக்கும் கிடைக்காமல், உடனிருந்தவர்களின் சூழ்ச்சிகளால் அவனுடைய குடும்பத்தாருக்கும் கிடைக்காமற்போய், அவனது நான்கு தளபதிகளால், நான்கு திசைகளுக்கும் ஏற்ப நான்கு ராஜ்ஜியங்களாகப் பிரித்துக்கொள்ளப்பட்டது. இதுபற்றி தானியேல் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசி, முன்னறிவித்த தீர்க்கதரிசன வசனங்கள் வரலாற்றில் அப்படியே நிறைவேறின.
’’அவன் எழும்பின பின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும், அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின் படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறே பேர்களிடமாய்த் தாண்டிப்போம்.’’ (தானியேல் 11:4)
- இரும்பாலான பாகங்கள்: ரோமானியப் பேரரசு
தானியேல் 2:40 நாலாவது ராஜ்யம் இரும்பைப் போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பை போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.
ரோமானியப் பேரரசு. ஜூலியஸ் சீஸர், அகஸ்டஸ் சீஸர், நீரோ, டிபேரியஸ் சீஸர் என நாமறிந்த சீஸர்களின் உலகம். இவர்களில் அகஸ்டஸ் சீஸரின் (அகஸ்து ராயனின்) காலத்தில் தான் இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளின் படியே இஸ்ரேலின் பெத்லஹேமில் பிறந்தார்.
லூக்கா 2:1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்து ராயனால் கட்டளை பிறந்தது.
டிபேரியஸ் சீஸரின் (திபேரியு ராயன்) 15-ஆம் வருஷமாகிய கி.பி. 29-ஆம் ஆண்டில் தான் யோவான்ஸ்நானனும் இயேசுவும், தங்கள் 30-ஆவது வயதில் ஊழியத்தைத் துவக்கினார்கள்.
லூக்கா 3:1-2 திபேரியு ராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே…… 2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
| ஆதித்திருச்சபையை உபத்திரவப்படுத்திய ரோமப் பேரரசர்கள் |
ரோமானியப் பேரரசர்கள், ஆதித்திருச்சபையை அதிகமதிகமாய் உபத்திரவப்படுத்தினார்கள். அப்போஸ்தலர்கள் யாக்கோபு, பேதுரு மற்றும் பவுல் உள்ளிட்ட பல்வேறு பரிசுத்தவான்களும், ரோமப் பேரரசர்களால் தான் கொலை செய்யப்பட்டார்கள். யோவான்ஸ்நானன், அப்போஸ்தலன் யாக்கோபு உள்ளிட்டவர்களின் மரணத்திற்கு ரோமப்பேரரசர்களால் நியமிக்கப்பட்ட ஏரோது என்ற அதிபதி காரணமாக இருந்தான். தேவனுடைய சபையோர் சுமார் 300 வருடங்கள் ரோமர்களின் உபத்திரவத்தைச் சந்தித்தார்கள். கான்ஸ்டண்டைன் கிறிஸ்தவத்தைத் தழுவிய பிறகே இதற்கொரு முடிவு வந்தது.
| உலகமெங்கும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் |
கி.பி. 70 ஆகஸ்ட் மாதத்தில் எருசலேம் நகரத்தை அழித்து, தேவாலயத்தைத் தீக்கிரையாக்கி அழித்து, 11 லட்சம் யூதர்களைக் கொன்று, உலக நாடுகளெங்கும் யூதர்களைச் சிதறடித்து, கொடிய உபத்திரவத்தை இஸ்ரேல் வாழ் யூதர்களுக்கு எதிராக முன்னெடுத்ததும் இந்த ரோமப்பேரரசு தான். இப்படி முதலாம் நூற்றாண்டில் இவர்களால் துரத்தி அடிக்கப்பட்ட யூதர்கள், அதன்பிறகு சுமார் 1868 ஆண்டுளுக்குப் பிறகுதான், இஸ்ரேல் நாட்டுக்குள் வந்தார்கள்.
ரோமானியப் பேரரசு ஐரோப்பிய கண்டத்தையும் தாண்டி, அதற்கும் முந்தைய பாபிலோனிய, பெர்சிய, கிரேக்கப் பேரரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களையும் கூட உள்ளடக்கி, மாபெரும் சாம்ராஜ்யமாகக் கோலோச்சியது.
பாபிலோனிய சாம்ராஜ்யம் ஒன்றரை நூற்றாண்டுகள் வரை தாக்குப்பிடித்தது. மேதிய-பெர்ஷிய சாம்ராஜ்யம் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் நிலை நின்றது. கிரேக்க சாம்ராஜ்யமோ குறுகிய காலத்தில் விஸ்வரூபமெடுத்து, வெகு விரைவிலேயே உடைந்தும் போனது; ஆனால், இவற்றைத் தொடர்ந்து வந்த ரோம சாம்ராஜ்யமோ கி.மு.வின் இறுதியில் துவங்கி, கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. ஆக, உலகம் தோன்றியது முதல் இப்பொழுது வரை நீண்ட காலம் கோலோச்சிய சாம்ராஜ்யமாக ரோம சாம்ராஜ்யம் பெயர் பெறுகிறது. தேவன், அதனை இரும்போடு ஒப்பிட்டு அடையாளப்படுத்தியது தான் எத்துணை பொருத்தம்!
