வெளிப்படுத்தின விசேஷ தீர்க்கதரிசிகளும் பறக்கும் ட்ரோன் தொழில்நுட்பமும்!

2 தீர்க்கதரிசிகளின் மரணக்கொண்டாட்டத்திற்கு வெகுமதிகள் எடுத்துச்செல்லப்போகும் ட்ரோன்தொழில்நுட்பம்!

சத்தமில்லாமல் நாம் வாழும் இந்த உலகமானது ட்ரோன் (DRONE) எனும் நவீன தொழில்நுட்பக் குழந்தையை எல்லாத்துறைகளிலும் தூக்கிச் சுமக்கத் தொடங்கிவிட்டது. எந்தெந்தத் துறைகளில் எல்லாம் ட்ரோன் பயன்பாடு வந்துவிட்டது எனப் பட்டியலிட்டு அவற்றிற்கான ஆதாரங்களைக் கட்டுரைகளாகவும் காணொளிகளாகவும் உங்களுக்கு முன் வைத்தால், அவை சிலபல நாட்களின் பல மணி நேரங்களை நம் வாழ்வில் எடுத்துக்கொண்டுவிடும். அதென்ன ட்ரோன்கள்?

படப்பிடிப்புப் பணிகளில்!

சிலருக்கு இது கேமராவைச் சுமந்துகொண்டு, பெரும் பரப்பையோ பெருங்கூட்டத்தையோ, கழுகு போல பறந்து பறந்து விதவிதமானக் கோணங்களில் படம்பிடிக்கும் ஹெலிகாப்டர் போன்ற ஓர் கருவி. திருமண விழா படப்பிடிப்புகளில் தற்போது இந்த ட்ரோன்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கண்காணிப்புப் பணிகளில்!

இன்னும் சிலருக்கு இந்த ட்ரோன்கள், பல போலீஸ்காரர்கள் ஒரு நகரத்தைச் சுற்றி ரோந்து போவதை விடவும், பல சிசிடிவி கேமராக்கள் ஒரு நகரத்தைக் கண்காணிப்பதை விடவும், துல்லியமாகக் கண்காணிக்கும் சூப்பர் போலிஸ். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு, ஒட்டுமொத்த தூத்துக்குடி நகரத்தையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க, கேமரா ட்ரோன்களையே பயன்படுத்தியது காவல்துறை. மேற்கூரை இல்லாத கழிவறைகளையும் குளியலறைகளையும் கொண்டவர்கள் இதனால் பதற்றமடைந்ததாகச் செய்திகள் வந்தன.

இந்திய பாகிஸ்தான் எல்லையில், தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்ட இந்த கேமரா ட்ரோன்கள், தமிழகத்தின் எல்லை வரைக்கும் இப்போது வந்துவிட்டன.

ட்ரோன்கள் என்றாலே கேமரா சுமப்பவை தானா? இவைகளுக்கென்று வேறு  அடையாளங்கள் கிடையாதா? பணிகள் கிடையாதா? இவைகளுக்கும் வெளிப்படுத்தின விசேஷத்தில் நாம் பார்த்த வேத வசனத்திற்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்?  

விவசாயத்துறையில்!

விவசாயப்பணிகளில், மிகக்குறைந்த ஏக்கர் நிலங்களுக்கும் கூட, அதிக எண்ணிக்கையில் மனிதர்களைப் பயன்படுத்தி வந்த இந்தியா போன்ற நாடுகளிலும், எந்திரங்கள் படிப்படியாக மனிதர்களின் பங்களிப்பைப் பறித்துவிட்டன. அனைத்திலும் முழுமையான வளர்ச்சியை எட்டியுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயத்தில் அதிநவீன தொழில்நுட்பக்கருவிகளின் ஆதிக்கத்தை விவரிக்க வேண்டியதில்லை. உயர்வகை உபகரணங்களின் உறுதுணையுடன், பரந்து விரிந்து கிடக்கும், பல ஏக்கர் நிலங்களிலும் கூட நிலத்தின் உரிமையாளரும் மற்றும் ஒருவரும் மட்டும் சேர்ந்தே, விதைப்பு முதல் அறுப்பு வரையிலான அனைத்துப் பணிகளையும் முடித்துவிடுவர். மேற்குலக விவசாயிகளின் இந்தப் பயணத்தில், இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்பாக இணைந்ததுதான் ட்ரோன் தொழில்நுட்பம்.

