லாசரு மரித்தபோது இயேசு இரண்டாம் முறை பெத்தானியா கிராமத்திற்கு வந்து, மார்த்தா மரியா சகோதரிகளைச் சந்தித்தார். வேதத்தின் மிகப்பெரிய அற்புதங்களுள் ஒன்றான லாசருவின் உயிர்த்தெழுதலை இயேசு அப்போதுதான் செய்தார். இன்னும் சொல்லப்போனால், அந்த அற்புதத்தைச் செய்வதற்காகவே இயேசு பெத்தானியா கிராமத்திற்கு வந்திருந்தார்.
ஆனால், அப்படிப்பட்ட அற்புதத்தைச் செய்யும்படியாகப் புறப்பட்டுவந்த இயேசுவானவர், அதனை எந்த தருணத்தில் செய்தார் என்பதனை நாம் அறிந்துகொண்டோமானால், அது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மை அடுத்தநிலைக்குக் கொண்டுசெல்லும். ஆமென்.
இயேசு – மார்த்தாள் சந்திப்பு
முதன்முறை இயேசு பெத்தானியா கிராமத்திற்கு வந்தபோது, அவரை வரவேற்று தன்னுடைய வீட்டில் ஏற்றுக்கொள்வதில் முந்திக்கொண்ட மார்த்தாவே இம்முறையும் இயேசுவை சந்திப்பதில் முந்திக்கொள்கிறாள்.

யோவான் 11:20 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.
அந்தச் சந்திப்பில், இயேசுவுக்கும் மார்த்தாவுக்கும் இடையில் ஒரு சிறிய உரையாடல் நடைபெறுகிறது.
யோவான் 11:21-27 மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரிக்கமாட்டான். 23 இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
24 அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
25 இயேசு அவளை நோக்கி : நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
அதற்கு அவள் : 27 ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
இப்படி இயேசுவுக்கும் மார்த்தாவுக்கும் இடையே உரையாடல் நிகழ்கிறது. அதிலே மார்த்தாள், லாசருவின் மரண வேளையின்போது இயேசு இல்லாமல் போய்விட்டாரே என்கிற ஆதங்கத்தையும், உயிர்த்தெழுதலைக் குறித்த தன் ஆவிக்குரிய அறிவையும், இயேசுவே கிறிஸ்துவாகிய மேசியா என்கிற தன் இரட்சிப்புக்கேதுவான விசுவாசத்தையும் வெளிப்படுத்துகிறாள்.
ஆனாலும், இயேசு தான் எதற்காக வந்தாரோ அந்த அற்புதத்தைச் செய்ய முற்படாமலேயே இருக்கிறார். மேலும், முந்திக்கொண்டு தன்னைப் பார்க்கவந்த மார்த்தாவையே போய் மரியாவை அழைத்து வருமாறு அனுப்பிவிடுகிறார். ஏனெனில், மார்த்தாள் இயேசு வந்திருக்கிறார் என்ற செய்தியை மரியாளிடம் அறிவிக்காமலேயே புறப்பட்டு வந்திருந்தாள். அதனால்தான் மரியாள் இன்னும் வீட்டிலேயே அமர்ந்திருந்தாள். இயேசுவோ இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தன்னைச் சந்தித்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.
யோவான் 11:28-29 இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள். இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
இயேசு – மரியாள் சந்திப்பு
யோவான் 11:32-35 இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். அவள் அழுகிறதையும் அவளோடேகூட யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது, ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே வந்து பாரும் என்றார்கள். இயேசு கண்ணீர் விட்டார்.

இயேசு வருகிறதைக் கேள்விப்பட்டதும், அவர் கிராமத்துக்குள் வருவதற்குள்ளாகவே அவருக்கு எதிர்கொண்டோடி சந்தித்தாள் மார்த்தாள். ’இயேசு இருந்திருந்தாரானால், லாசரு இறந்திருக்கமாட்டான்…’ என இயேசுவின் வல்லமையை மேன்மைப்படுத்தினாள். இறந்தோரின் உயிர்த்தெழுதல் குறித்த தன் நம்பிக்கையைப் பேசினாள். இயேசுவே மேசியா என்கிற தன் விசுவாசத்தை அறிக்கை செய்தாள். அத்தனையிலும், அவளோடேகூட உரையாடின இயேசு அற்புதத்தை மட்டும் செய்யவில்லை. மரியாவை வரவழைத்து, அவள் வந்தபிறகே அற்புதம் செய்தார். ஏன்?