தானியேல் 2:40 நாலாவது ராஜ்யம் இரும்பைப் போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பை போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.
- இரும்பும் களிமண்ணுமான பாதப்பகுதி : இரண்டாகப் பிரிந்த ரோம சாம்ராஜ்ஜியம்:
பரந்து விரிந்திருந்த ரோமானியப் பேரரசு கி.பி. 395-இல் முதலாம் தியோடேசியஸ் என்ற மன்னனின் மரணத்தோடு மேற்கு, கிழக்கு சாம்ராஜ்யங்களாகப் பிரிந்தது. இவன் தான் கிறிஸ்தவத்தைத் தழுவிய கான்ஸ்டண்டைனின் அடியொற்றி, கிறிஸ்தவத்தை ரோமப் பேரரசின் அதிகாரப்பூர்வ தேசிய மதமாக அறிவித்தவன். கிழக்குப் பகுதி சாம்ராஜ்ஜியம் பைசாண்டியன் பேரரசாக மாற, மேற்கு பகுதி பழைய ரோமானியப் பேரரசின் உறுதியில் கொஞ்சத்தை மட்டும் கொண்டிருந்து கி.பி. 476 வரை நீடித்தது. அது, வடக்கில் பலம்பெற்று தொடர் தாக்குதல்கள் நடத்திய ஜெர்மானிய பழங்குடிகளால் வீழ்ச்சி அடைந்தது.
|தானியேல் 2:41| பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும், களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
5A | இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் | கிழக்கு ரோம சாம்ராஜ்யம் |
ரோம சாம்ராஜ்யம், மேற்கு – கிழக்காகப் பிரிக்கப்பட்ட பின்னர், மேற்கு பகுதிக்கு புகழ்பெற்ற ரோம் தலைநகராக விளங்க, கிழக்குப் பகுதிக்கு கான்ஸ்டாண்டிநோபிள் தலைநகரானது. ’கிழக்கு ரோமப் பேரரசு’, ’பைசாண்டியன் பேரரசு’ மற்றும் ’பைசாண்டியம்’ என மூன்று பெயர்களில் இப்பேரரசு அழைக்கப்பட்டாலும், குடிமக்களோ தங்கள் பேரரசை ’ரோமப்பேரரசு’ என்றே தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார்கள். ஏனெனில், ரோமப்பேரரசின் அடையாளமான ரோம் நகரத்தை இழந்திருந்தாலும், அதன் இன்னொரு அடையாளமான ’உறுதி’யானது, கிழக்கு சாம்ராஜ்ஜியத்திடம் தான் கொஞ்சமாவது இருந்து வந்தது.
ஏனெனில், ரோமை தலைநகராகக் கொண்ட மேற்கு ரோமப்பேரரசு அடுத்த ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே முழுமையான வீழ்ச்சியைச் சந்தித்துவிட்டது. ஆனால், கிழக்கு ரோமப் பேரரசோ, கி.பி. 395 தொடங்கி கி.பி. 1453 வரை என ஆயிரம் வருடங்கள் தாண்டியும் நிலைநின்றது.
5B | இரும்பின் உறுதியை ஒட்டுமொத்தமாய் இழந்த மேற்கு சாம்ராஜ்யம் |
’கிழக்கு ரோமானியப் பேரரசு’ ’பைசாண்டியன் பேரரசு’ என்ற பெயரில் உண்மையான ரோமப்பேரரசாக நிலைத்துவிட, ரோம் நகரை தலைநகராகக் கொண்ட மேற்கு ரோமானியப் பேரரசோ, தன் ஒட்டுமொத்த உறுதியையும் இழந்து, கி.பி. 476-இல் வீழ்ந்தது. அது, வடக்கில் பலம்பெற்று தொடர் தாக்குதல்கள் நடத்திய ஜெர்மானிய பழங்குடிகளால் வீழ்ச்சி அடைந்தது. மேற்கு – கிழக்காகப் பிரிந்த கி.பி. 395-லிருந்து 81 வருடங்களுக்குள்ளாகவே அப்பேரரசு மொத்தமாகவே வீழ்ந்துபோனது ஆச்சரியம்தான்.