இன்னும் பல நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பமாக இருக்கும் ட்ரோன்களை, தங்கள் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை மழையெனப் பொழிவதற்குப் பயன்படுத்துகின்றனர் விவசாயிகள்.  சமவெளிகளில் தான் என்றில்லை. ஏற்ற இறக்கங்களும் வளைவு நெளிவுகளும் நிறைந்த, மனிதர்கள் பணிபுரிவதற்குக் கடினமான மலைப்பாங்கான பகுதிகளிலும், இந்த ட்ரோன்கள் பறக்கவும் மருந்தினை தெளிக்கவும் ஏற்றவையாக இருக்கின்றன.

இந்த ட்ரோன்களை லேப்டாப்கள், டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே எளிதாக இயக்கிவிட முடியும். இவற்றின்மூலம், அவை பறக்கவேண்டிய பரப்பளவையும் உயரத்தையும் முன்கூட்டியே நிர்ணயித்துத் தருவதுடன், சூழ்நிலைக்கேற்ப தொடர்ந்தும் இயக்கிக் கொள்ளலாம். இந்த ட்ரோன்கள் பலவிதமான வடிவங்களில், பலவிதமான மாறுபாடுகளில், இணையத்தளங்களில் எளிதாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. 

காலமாற்றத்தில் விவசாயம் என்பது வெகுவேகமாக அழிந்துவரும் ஒரு துறையாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அதே காலமாற்றத்தைப் பயன்படுத்தி, அதே விவசாயத்தை இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் செய்ய முடியும் என்பதற்கு  இவ்விடயங்கள் சாட்சியாக இருக்கின்றன. இப்படி,  விவசாயத்துறையில் மட்டுமல்ல, மனிதனின் மற்றொரு நல்வாழ்வுத்துறையான மருத்துவத்துறையிலும் ட்ரோன்களின் பங்களிப்பு தொடங்கிவிட்டது.

மருத்துவத்துறையில்!

மருத்துவத்துறையில், மருந்துகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுபோய் சேர்க்க, ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம், மடகாஸ்கர் போன்ற தீவுகளிலும், கிராமப்புறப்பகுதிகளிலும் வாழும் மக்களுக்கும் ட்ரோன்கள் மூலம் மருந்துகள் அனுப்பப்படுகின்றன. இப்படி ஆபத்துக்காலங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகள் அனுப்புவதற்கு ட்ரோன்கள் மிகவும் உபயோகமாக இருந்து வருகின்றன. 

ZIPLINE எனும் அமெரிக்க ட்ரோன் நிறுவனம், ருவாண்டா நாட்டின் மேற்குப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு ட்ரோன்கள் மூலம் அவசரகால மருத்துவச் சேவையைச் செய்து வருகிறது. நோயாளிகளுக்குத் தேவைப்படும் இரத்தம், ப்ளாஸ்மா மற்றும் மருந்துகள் போன்றவை அதிவேகமாக அந்நாட்டின் மூலை முடுக்குகளுக்குக் கொண்டுபோய் சேர்க்கப்படுகின்றன. 150 கிலோமீட்டர்கள் வரை தன்னுடைய சேவை எல்லையாக வைத்திருக்கும் இந்நிறுவனம், நாள் ஒன்றிற்கு இந்த தூர எல்லையை இரண்டு முறையாகிலும் கடக்கின்றன. இதன்மூலம் சிகிச்சைக்கான பலமணி நேரக் காத்திருப்புகள் தவிர்க்கப்பட்டு உயிரிழப்புகள் தடுக்கப்படுகின்றன.   

ஸ்விட்சர்லாந்து நாட்டின் லுகானோ என்ற மாநகரத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்று, ஆய்வக மாதிரிகளை இரண்டு மருத்துவமனைகளுக்கு இடையில் விரைவாக பரிமாறிக்கொள்ள, 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகிறது. 70 முறை சோதனை ஓட்டத்தைக் கண்டிருக்கிற இந்த முறையானது, கடந்த வருடத்தில் முழுமையான செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

அதிகபட்சம் 2 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்துகொண்டு 20 கிலோ மீட்டர் வரையிலும் பறக்கும்படியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன்களால், அவசரகால மருத்துவச்சேவைகள் இன்னும் மேம்படும் என நம்பலாம். MATTERNET எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ட்ரோன்கள் மூலம், SWISS POST எனும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இந்தப் பரிமாற்றப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

வர்த்தகத்துறையின் வருங்காலத்தில்!