இத்தனைக்கும் மார்த்தா இயேசுவைப் பார்த்தவுடன் சொன்ன அதே ஆதங்க வார்த்தைகளையே மரியாளும் கூறினாள். இருவரிடத்திலும் ஒன்றுபோல வெளிப்பட்ட இந்த வார்த்தைகளோடுகூட, மார்த்தாளிடத்தில் இன்னும் விசுவாசமான அறிக்கைகளும் வெளிப்பட்டன.
யோவான் 11:23 இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்’
இப்படிப்பட்ட விசுவாச வார்த்தைகள் எதுவும் மரியாளிடத்தில் வெளிப்படவில்லை. ஏனெனில், மார்த்தாளின் வார்த்தைகளில், லாசரு கல்லறையில் வைக்கப்பட்டு (யோவான் 11:17,39) நான்கு நாட்களாகிவிட்டாலும், இயேசு தேவனிடத்தில் கேட்டால், தேவன் லாசருவின் உயிரையும் அவருக்குத் தந்தருளுவாரென்ற விசுவாசம் வெளிப்பட்டது. இயேசுவைக் குறித்த மார்த்தாளின் இந்த வெளிப்பாடுகளும், விசுவாசமும் ஆச்சரியப்படத்தக்கவை. ஆனாலும் இயேசு அப்படிப்பட்ட மார்த்தாள் வந்தபோதே அல்லாமல், மரியாள் வந்தபிறகு அற்புதம் செய்ய முற்பட்டது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை, சகோதரிகள் இருவரும் இயேசுவினிடத்தில் இந்தச் சந்திப்பிலும், முந்தைய முதல் சந்திப்பிலும் நடந்துகொண்ட விதங்களின் அடிப்படையிலான வித்தியாசங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். .

1.மார்த்தாள் தன் சகோதரியான மரியாளிடத்தில் கூட அறிவிக்காமல், இயேசுவைக் காண ஊருக்கு வெளியே முந்தினவளாக ஓடிவந்தாளே ஒழிய, அவரைக் கண்டதும் அவரது பாதத்திலே வந்து விழுந்ததாக வேதத்தில் சொல்லப்படவில்லை. மாறாக, மரியாள் பிந்தினவளாக வந்தாலும் இயேசுவைக் கண்டவுடனே அவருடைய பாதத்தில் வந்து விழுந்தாள்.
ஆக, ’’ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்’’ என்ற தன் சகோதரியின் அதே வார்த்தைகளையே தானும் சொன்ன மரியாள் அதனை இயேசுவின் பாதத்தில் தாழ்மையோடு விழுந்தவளாகத் தஞ்சமடைந்தவளாகச் சொன்னாள். மார்த்தாளோ அதே வார்த்தைகளை இயேசுவின் பாதத்தில் விழாதவளாகச் சொன்னாள் என்கிற வித்தியாசம் புலப்படுகிறது.
2. மரியாள் இயேசுவினிடத்தில் அந்த வார்த்தைகளைச் சொன்னபோது அழுததாக வேதம் சொல்கிறது. இயேசுவின் பாதத்தில் மரியாள் உடைந்த உள்ளத்தோடு விழுந்து அழுத விதம், அவளோடே வந்த யூதர்களையும் அழவைக்கிறது. ஆக, மரியாளின் அழுகை அவளோடேகூட வந்த யூதர்களை மட்டுமல்ல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே ஆவியிலே கலங்கித் துயரமடைய வைக்கிறது. கண்ணீர் விடவைக்கிறது. அதோடு, அவனை எங்கே வைத்தீர்கள் என்று அற்புதம் செய்வதற்காக விசாரிக்கவும் வைக்கிறது.
ஆனால், மார்த்தாளிடத்தில் இயேசுவின் மனதை உருக்கும்படியான உடைந்த உள்ள அழுகை எதுவும் வெளிப்பட்டதாக வேதத்தில் சாட்சி இல்லை.
3. மார்த்தாவுக்கும் மரியாளுக்கும் இடையிலான இந்த இரண்டு வித்தியாசங்களையும் வைத்துப் பார்க்கும்போது, நமக்குச் சில காரியங்கள் புலப்படுகின்றன.
மரணத்தை அனுமதித்து தாமதித்த இயேசு:
இயேசு, லாசருவை உயிரோடே எழுப்ப வேண்டுமென்பதற்காகத்தான் பெத்தானியா கிராமத்திற்கே வருகிறார். இதுகுறித்து வேதம்:
இவைகளை அவர் சொன்னபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்…. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்’’ (யோவான் 11:11,14,15)

இன்னும் சொல்லப்போனால், லாசரு மரணமடையும்படியாக அனுமதித்ததே இயேசு தான். ஏனெனில், யார் வந்து விசுவாசத்தோடு கேட்டாலும், அவர்களுடையவர்களை உடனடியாக உயிர்த்தெழச்செய்த இயேசு, தனிப்பட்ட வகையில் தன்னுடைய சிநேகத்திற்குரிய லாசரு விஷயத்தில், தேவனுடைய மகிமையும் தம்முடைய மகிமையும் வெளிப்படும்படியாகவும் தம்முடைய சீடர்கள் விசுவாசமடையும்படியாகவும், அவன் வியாதியிலே மரணமடையும்படியாகவும் பிறகு நான்கு நாட்கள் கழித்து தன்னால் உயிர்த்தெழும்படியாகவும் தாமதித்தார்.
அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கேதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். அவன் வியாதியிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார். அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்.’’ (யோவான் 11:3,4,6,7)
மார்த்தா – மரியாளின் செய்தியை இயேசு கேட்டபொழுது, அவர் யோர்தானுக்கு அக்கரையில் யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்துவந்த பெத்தாபராவிலே தங்கியிருந்தார். செய்தியைக் கேட்டவுடன், இன்னும் இரண்டுநாள் அவர் தங்குகிறார். இப்படியெல்லாம், லாசருவை நான்கு நாட்கள் கழித்து கல்லறையிலிருந்து எழுப்புவதற்காகவே பெத்தானியாவுக்குப் புறப்பட்டுவந்த இயேசு, அதனை லாசருவைப்போலவே தம்முடைய அன்பிற்குரிய மார்த்தாள் வந்தபோதே ஏன் செய்யவில்லை என்ற கேள்வி மீண்டும் எழுகிறது.
ஏனெனில், இயேசு இந்த மூவரையுமே சிநேகித்ததாகவே வேதம் சொல்லுகிறது. இயேசு மார்த்தாளிடத்திலும் அவருடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.’’ (யோவான் 11:5)
பதில் இதோ:
இயேசு, தாம் செய்யவந்த அற்புதத்தைச் செய்யும்படியாக, நொறுங்குண்ட இருதயத்திலிருந்து கண்ணீரோடே கூட புறப்படும் தாழ்மையான விண்ணப்பமும் வேண்டுதலும் அவரை நோக்கி மார்த்தாளிடத்திலிருந்து புறப்படவில்லை. மாறாக அது மரியாளிடத்தில் இருந்தது.

மார்த்தாள் சொல்லிவிட்டு வந்திருந்தால், அவளோடே கூட அப்பொழுதே மரியாளும் வந்திருப்பாள். ஆனால் அவள் சொல்லாமல் வந்துவிட்டதால், இயேசு அவளை அழைத்துக்கொண்டு வரும்படியாக மார்த்தாவையே அனுப்பி, அவளை வரவழைக்கிறார். இயேசுவும் அவளுக்காக காத்திருக்கிறார்.
அவள் வந்தபோதோ, இயேசுவின் இருதயத்தை இளகப்பண்ணும் விதமாய் பாதம் விழுதலினாலும், தன் அழுகையினாலுமே விண்ணப்பம் பண்ணுகிறாள். இயேசுவும் உடனே மனமுருகி, தான் செய்ய வந்த மகா பெரிய அற்புதத்தைச் செய்யும்படியாகக் கடந்துபோகிறார். அவரால் இஸ்ரவேலே ஆச்சரியத்தில் உறைந்துபோகும்படியான அற்புதம் ஒன்று அரங்கேறுகிறது.
பாடம் இதோ!
கிறிஸ்துவுக்குள் ப்ரியமான என் அன்பு சகோதர, சகோதரிகளே! மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய இவர்களுடைய வாழ்க்கையில் மட்டுமல்ல… தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நம் எல்லாருடைய வாழ்க்கையிலுமே இப்படிப்பட்ட பெரிய அற்புதங்களைச் செய்யும்படி இயேசு முன்குறித்திருக்கிறார். அவற்றைக் குறித்தக்காலத்தில் மட்டுமே செய்யும்படியாகக் குறித்தக்காலம் வரைக்கும் தாமதிக்கவும், குறித்தக்காலம் வரும்போது தீவிரித்துக் கடந்து வரவும் அவர் உண்மையும் வல்லமையும் உள்ளவராக இருக்கிறார்.
ஆனால், அவர் அற்புதங்களைச் செய்ய நம் வாழ்க்கைக்கருகிலே தீவிரித்துக் கடந்துவந்து நின்றும், மார்த்தாளின் அணுகுமுறையே பல வேளைகளில் நம்மிடத்தில் வெளிப்படுவதால், நம்மால், உடனடியாக அற்புதங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
மார்த்தாளைப்போல, நம்மை நோக்கி வருகிற தேவனை வரவேற்கும் விதமாக, நாம் முந்திக்கொண்டு தேவ சமூகத்திற்கு அவரை எதிர்கொண்டோடுவது நற்காரியம் தான். ஆனால், அங்கே மார்த்தாளிடத்தில் வெளிப்பட்ட ஆதங்கங்கள், ஆவிக்குரிய வெளிப்பாடுகள், விசுவாச அறிக்கைகள் இவை மட்டுமே எல்லாச் சூழ்நிலைகளிலும் நமக்கு அற்புதங்களைப் பெற்றுத் தந்து விடுவதில்லை.
மாறாக, மரியாளைப் போன்று சூழ்நிலையால் பிந்திவந்தபோதும், கர்த்தருடைய பாதம் இருக்கும் தேவ சமூகத்தைக் கண்டதும், அந்தப் பாதத்தில் விழுந்து அழுது நாம் நம்மைத் தாழ்த்தும் விதம் இயேசுவை நம் வாழ்வில் அற்புதங்களைச் செய்ய வைத்துவிடும்.
மார்த்தாளைப் போல, அதிக வார்த்தைகளால் தேவ சமூகத்தில் அலப்புகிறவர்களைக் காட்டிலும், கர்த்தருடைய பாதமே தஞ்சம் என தாழ்மையோடும் கண்ணீரோடும் அவர் பாதத்தில் விழுகிற ‘மரியாள்’களுக்கு / மரியான்களுக்கு, முன்குறிக்கப்பட்ட அற்புதத்தைச் செய்துவிடும்படியாக இயேசுவானவர் விரைவாகக் கடந்து வருகிறார்.
ஆம். எனக்கு அன்பானவர்களே! கர்த்தருடைய பாதத்தையே நாம் கண்ணீரோடு பிடித்துக்கொண்டு விட்டபிறகு, இயேசுவின் இருதயத்தை இளகச்செய்கிறதற்கு, அதனை விட மேலானவையாக நம்முடைய வாயின் வார்த்தைகள் இருந்துவிட முடியுமா என்ன?
தேவ சமூகத்தில் தேவனுக்குத் தேவை தாழ்வுற்று நொறுங்கிய அன்னாள்களின், ஆயக்காரனின், மரியாள்களின் இருதயங்கள் தான். அந்த இருதயங்களிலிருந்து புறப்படும் விண்ணப்பங்கள் எல்லாம் அவருக்கு இரண்டாவது தான்! அவை எளிமையாக இருந்தாலே அவருக்குப் போதுமானதுதான்!
அன்னாளின் விண்ணப்பம் இருதயத்திலிருந்து பேசப்பட்டதாக, உதடுகள் மாத்திரம் அசைந்ததாகவே இருந்தது. ஆயக்காரனின் ஜெபமும் கூட மிகவும் எளிமையாகவே இருந்தது. இவர்கள் தங்கள் இருதயங்களை தேவ சமூகத்திலே ஊற்றினதாலும், தங்களைத் தாழ்த்தியதினாலுமே வெற்றி கொண்டார்கள்.
ஆம். எனக்கு அன்பானவர்களே! தன் ஆவிக்குரிய நிலையைப் பற்றிப் பேசி, தேவ சமூகத்திலிருந்து வெறுங்கையோடு திரும்பிய பரிசேயனின் வார்த்தைகளும், மார்த்தாளின் வார்த்தைகளும் நமக்கு வேண்டாம். நாம் குழந்தைப்பேறைப் பெற்ற அன்னாளைப் போல, மன்னிப்பைப் பெற்ற ஆயக்காரனைப் போல, அற்புதத்தைப் பெற்ற மரியாளைப் போல தேவ சமூகத்திலிருந்து நாம் எப்போதும் பெற்றுக்கொள்ளுகிறவர்களாகவே இருப்போமாக! தேவன் தாமே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே உங்களுக்குக் கிருபை தருவாராக. ஆமென்.