| புதிய ஐரோப்பாவாய் உருமாறத் தொடங்கிய மேற்கு சாம்ராஜ்யம் |
ரோமானியப் பேரரசுக்கு ஓர் முடிவு கட்டிய ஜெர்மானியப் பழங்குடிகள், அதற்கு முன்பிருந்தே ஐரோப்பா முழுவதும் இடம்பெயர்ந்து, ஆங்காங்கே வசித்த பல்வேறு இனங்களோடும் கலந்து, புதிய இனங்களும், புதிய மொழிகளும், புதிய அரசுகளும் உருவாகக் காரணமாக இருந்தார்கள். அப்படி அவர்கள் ஜெர்மனியோடு இன்றைய பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளின் நிலப்பரப்புகளையும் உள்ளடக்கி ’ஃப்ரான்கிஷ்’ எனும் ராஜ்ஜியத்தை நிறுவினார்கள். அந்த ஃப்ரான்கிஷ் அரசின் மேற்கு பகுதி பிற்காலத்தில் ஃப்ரான்ஸ் நாடாகவும், கிழக்குப் பகுதி ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளாகவும் மாற்றம் கண்டன. அதேபோல, ரோமன் பிரிட்டன் என்ற தீவுக்கூட்டங்களின் பகுதியில் ஜெர்மானிய ஆங்கிலோ மற்றும் சாக்ஸன் இனத்தவர் குடியேறி உருவாக்கிய சிற்றரசுகள், கி.பி. 927-இல் இங்கிலாந்து எனும் ராஜ்யமாக உருவெடுத்தன.
| இன்றைய ஐரோப்பாவை உருவாக்கிய இடம்பெயர்வு காலம் |
இவை மட்டுமில்லை… ஐரோப்பாவின் ஏனைய நாடுகளும் கூட இவை போன்ற ஜெர்மானியர் உள்ளிட்ட பல்வேறு இனங்களின் இடம்பெயர்வுகளாலும் இனக்கலப்புகளாலுமே உருவாகின. ஐரோப்பா இடம்பெயர்வுகளால் புதிய வடிவம் காணத்தொடங்கிய கி.பி. 4 ஆம் நூற்றாண்டு துவங்கி, 7-ஆம் நூற்றாண்டு வரையான இந்தக் காலக்கட்டத்தை MIGRATION PERIOD அதாவது இடம்பெயர்வு காலம் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி வேறுபட்ட இனங்களின் நகர்வுகளாலும் கலப்புகளாலும் உருவான ஐரோப்பிய இனங்கள், தங்களுக்கென தனிப்பட்ட ராஜ்யங்களைக் கண்டன; இப்போதும் அவை மற்ற நாடுகளோடே ஐரோப்பிய யூனியன் என்ற பெயரில் இணைந்து செயல்படுகின்றன. ஆனாலும், தங்கள் இனம், மொழி, வரலாறு ஆகியவற்றின் அடிப்படைகளால் தனித்தனி நாடுகளாவே செயல்பட்டு வருகிறார்கள்.
| கத்தோலிக்க தலைமையை கலங்கடித்த மேற்கின் வீழ்ச்சி |
மேற்கு ரோமானியப்பேரரசு மிகக்குறுகிய காலத்தில் வீழ்ந்துபோன வேதனை யாருக்கு இருந்ததோ இல்லையோ ’ரோமன் கத்தோலிக்க தலைமைக்கு அதிகம் இருந்திருக்கும். ஏனெனில், வீழ்ச்சிக்குக் கொஞ்சக் காலத்திற்கு முன்புதான் தியோடேசியஸ் என்ற மன்னன், கிறிஸ்தவத்தை ரோம ராஜ்ஜியத்தின் அதிகாரபூர்வ மதமாக அறிவித்திருந்தான். ரோமன் கத்தோலிக்க சபையும் எழும்பி. போப் உள்ளிட்ட மதகுருமார்கள் செயல்படத் தொடங்கியிருந்தார்கள். உலகத்தின் ஒப்பற்ற பேரரசின் அதிகாரபூர்வ மதத்தின் அங்கீகாரம் பெற்ற சபை, பேரரசரின் பெருந்துணை என பெரிய உற்சாகம் கத்தோலிக்கத் தலைமைகளுக்கு! ஆனால் அதெல்லாம் கொஞ்சம் காலத்திலேயே கண்ணுக்கு முன்னால் காணாமற்போனால் எப்படியிருக்கும்!
| கத்தோலிக்க தலைமையால் தொடங்கிய தூய ரோமன் பேரரசு|
கி.பி.800, டிசம்பர் 25-ஆம் தேதி. அப்போதைய ரோமன் கத்தோலிக்க போப் மூன்றாம் (LEO |||) லியோ, கி.பி.476-இல் வீழ்த்தப்பட்ட மேற்கு ரோமப் பேரரசை (WESTERN ROMAN EMPIRE) மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ‘மேற்கு ஐரோப்பியம்’ (WESTERN EUROPE) என்ற பெயரில் மீண்டும் நிறுவினார். புதிய ராஜ்ஜியத்தின் பேரரசனாக ப்ரான்கிஷ் ராஜ்ஜியத்தின் அரசன் சார்லெமெக்னே ஏற்படுத்தப்பட்டான். மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் அக்காலக்கட்டத்தில் கோலோச்சிய பல்வேறு ராஜ்ஜியங்களின் கூட்டமைப்பாக இப்பேரரசு விளங்கியது. ரோமப்பேரரசின் சில அடிப்படை விதிகளின்படி இப்பேரரசு செயல்பட்டாலும், துவக்கத்திலேயே ‘தூய ரோமன் பேரரசு’ என பெயரில் அழைக்கப்படவில்லை. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இருந்துதான் அதற்கு ‘தூய ரோமன் பேரரசு’ என்ற பெயர் வழங்கத்தொடங்கியது.
| அரசில் முக்கியப்பங்கு வகித்த கத்தோலிக்க தலைமை |
ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றிய மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய ராஜ்ஜியங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட தூய ரோமன் பேரரசு பலவிதங்களிலும் கத்தோலிக்க தலைமையின் ஆதிக்கம் சார்ந்தே செயல்பட்டது. அதனால்தான் ‘தூய ரோமப் பேரரசு’ என்ற பெயர். தாங்கள் நம்பிய ரோமப்பேரரசு வீழ்ந்தாலும், தாங்களே ஒருங்கிணைத்த ஓர் பேரரசு, கிழக்கு ரோமானியப் பேரரசை போலவே 1000 வருடங்கள் தாண்டியும் நிலைத்துநின்றது கத்தோலிக்க தலைமைக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனால், அந்த மகிழ்ச்சியை, இடையில் கி.பி. 1555-இல் வெளிப்பட்ட ஜெர்மானிய மார்ட்டின் லூத்தர் தன் ஆவிக்குரிய புரட்சி மூலம் புரட்டிப்போட்டது தனித்தலைப்பில் பேச வேண்டிய நிகழ்வு.
| ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்த தூய ரோமன் பேரரசு |
ஆம். HOLY ROMAN EMPIRE 1006 வருடங்கள், அதாவது கி.பி. 800 முதல் கி.பி.1806 வரை வரலாற்றில் நிலைத்து நின்றது. அந்த ஆயிரம் வருடமும் ரோமன் கத்தோலிக்கம் அப்பேரரசின் தேசிய மதமாகவும் விளங்கியது. ப்ரான்ஸிலிருந்து விஸ்வரூபமெடுத்த நெப்போலியன் போனபர்டின் எழுச்சிமிகு யுத்தங்களாலும், அதனால் ஐரோப்பாவில் உருவான புதிய மாற்றங்களாலும் இப்பேரரசு முடிவுக்கு வந்தது.
இப்படி வேறுபட்ட இனங்களின் நகர்வுகளாலும் கலப்புகளாலும் உருவான ஐரோப்பிய இனங்கள், தங்கள் மொழி, பண்பாடு மற்றும் வரலாறுகளின் அடிப்படையில் தங்களுக்கென தனித்தனி நாடுகளாகவே இயங்கி வருகின்றன. ஆனாலும், அன்று ‘தூய ரோமன் பேரரசு’ என்ற பெயரில் இணைந்து செயல்பட்டது போல, இன்றும் ஐரோப்பிய யூனியன் என்ற பெயரில் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
- பாதி இரும்பும் பாதி களிமண்ணுமான பத்துவிரல்கள்: மேற்கு ஐரோப்பிய ஒன்றியம்!
கிழக்கு ரோமானியப் பேரரசோடு ஒப்பிடும்போது, மேற்கு ரோமானியப் பேரரசு விரைவில் வீழ்ந்துபோனது என்றாலும், அது அஸ்திபாரப்பட்டிருந்த மேற்கு ஐரோப்பியப் பகுதி நாடுகள் தான் பிற்பாடு உலகத்தையே கலக்கின. உதாரணமாக, ரோமானியப் பேரரசில் இருந்து உருவான பிரிட்டன், ப்ரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் காலனி ஆதிக்கத்தில் அமெரிக்க, ஆசிய, ஆப்ரிக்க நாடுகள் எல்லாம் இருந்தன. அதேபோல ஹிட்லரின் ஜெர்மனியும் முஸோலினியின் இத்தாலியும் கண்ட எழுச்சி உலகையே உலுக்கியது. உலகத்தில் இதுவரை நிகழ்ந்துள்ள இரு உலகப்போர்களுமே இந்த ஐரோப்பிய நாடுகளாலும் அவற்றின் ஆதிக்கப் போட்டிகளாலுமே நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகள் எல்லாம் மேற்கு ஐரோப்பிய ஒன்றியம் (WESTERN EUROPEAN UNION) என்ற 10 நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
| பத்து நாடுகளின் பட்டியல் |
- பெல்ஜியம்
- பிரான்ஸ்
- ஜெர்மனி
- கிரீஸ்
- இத்தாலி
- லக்சம்பர்க்
- தி நெதர்லேண்ட்
- போர்ச்சுகல்
- ஸ்பெயின்
- யுனைடட் கிங்டம் (பிரிட்டன்)
வரலாற்று அடிப்படையில் பார்த்தால், ரோமானியப் பேரரசு அழிந்துவிட்டது என்பது போல ஓர் தோற்றம் இருந்தாலும், அது ஐரோப்பிய யூனியன் என்ற பெயரில் மீள் உருவாக்கம் கண்டிருக்கிறது என்பதே உண்மை. அவை நிகழ்த்திய இரு உலகப்போர்களே அவற்றிற்குள் அப்படிப்பட்ட ஐக்கியத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
மேற்கு ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில் முன்பு செயல்பட்டு, 2011-இல் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்ட இந்த 10 நாடுகளே ஐரோப்பிய யூனியனின் உண்மையான பலம்.
|வெளி 17:12| நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனே கூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள் போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
| ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையான உரம் |
இவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கே இராணுவ பலம் மிக்க நாடுகள் என்பதோடு, பலம்மிக்க NATO அமைப்பு உருவானதிலும், இன்று வரையிலான அதன் செயல்பாடுகளிலும் மிக முக்கியப் பங்காற்றி வருவதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் நாடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் உண்மையான இராணுவக் கூட்டமைப்பாகவும் இருக்கின்றன.
இந்த 10 மேற்கு ஐரோப்பிய நாடுகள் தவிர, மேலும் 17 நாடுகளும் ஐரோப்பிய கண்டத்தின் மேற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இருந்து ஐரோபிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்றன. (மொத்தம் 27 நாடுகள்). ஆனாலும், ஒன்றியத்தின் உண்மையான உரம் (பலம்) 10 நாடுகளிடம் தான் இருக்கிறது. மற்ற 17 நாடுகளும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் கிடைக்கிற பலம், பாதுகாப்பு, பொருளாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைச் சார்ந்திருக்கிற நாடுகளாகவே இருக்கின்றன.
ஆக, ஐரோப்பிய யூனியன் என்பது ஒரு பாதி உறுதியான நாடுகளின் கூட்டமைப்பாகவும், மறுபாதி சிறுசிறு நாடுகளின் நெரிசலான கூட்டமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.
ஐரோப்பிய யூனியனில் இன்று 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனாலும் இராணுவ மற்றும் வாக்களிக்கும் பலங்களின் அடிப்படையில் பார்த்தால் WESTERN EUROPEAN UNION அதாவது மேற்கு ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில் முன்பு செயல்பட்டு, 2011-இல் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்ட இந்த 10 நாடுகளே ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையான பலம். இந்த 10 நாடுகளிலிருந்து சில நாடுகள் வெளியேறும். கடந்த வருடம் பிரிட்டன் வெளியேறியது. இப்படி மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அந்திகிறிஸ்து வரும்போது திருவசனம் நிறைவேறும்படியாக, ஐரோப்பிய யூனியனில் இருக்கிற இந்த 10 நாடுகள் என்கிற எண்ணிக்கையில் ஒன்றும் குறையாது.
வெளி 17:12 நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனே கூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள் போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள். 13 இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
மற்றபடி இதர 18 நாடுகளால் ஐரோப்பிய யூனியனுக்கு பலம் என்பதை விட, ஐரோப்பிய யூனியனால் அந்நாடுகளுக்கு பலம் என்பதே உண்மை. ஆக, ஐரோப்பிய யூனியன் என்பது ஒரு பாதி உறுதியான நாடுகளின் கூட்டமைப்பாகவும், மறுபாதி சிறுசிறு நாடுகளின் நெரிசலான கூட்டமைப்பாகவும் இருக்கிறது.
தானியேல் 2:42 கால் விரல்கள் பாதி இரும்பும், பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒரு பங்கு உரமும் ஒரு பங்கு நெரிசலாயிருக்கும்.
| அந்திகிறிஸ்துவுக்கு முன் வெளியேற வேண்டிய 3 நாடுகள் |
திருவசனம் நிறைவேறும்படியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உரமாக இருக்கிற 10 நாடுகளின் பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ வேண்டியதிருக்கிறது.
|தானியேல் 7:8| அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது.
பத்து கொம்புகளாகிய பலம்மிக்க 10 நாடுகளிலிருந்து 3 நாடுகள் மட்டும் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேற வேண்டும். ஐரோப்பாவின் மிக முக்கியமான நாடான யுனைடட் கிங்டம் (பிரிட்டன்) ஏற்கெனவே வெளியேறிவிட்டதால் ஒரு கொம்பு பிடுங்கப்பட்டுவிட்டது. இன்னும் இரண்டு கொம்புகள் பிடுங்கப்படும்படியாக, 2 நாடுகள் வெளியேற வேண்டும். இப்படி வெளியேறும் 3 நாடுகளின் இடங்கள், மேற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கெனவே இணை (ASSOSIATE) மற்றும் பார்வையாளர் (OBSERVING) நாடுகளாக இருந்த 17 நாடுகளில் 3 நாடுகளுக்குக் கிடைக்கும். ஆக, 7 பழைய கொம்புகளும் 3 புதிய கொம்புகளுமான மாற்றம் கண்ட 10 நாடுகளும் சேர்ந்து, அவற்றிற்கு மத்தியில் புதிதாக எழும்பப்போகும் ‘சின்ன கொம்’பாகிய ஒரு நாட்டின் தலைவனான அந்திகிறிஸ்துவுக்கு தங்கள் முழு பலத்தையும் அதிகாரத்தையும் அளிப்பார்கள்.
தானியேல் 17:13 இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
| 2000 வருடங்களாய் தொடரும் ரோமப்பேரரசு |
உலக வரலாற்றை ஓரளவு அறிந்த ஒருவரிடம், இப்போது ரோமானியப்பேரரசு இருக்கிறதா இல்லையா என்று கேட்டால், அவர் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வார். ஆனால் யதார்த்தம் என்னவென்றால் ரோமப்பேரரசு என்பது இரண்டாயிரம் வருடங்களாக இன்னும் உயிரோடிருக்கிறது என்பதே. கி.பி.395-இல் ரோமானியப் பேரரசு இரண்டாகப் பிரிந்தபோது, மேற்குப்பகுதி விரைவில் வீழ்ந்தாலும், கிழக்குப்பகுதி ஆயிரம் வருடங்கள் தாண்டியும் நிலைத்துநின்றது. சரி. அதுவும் கி.பி.1453-இல் வீழ்ந்தபோது, அதற்கும் முன்பாகவே மேற்குப்பகுதியில் கி.பி.800-இல் துவங்கிய ‘தூய ரோமன் பேரரசு’ கி.பி.1806 வரை நிலைநின்றது. ஆக, கி.மு.27-இல் எழும்பிய ரோமப் பேரரசு கி.பி.1806 வரை நீடித்து, 1833 வருடங்கள் உலகில் நேரடியாகவே கோலோச்சி இருக்கிறது. அப்படியென்றால் அதோடு அதன் ஆதிக்கம் முற்றுப்பெற்றுவிட்டதா?
| பிரிட்டன் வடிவில் ரோமப்பேரரசு |
1806-இல் உலக வரலாற்றில் ‘ரோம பேரரசு’ பெயரளவில் தான் மறைந்தது. ஆனால், அதன் ஆளுகை மட்டும் இன்னும் மறையவில்லை. தூய ரோமன் பேரரசு வீழ்ந்த அதே 1800-களில், இங்கிலாந்து என்ற பெயரில் எழும்பிய ரோமன் பிரிட்டன் தீவுகள், உலகின் பெரும்பகுதியை தன் ஆளுகைக்கீழ் கொண்டு வந்தன. பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற ரோம ஆளுகை நாடுகளும் இங்கிலாந்தோடு போட்டிப்போடு பல நாடுகளைப் பங்கிட்டன. 1945-இல் நிகழ்ந்த இரண்டாம் உலக யுத்தம் வரைக்கும் ரோம ஐரோப்பிய நாடுகள் பல கண்டங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தின.
| அமெரிக்கா வடிவில் ரோமப்பேரரசு |
இவற்றிற்கிடையில், ரோம ஐரோப்பியர்கள் குடியேறி உருவாக்கிய அமெரிக்காவும் இரண்டு உலகப்போர்களுக்கு இடையில் மிகப்பெரிய வல்லரசாக உருவெடுத்தது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தொடங்கி, அவர்களின் பல கட்டிடங்களும், ஆட்சி அமைப்பு முறைகளும் ரோமர்களின் அடியொற்றியவையே. ஆக, ‘பெரியண்ணன்’ எனப்படும் அமெரிக்காவின் வடிவிலும் ரோமப்பேரரசு இந்த பூமியில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது.
| ஐரோப்பிய ஒன்றிய வடிவில் ரோமப்பேரரசு |
பிறகு 1949-இல் தொடங்கி ரோமானிய ஆதிக்க ஐரோப்பிய நாடுகள் ஒரே ஒன்றியமாக, ஒரே சட்டதிட்டங்களின் கீழ் இன்றுவரை இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த ஐரோப்பிய ஒன்றியம், பழைய ரோமப்பேரரசு மற்றும் தூய ரோமன் பேரரசின் புதிய வடிவமாகவே வேத அறிஞர்களால் பார்க்கப்படுகிறது. அதனால்தான் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை ’REVIVED ROMAN EMPIRE’ மற்றும் ‘HOLY ROMAN EMPIRE என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். ஆம். பழைய ரோமப்பேரரசு ’ஐரோப்பிய ஒன்றியம்’ என்ற பெயரில் மீள் உருவாக்கம் கண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்குள் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் உண்டாக்கிய பாதிப்புகளே அவற்றிற்குள் அப்படிப்பட்ட ஐக்கியத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் இன்று 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ’தூய ரோமன் பேரரசை’ போப் மூன்றாம் லியோ ஏற்படுத்தியபோதும் அது ‘மேற்கு ஐரோப்பியம்’ என்ற பெயரில் தான் செயல்படத்தொடங்கியது. ஆனால், பின்னர் அது ‘தூய ரோமன் போரரசு’ எனப் பெயர் பெற்றது. அதேபோல, நாளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பெயரும் அந்திகிறிஸ்து வந்தபிறகோ அல்லது அவன் வருவதற்கு முன்னமேயோ கூட ‘ரோமப்பேரரசு’ என அழைக்கப்படத்தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
| பத்து நாடுகளின் வடிவில் ரோமப்பேரரசு |
இப்படி 2000 வருடங்களுக்கும் மேலாகப் பல வடிவங்களில் தொடர்ந்து கோலோச்சிக்கொண்டே இருக்கும் ரோமப்பேரரசின் இறுதிக்கால வடிவம்தான் அந்திகிறிஸ்து தலைமையிலான பத்து ராஜாக்களின் எழுச்சி. இந்த பத்து ராஜாக்களின் ஆளுகையோடுதான் உலகில் ரோமப்பேரரசின் ஆளுகை முடிவுக்கு வரும். உலகமும் முடிவுக்கு வரும். அந்திகிறிஸ்துவை பலத்தால் இடைக்கட்டப்போகும் இந்த பத்து ராஜாக்களை பரிசுத்த வேதாகமம் ’பத்து விரல்கள்’ ‘பத்துக் கொம்புகள்’ என இரண்டு விதங்களில் உருவகப்படுத்துகிறது. அதாவது கடைசிகால ராஜ்ஜியங்களை நான்கு வகை உலோகச்சிலை மூலம் வெளிப்படுத்திய தரிசனத்தில் பத்து விரல்களாகவும், அதே ராஜ்ஜியங்களை நான்கு வித மிருகங்களாக வெளிப்படுத்திய தரிசனத்தில் பத்துக் கொம்புகளாகவும் பத்து நாடுகள் அடையாளப்படுத்தப்பட்டன.
|தானியேல் 2:42| கால் விரல்கள் பாதி இரும்பும், பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒரு பங்கு உரமும் ஒரு பங்கு நெரிசலாயிருக்கும்.
|தானியேல் 7:7| அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.
தானியேல் கண்ட நாலாம் மிருகம் ரோமானிய சாம்ராஜ்யத்தைக் குறிப்பது. அதற்கு இருக்கும் பத்துக்கொம்புகளும் பத்து நாடுகளைக் குறிப்பது என்றால், இன்றைய இந்த பத்து நாடுகளும் அன்றைய அந்த ரோமானியப்பேரரசுடையது தானே! ஆக, கி.மு.27-இல் துவங்கிய ரோமானியப்பேரரசு எனும் நாலாம் மிருகம் இன்னும் உலகில் உயிர்ப்புடன் இருக்கிறதுதானே!
அப்படியென்றால் இந்த மிருகத்தின் ராஜ்ஜியத்தை அழிக்கும் ஆற்றல் இந்த உலகத்தில் வேறெந்த ராஜ்ஜியத்திற்கும் கிடையாதா? ஆம். கிடையாதுதான். இந்த உலகத்தின் எந்த ராஜ்ஜித்திற்கும் அந்த ஆற்றல் கிடையாது. ஆனால், பரலோகத்திலிருந்து இறங்கி வரப்போகிற ஒரு ராஜ்ஜியத்திற்கு அந்த அளவில்லாமல் உண்டு.
தானியேல் 7:11 அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலை செய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
சிலையை மோதி அழிக்கும் கல் : இறங்கி வரப்போகும் இயேசுவின் ராஜ்ஜியம்:
சிலையின் தலை முதல் பாதத்தின் பத்து விரல்கள் வரையான பாகங்கள் அடையாளப்படுத்திய ராஜ்ஜியங்களைப் பற்றிப் பார்த்தோம். இனி சிலையின் பாதத்தில் மோதி, முழுச்சிலையையே தூள்தூளாக்கி காற்றில் பறக்கவிடப்போகும் ’கல்’ எந்த ராஜ்ஜியத்தைக் குறிப்பிடுகிறது என்று பார்ப்போம்…
தானியேல் 2:34 நீர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டு வந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
சிலையின் ஒவ்வொரு பாகமும் உலகில் தோன்றிய வெவ்வேறு ராஜ்யங்களைக் குறிக்கின்றன எனக் கண்டோம். சிலை மட்டுமல்ல…. சிலையை மோதி ஒன்றுமில்லாமல் ஆக்கிய கல்லும் கூட உலகத்தில் அடுத்து வரப்போகும் ஓர் சாம்ராஜ்யத்தையே குறிக்கிறது.
தானியேல் 2:34 நீர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டு வந்தது;
|கைகளால் பெயர்க்கப்படாத கல்|
’கைகளால் பெயர்க்கப்படாத கல்’ என்பதற்கு, அது எல்லாக் கற்களையும் போல் பூமியின் மேல் கிடக்காத கல் என்பதே பொருள். அப்படி அது பூமியின் மேல் கிடந்திருந்தால் மனித கைகளால் அதனை பெயர்த்து எடுத்திருக்க முடியும். ஆக தரை மட்டத்தில் இல்லாத, மனிதர்களால் பெயர்க்க முடியாத ஒரு கல்…. அந்தரத்திலிருந்தோ அல்லது உயரத்திலிருந்தோ வருகிற கல்லாக அல்லவா இருக்க முடியும்?
அதுபோலவே வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்ஜியம், மற்ற ராஜ்ஜியங்களைப் போல இந்த உலகத்தில் ஏற்கெனவே இல்லாத பரலோக ராஜ்ஜியம் ஆகும். மற்ற ராஜ்ஜியங்கள்… மனித கைகளால் பெயர்த்து எடுக்கப்பட்டு, இன்னொருவர் மீது வீசப்படும் கல்லைப் போல, மன்னர்களின் கையசைவுக்கு எழும்பி, இன்னொரு ராஜ்ஜியத்தைத் தாக்கியவை. மாறாக, கிறிஸ்துவின் ராஜ்ஜியமோ, தானே பெயர்ந்து வருகிற கல்லைப்போல, வானங்களுக்கு மேலாக வாசம் பண்ணுகிற தந்தை கடவுளின் விருப்பத்தின் படி உலகத்தை நோக்கி இறங்கி வரும் ராஜ்ஜியம் ஆகும்.
தானியேல் 2:34-35 அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. 35 அப்பொழுது அந்த இரும்பும் (ரோமானியப் பேரரசு) களிமண்ணும் (ஐரோப்பிய யூனியன்) வெண்கலமும் (கிரேக்கப் பேரரசு) வெள்ளியும் (மேதிய–பெர்சியப் பேரரசு) பொன்னும் (பாபிலோனியப் பேரரசு) ஏகமாய் நொறுங்குண்டு, கோடை காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப் போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டு போயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியை எல்லாம் நிரப்பிற்று.
|அந்திகிறிஸ்துவை அழிக்கவரும் இயேசு கிறிஸ்து|
பாபிலோனிய சாம்ராஜ்யம் மேதிய-பெர்சிய சாம்ராஜ்யத்தால் அழிக்கப்பட்டது; மேதிய-பெர்சிய சாம்ராஜ்யமோ கிரேக்க சாம்ராஜ்யத்தால் அழிக்கப்பட்டது; கிரேக்க சாம்ராஜ்யமோ அலெக்சாண்டரின் தளபதிகளால் நான்கு ராஜ்யங்களாகப் பகுக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றிலிருந்து உருவான ரோம சாம்ராஜ்யமோ, மேற்கு சாம்ராஜ்யம் ஜெர்மானியப் பழங்குடிகளாலும், கிழக்கு சாம்ராஜ்யம் ஒட்டமான் துருக்கி சாம்ராஜ்யத்தாலும் அழிக்கப்பட்டது. இப்படி, இந்த சாம்ராஜ்யங்களின் முடிவுரைகள் எல்லாம் இந்த பூமியில் தோன்றிய இன்னொரு சாம்ராஜ்யத்தினாலேயே எழுதப்பட்டன. ஆனால், இந்த கடைசி காலத்தில் எழும்பப்போகிற, அந்திகிறிஸ்துவின் சர்வாதிகார சாம்ராஜ்யமோ, பரலோகத்திலிருந்து இறங்கி வரப்போகிற இயேசு கிறிஸ்துவின் நித்திய சாம்ராஜ்யத்தாலேயே அழிக்கப்படும். அதோடு, உலகத்தில் மனிதர்கள் தலைமையிலான ஆளுகை முறைகளுக்கு ஒட்டுமொத்தமாக முடிவுரை எழுதப்படும். மாறாக, உலகத்தைப் படைத்த தேவனுடைய ராஜ்ஜியம் இயேசுவின் தலைமையில் எருசலேமை மையமாகக் கொண்டு ஸ்தாபிக்கப்படும். இயேசு கிறிஸ்து முழு உலகத்தையும் நீதியோடு அரசாளுவார்.
சகரியா 14:9| அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார்; அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
|அழிவே இல்லாத நித்திய ராஜ்ஜியம்|
இயேசு கிறிஸ்துவின் சாம்ராஜ்யத்திற்கும் மனிதர்களின் சாம்ராஜ்யங்களுக்குமான மிக முக்கியமான வித்தியாசங்களுள் ஒன்று, மற்ற சாம்ராஜ்யங்களை எல்லாம் இன்னொரு சாம்ராஜ்யம் எழுந்து அழித்துப்போட்டது. ஆனால், அந்திகிறிஸ்துவின் சாம்ராஜ்யத்திற்கு பிறகு எழும்பப்போகும் கிறிஸ்துவின் சாம்ராஜ்யத்தையோ எவராலும் எந்தக் காலத்திலும் அழிக்கவே முடியாது. அது அழிக்கவே முடியாததாய், நித்தியம் எனப்படும் முடிவே இல்லாத சாம்ராஜ்யமாய் இருக்கும். விரைவில் வரப்போகும் அந்த சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கப்போகிறவர், உலகத்தையும், அதில் உள்ள யாவற்றையும் அதோடு உங்களையும் என்னையும் கூட உண்டாக்கின வானங்களுக்கு மேலாய் உன்னதத்தில் வாழும் தேவன். அவரது சாம்ராஜ்யத்தின் ராஜாதி ராஜாவாய் இருக்கப் போகிறவர், அவரது ஒரே மகனான இயேசு கிறிஸ்து.
வெளி 11:15| ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
தானியேல் 7:13| இராத்தரிசனங்களில் நான் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். 14 சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.
இதுவரைக்கும் நாம் பார்த்த சாம்ராஜ்யங்கள் எல்லாம் இந்த உலகத்தில் இருந்தவையே என்பது எந்த அளவுக்கு உண்மையோ… அதே அளவுக்கு உண்மை… விரைவில் இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் ராஜ்ஜியம் வரப்போகிறது என்பதும்.
வெளி 22:20 ….ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
Leave a Reply