வருங்காலத்தில் உலகின் சேவை சார் துறைகள் மட்டுமல்ல. வர்த்தகம் சார் துறைகளும் அதனைச்சார் போக்குவரத்துகளும் கூட ட்ரோன்கள் மூலம் நிகழும் என்பது விஞ்ஞான உலகத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதன் அடையாளங்கள் தான், அடுத்த தலைமுறைக்கான பலவிதமான ட்ரோன்கள், உலகின் பல்துறை நிறுவனங்களால் அதிவேகமாக உருவாக்கப்பட்டுக் கொண்டே இருப்பது. ஆம். இருக்கிற இடத்தில் இருந்துகொண்டே நமக்குத் தேவையானவற்றை எல்லாம் ட்ரோன்கள் மூலம் பெற்றுக்கொள்வதுதான் இனி வருங்காலம். இதன் மூலம் ஒரு பொருளை, நாம் இருக்கும் இடத்திலிருந்தே விரைவாக வாங்கவும் விற்கவும் முடியும் என்பதோடு, ஒரு பொருளை தங்கள் உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு அனுப்பிக்கொள்ளவும் அங்கிருந்து பெற்றுக்கொண்டு வரவும் முடியும்.

ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரியில்!

இன்றைக்கு ஷாப்பிங் எனும் வார்த்தை ஆன்லைன் ஷாப்பிங்காகச் சுருங்கிவிட்டது. நம் கையிலிருக்கும் ஸ்மார்ட்போன்கள், ஷாப்பிங்கிற்கான நம் நடைகளை, பயணங்களை, செலவுகளை ஐந்து முதல் ஆறு இன்ச்களுக்குள்ளான டிஸ்ப்ளே எனும் தங்கள் தொடுதிரைகளுக்குள் சுருக்கிவிட்டன. உலகின் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தளமான அமேசான், அடுத்து தன் டெலிவரிகளுக்கு, ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான சோதனை முயற்சியை 2016-லேயே செய்தது. தொடர்ந்தும் அந்த டெலிவரியை அதிகாரப்பூர்வமாகக் களமிறக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.  

குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கும் கீழே ட்ரோன்களை தன் தளத்திலேயே விற்கும் அமேசான், தன் வாடிக்கையாளருக்கு அரை மணி நேர அளவுக்குள் விற்பனைப் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க, ட்ரோனைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் தொடங்கி, தொலைவைப் பொருத்து, வாரக்கணக்கில் நீளும் டெலிவரிகள், இனி ட்ரோன்கள் உதவியால் அதிகபட்சம் அரை மணி நேரத்திற்குள் முடிந்துவிடும். உலகமெங்கும் கிளைபரப்பிக் கொண்டிருக்கும் அமேசான் போன்ற நிறுவனங்கள், அந்த உலகளாவிய கிளைகளிலும் இந்த ட்ரோன் சேவையைப் படிப்படியாகக் களமிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பரிசுத்த வேதாகமத்தில்!

ட்ரோன்கள் மூலமாக நடைபெறப்போகிற இந்த ஆன்லைன் ஷாப்பிங் பற்றி, அன்றைக்கே நம்முடைய சத்திய வேதமான பரிசுத்த பைபிளில் எழுதப்பட்டுள்ளது. ஆம். அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய வெளிப்படுத்தின விசேஷத்தில்.

வெளி 11:10 அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்’’

இந்த வசனம் வருங்காலத்தில் நிறைவேறப்போகும் விதம், ட்ரோன்கள் வழி நடைபெறப்போகும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் தான்.

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில், டெலிவரிக்கான முகவரியின் இடத்தில் நமக்குப் பிரியமானவர்களின் முகவரியைப் பதிவுசெய்து, இப்பொழுதே கூட நமக்குப் பிரியமானவர்களுக்கு நாம் பரிசுப்பொருட்களை அனுப்பிக்கொண்டு தான் இருக்கிறோம். அந்தப் பொருட்களைச் சுமந்துபோய்ச் சேர்க்கும் ஊடகங்களாக இன்று மனிதர்களும் வாகனங்களும் இருக்கிறார்கள். நாளை அந்த மனிதர்களின் இடத்தையும் வாகனங்களின் இடத்தையும் இந்தக் குட்டிக்குட்டி ட்ரோன்கள் பிடித்துக்கொள்ளப்போகின்றன.

ஆக, இப்படிப்பட்ட ஒரு அதிநவீன தொழில்நுட்பக்காலத்தில் தான், வெளிப்படுத்தின விசேஷம் எனும் தீர்க்கதரிசனப் புத்தகத்தின் மிகப்பெரும்பான்மையான அதிகாரங்களும், அவற்றிலும் விசேஷித்தவிதமாக இரண்டு தீர்க்கதரிசிகள் பற்றிப் பேசும் அதன் 11-ஆம் அதிகாரமும் நிறைவேறப்போகின்றன.

இரண்டு தீர்க்கதரிசிகள் உலகத்திற்கு வெளிப்படுவதற்கு மூன்றரை வருடங்கள் முன்பாகவே, அந்திகிறிஸ்து இந்த உலகத்திற்கு வெளிப்பட்டுவிட வேண்டும். அவன் வெளிப்பட்டதிலிருந்து மூன்றரை வருடங்கள் கழித்து, இரண்டு தீர்க்கதரிசிகள் வெளிப்படவேண்டும். அவர்கள் வெளிப்பட்டு ஊழியம் செய்யும் காலமே, நம் கர்த்தர் இயேசு குறிப்பிட்ட மிகுந்த உபத்திரவக்காலமாகும்.

மத்தேயு 24:21 ஏனெனில், உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.

அதாவது, அந்திகிறிஸ்துவாகிய சர்வாதிகாரியின் ஆட்சிக்காலம் மொத்தம் ஏழு வருடங்கள். அவற்றில் இரண்டு தீர்க்கதரிசிகளின் ஊழியக்காலம் கடைசி மூன்றரை வருடங்கள். இந்த தீர்க்கதரிசிகள் இஸ்ரேல் நாட்டின் எருசலேம் நகரத்திலிருந்து, இயேசுவுக்கும் இறுதிக்காலத்துக்கும் சாட்சியாக இறுதி தீர்க்கதரிசனங்களை அறிவிப்பார்கள்.

வெளி 11:3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.

மூன்றரை வருட ஊழியத்திற்குப் பிறகு, இந்த 2 தீர்க்கதரிசிகளும் அந்திகிறிஸ்துவாகிய மிருகத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் கொல்லப்படுவதோடு, உலகத்தில் தேவனால் அனுமதிக்கப்பட்ட உபத்திரவக்காலத்திற்கு முடிவு உண்டாகும்.  

வெளி 11:7 அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.

அவர்களின் இறந்த உடல்கள், எருசலேம் நகரத்தின் வீதிகளில் மூன்றரை நாட்கள் வரையிலும் அடக்கம்பண்ணப்படாமல் கிடக்கும்.

வெளி 11:8 அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும்.

உயிரற்ற அந்த உடல்களை உலகத்தின் ஒட்டுமொத்த மக்களும் இன்றைய நேரலை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாகப் பார்ப்பார்கள்.

வெளி 11:9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள் வரைக்கும் பார்ப்பார்கள்; அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.  

அப்படிப் பார்ப்பவர்கள் எல்லாம், இந்தக் கட்டுரையின் மைய வசனமான 10-ஆம் வசனத்தை நிறைவேற்றும்படி, இரண்டு தீர்க்கதரிசிகளின் இறந்த உடல்களைக்கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். தங்கள் மகிழ்ச்சியை உடனடியாக வெளிப்படுத்தும் விதமாக, வெகுமதிகள் எனப்படும் பரிசுப்பொருட்களை அவர்கள் ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொள்வார்கள்.

வெளி 11:10 அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.

அந்த வெகுமதிகளை உடனுக்குடன் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஊடகங்களாகச் செயல்படப்போகிறவை தான் ட்ரோன்கள். அந்த வெகுமதிகள், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலமாக ஆர்டர் செய்யப்பட்டு, ட்ரோன்கள் மூலம் அதிவேகமாக உரியவர்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்கப்படும். ஏனெனில், வருங்காலத்தில், BANKING, SHOPPING என எல்லாமே ஆன்லைன் மூலமாகத்தான் முழுமையாக நடைபெறும் என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். அந்த நவீனத்தின் உச்சக்கட்டமான காலத்தை நோக்கி இந்த உலகம் இப்பொழுதே அதிதீவிரமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஆம். ப்ரியமானவர்களே, ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்யப்பட்ட மிகக்குறுகிய நேரத்தில் மருத்துவப்பொருட்களை, அமேசான் பொருட்களை சுமந்துகொண்டு வந்து, வாடிக்கையாளர்களிடத்தில் சேர்க்கும் அதே ட்ரோன்கள் தான், சத்திய வேத வசனம் சொல்லும் இரண்டு தீர்க்கதரிசிகளின் மரணக்கொண்டாட்ட வெகுமதிகளையும் ஒருவரிடத்திலிருந்து மற்றவரிடத்தில் கொண்டுபோய் சேர்க்கப்போகின்றன. இனி வரப்போகும் அந்த இரண்டு தீர்க்கதரிசிகளின் உடல்களும் உயிரில்லாமல் கிடக்கப்போகிற அந்த மூன்றரை நாட்களும் இப்படிப்பட்ட பரிசுப்பொருட்கள் பகிர்தல் நிலையே உலகமெங்கும் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *