சிலரது இடங்களை எவராலும் நிரப்ப முடியாது – ஆப்ரஹாமை இழந்ததால் அனைத்தையும் இழந்த லோத்து

ஆப்ரஹாம் எனும் அடையாளம்!

லோத்து என்கிற மனிதனின் அடையாளமே ஆப்ரஹாம் தான். இல்லையென்றால் அவன் இந்த அளவுக்கு வேதப்புருஷர்களில் ஒருவனாக அறியப்பட்டிருக்க முடியாது. ஆப்ரஹாமின் உடன்பிறந்த சகோதரன் ஆரானின் மகனாகிய லோத்து, தன் பாட்டன் தேராகுவின் காலத்திலேயே கானான் தேசத்துக்குப் போகப் புறப்படுகிறான்.

ஆதி 11:31 தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான். அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.

தேராகு ஆரானிலே மரித்த பிறகு, கர்த்தர் ஆப்ரஹாமுக்குக் கானான் தேசத்துக்கு போகும்படி அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பை ஏற்றுப் புறப்படும் ஆபிராமுடன் லோத்துவும் புறப்பட்டுப் போகிறான். தந்தையையும், தாத்தாவையும் இழக்கும் லோத்துவுக்கு, அடுத்து அவனது பெரிய தகப்பனாகிய ஆபிராம் தான் எல்லாமே. ஏற்கெனவே தேராகுவும் கானான் போகத்தான் ஜன்ம பூமியாகிய ஊர் என்ற கல்தேயர் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டான் என்பதாலும், இப்போது ஆபிராமும் அங்கே தான் புறப்படுகிறான் என்பதாலும் லோத்து அவனோடே கானானுக்குப் புறப்பட்டான்.

ஆதி 12:4 கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான்; ஆபிராம் ஆரானை விட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

பிற்பாடு ஆப்ரஹாம் என தேவனால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆபிராம் எகிப்து உட்பட எங்கு போனாலும் லோத்துவும் அவனோடே கூட பின் தொடர்ந்தான். வசித்தான். அவனுக்கென்று தனிப்பட்ட அழைப்போ தரிசனமோ இல்லாததால், அவன் ஆப்ரஹாமையே பற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஆக, லோத் என்ற மனிதனுடைய அடையாளமாகவே ஆப்ரஹாம் தான் இருந்தான். கானானுக்கு ஆப்ரஹாமோடு பயணம் புறப்படாமல், லோத் ஆரானிலேயே இருந்திருந்தால், அதற்குப்பிறகு அவனுடைய பெயரோ வாழ்வியல் சம்பவங்களோ வேதத்தில் இடம்பெற்றிருக்காது. மாறாக, தேவ அழைப்பில் புறப்பட்ட ஆப்ரஹாமோடு தானும் புறப்பட்டதாலும், தொடர்ந்து பயணித்ததாலும், ஆப்ரஹாமின் தேவனாகிய கர்த்தரையே அவனும் தன் தேவனாகக் கொண்டிருந்ததாலும் தான், தொடர்ந்து அவனுடைய பெயரும் வாழ்வியல் நிகழ்வுகளும் வேதாகமத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆக, தந்தையையும் தாத்தாவையும் இழந்த லோத்துவுக்கு தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல. வேதாகமத்திலும் அடையாளம் ஆப்ரஹாம் தான். அதுமட்டுமில்லை. புத்திர சந்தானம் இல்லாத ஆப்ரஹாமுக்கு லோத்து, உள்ளபடியே மகன் ஸ்தானத்தில் வருகிறான். ஆப்ரஹாமும் லோத்துவும் தந்தை – மகன் உறவில் தான் வருகிறார்கள் என்றாலும், அவர்கள் இருவரையும் வேதம் அந்தக் கோணத்தில் வெளிப்படுத்தவில்லை.  

ஆப்ரஹாமோடு பல இடங்களுக்கும் பயணித்துக்கொண்டிருந்தாலும், அவனோடு இருந்தவரைக்கும் லோத்துவின் வாழ்வில் பிரச்சினைகளுக்கோ சமாதானக் குறைவுகளுக்கோ இடமில்லாமல் இருந்தது. இத்தனைக்கும் ஆப்ரஹாமின் வாழ்வில் கூட சாராளை முன்னிட்டு இரண்டு முறை நெருக்கடிகளும் சங்கடங்களும் வந்தன. ஆனால், அவனோடிருந்த லோத்திற்கோ அப்படிப்பட்ட நெருக்கங்களோ சங்கடங்களோ இருந்ததற்கு வேதத்தில் ஏதும் ஆதாரங்கள் இல்லை. அந்த அளவுக்கு அவனுடைய வாழ்க்கை சுமூகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், ஆப்ரஹாமை விட்டுப் பிரிந்த பிறகோ, லோத்துவின் வாழ்வில் பிரச்சினைகளும் சமாதானக் குறைவுகளும் உண்டாகிக்கொண்டே இருந்தன.

ஆப்ரஹாமும் லோத்துவும் ஒருவரையொருவர் விட்டுப் பிரிவதற்கு அவர்களுக்கு இருந்த திரளான ஆஸ்தியே காரணமாக இருந்தது.

ஆதி 13:5-6 ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. 6 அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம் பண்ண ஏதுவில்லாமற்போயிற்று.

ஆப்ரஹாம் என்ற தனிமனிதனும் லோத்து என்ற தனிமனிதனும் கூடிவாழ்வதற்கு இடமிருந்தாலும், அவர்களுடைய திரளான ஆட்டு மந்தைகளை மேய்ப்பதற்கும், அவர்களுக்கு இருந்த மேய்ப்பர்கள் உள்ளிட்ட ஏராளமான வேலைக்காரருக்கான கூடாரங்களைப் போடுவதற்கும் நிச்சயம் வெகு விசாலமான பூமி தேவை. அவர்கள் இருந்த பூமியோ இருவரின் மந்தைகளையும் மேய்ப்பதற்குப் போதுமானதாக இருக்கவில்லை.

ஆதி 13:7 ஆபிராமுடைய மந்தை மேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்திலே குடியிருந்தார்கள்.  

இருவரின் மேய்ப்பர்கள் இடையிலே உண்டான வாக்குவாதம், அடுத்து அவர்களையும் பற்றத்தொடங்கும் சூழலில், ஆப்ரஹாம் இதற்கொரு சமாதானத்தீர்வை முன்வைக்கிறான்.

ஆதி 13:8-9 ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம். நாம் சகோதரர். 9 இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்து போகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.

ஆப்ரஹாம் முன்வைத்த தீர்வின்படி, லோத்து யோர்தான் அருகான சமபூமிக்கு நகர்கிறான். அதனைத்தொடர்ந்து ஆப்ரஹாமும் அங்கே குடியிருக்காமல், எபிரோனில் இருக்கும் மம்ரே என்னும் சமபூமிக்கு நகர்கிறான்.

லோத்து பிடிபட்டபோது யுத்தம் செய்து காப்பாற்றும் ஆப்ரஹாம்

ஆப்ரஹாமை விட்டுப் பிரிந்தவுடனேயே லோத்துவுக்கு பிரச்சினைகள் எழத்தொடங்குகின்றன. எந்த ஆஸ்தியை ஆள்வதற்கு சமபூமியைத் தெரிந்துகொண்டு, ஆப்ரஹாமை விட்டு லோத்து பிரிந்தானோ, அந்த சமபூமிக்கு உண்டாகும் முதல் சேதத்தில் லோத்துவும் அவன் குடும்பமும் ஒட்டுமொத்த ஆஸ்தியும் சிறைப்படுகிறது.  

ஆதி 14:11-12 அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். 12 ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.

லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால் மட்டுமே, அவனுக்கு இந்தப் பொல்லாப்பு வந்தது என்பதை வேதம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆப்ரஹாம் தான் தன் வேலைக்காரரோடே புறப்பட்டுப்போய், லோத்துவையும் அவன் மனைவி, மகள்களையும், அவனுடைய வேலைக்காரர் மற்றும் எல்லாப் பொருள்களையும் மீட்டுத்தருகிறான்.

ஆதி 14:14-16 தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர் மட்டும் அவர்களைத் தொடர்ந்து, 15 இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள் மேல் விழுந்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபா மட்டும் துரத்தி, 16 சகல பொருள்களையும் திருப்பிக் கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்தீரிகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டு வந்தான்.

லோத்துவுக்காகப் பரிந்துபேசி உயிரைக் காப்பாற்றிவிடும் ஆப்ரஹாம்

சோதோமில் குடியேறியதால் உண்டான முதல் ஆபத்திலிருந்து, லோத்துவையும் அவனைச்சார்ந்த அனைவரையும் அனைத்தையும் மீட்டுக்கொண்டு வந்த ஆப்ரஹாம், அதே சோதோமில் தொடர்ந்தும் குடியிருப்பதால் லோத்துவுக்கு வரும் இரண்டாம் ஆபத்திலிருந்தும், அவனையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்றி விடுகிறான். முதலாம் ஆபத்து மனிதர்களால் வந்தது. அதில் ஆப்ரஹாம் தன் கைவல்லமை கொண்டு லோத்துவை காப்பாற்றி விடுகிறான். இரண்டாம் ஆபத்தோ தேவனால் வருகிறது. அதனை தன் தாழ்மையான அதேநேரத்தில் விடாப்பிடியான வேண்டுதலினால் முறியடிக்கிறான்.  

ஆதி 18:22 அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான்.

ஆதி 18:22-23 அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான். 23 அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து : துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?

ஆதி 19:29 தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.

இப்படி, லோத்துவை குறிப்பிட்ட காலம் வரைக்கும் தன் கூடவே வைத்துப் பார்த்துக்கொண்ட ஆப்ரஹாம், அவனுக்கும் தனக்கும் வாக்குவாதம் வரும் சூழல் ஏற்படும்போது, அவனைச் சமாதானத்தோடே அனுப்பி விடுகிறான். ஆஸ்திகளின் திரட்சியினிமித்தம், தன் சகோதரனின் மகனை தன்னை விட்டு அனுப்பிவிட்டாலும், அவனுடைய நலன் மீதும் ஆப்ரஹாம் மிகுந்த அக்கறை கொண்டவனாக இருக்கிறான்.

லோத்துவின் மீது ஆப்ரஹாமுக்கு இருந்த அளவற்ற அன்புதான், அதுவரை அமைதியானப் புருஷனாகவே அறியப்பட்டிருந்த ஆப்ரஹாமை பட்டயம் தூக்கவைத்து, படைநடத்த வைக்கிறது. தன் மனைவி இரண்டு முறை புறஜாதி ராஜாக்களால் கூட்டிக்கொண்டு போகப்பட்டபோதும், ஆவேசமடையாமலும், பட்டயம் எடுக்காமலும் அமைதியாய் இருந்த ஆப்ரஹாம், தன் சகோதரனுக்குக் கேடு என்றவுடன் அவனையும் அவனைச் சார்ந்த அனைத்தையும் காப்பாற்ற யுத்தவீரனாகப் புறப்படுகிறான். அதுவும் தன்னிடம் இருக்கும் வெறும் 300 பேரை அழைத்துக்கொண்டு, அத்தனை ராஜாக்களுக்கு எதிராகப் புறப்பட அவனுக்கு தைரியம் வருகிறது. அந்த அளவுக்கு அவன் தன் சகோதரன் லோத்துவை நேசிக்கிறான்.

அதேபோல, சோதோமை அழிக்கதான் கர்த்தர் வந்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும்போது, ஆப்ரஹாமின் இருதயம் தன் சகோதரன் லோத்துவுக்காக துடியாய் துடிக்கிறது. முன்பு லோத்துவுக்காக யுத்தவீரனாக எழுந்தவன், இப்பொழுது கர்த்தரின் முன்னால் ஜெபவீரனாக நிற்கிறான். மீண்டும் மீண்டும் பரிந்துபேசி, விடாமல் தன் சகோதரனின் குடும்பம் மட்டும் அங்கிருந்து காப்பாற்றப்படும் என்ற வாக்குறுதியைப் பெற்றுக்கொள்ளுகிறான். ஆப்ரஹாமின் வேண்டுதலின் நிமித்தம், தூதர்கள் லோத்துவும் அவன் குடும்பமும் தப்பித்துப்போகுமட்டும் பட்டணத்தின் மீதான ஆக்கினையை நிறுத்தி வைக்கிறார்கள். 

ஆதி 19:22 தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது. 23 லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின் மேல் சூரியன் உதித்தது.

ஆதி 19:29 தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்.

தூதர்கள் மலைக்குப் போகச்சொன்னபோது, சோவாருக்குப் போக உத்தரவு கேட்டு அங்கே போன லோத்து, பின்பு மலைக்குப் போனான்.

ஆதி 19:30 பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.

சோவாரில் குடியிருக்க லோத்து பயந்ததற்குக் காரணம் உண்டு. அந்தப் பட்டணமும் சோதோம் கொமோரா பட்டணங்களோடு அழிக்கப்பட்டிருக்க வேண்டியதே. அதன்மூலம், கர்த்தர் அந்தப் பட்டணத்தின் குடிகளையும் அழிக்கவே தீர்மானித்திருந்தார். ஆனால், லோத்து அந்தப் பட்டணத்திற்கு ஓடிப்போய் தப்பித்துக்கொள்ள அனுமதி கேட்டதாலேயே, அவன் நிமித்தம் அந்தப் பட்டணத்தை மட்டும் அழிக்கும் திட்டத்தை தூதர்கள் கைவிடுவதைப் பார்க்கிறோம். அதன்மூலம், அந்தப் பட்டணத்தின் குடிகள் தப்பித்துப் பிழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களும் தேவ கோபத்திற்கேதுவான குடிகள்தானே! சோதோம் ஊரார் போல பொல்லாப்பை உடையவர்கள்தானே! ஆக, அவர்கள் மத்தியிலே தன் மகள்களோடு வாழ்வதற்கு லோத்து பயப்படுகிறான். அதனாலேயே மலைக்கு ஓடிப்போகிறான்.

அப்படிப்பட்டவனை நோக்கி, அனைத்தையும் இழந்த பிறகும், லோத்து திரும்பாமற் போனது ஆச்சரியம் தான். சோவாரில் இருந்து புறப்படத் தீர்மானித்தவன், முதலாவது மம்ரேக்குப் போய் ஆப்ரஹாமை சந்தித்து, சம்பவித்தது எல்லாவற்றையும் சொல்லியிருக்க வேண்டும்.

மலைக்குப் போகாமல் மம்ரேக்கு போயிருந்தால்! சோவாரிலும் குடியிருக்க முடியாத சூழ்நிலை உண்டான பிறகாவது, லோத்துவின் இருதயம், ஆப்ரஹாமை நோக்கித் திரும்பியிருக்கலாம். அப்படி திரும்பியிருந்தால் மீண்டும் அவனுக்கு ஆப்ரஹாமால் நன்மைகள் உண்டாகியிருக்கும்! ஏனெனில், ஆப்ரஹாமால், அதுவரையில் லோத்துவுக்கு நன்மைகள் மட்டுமே உண்டாகி வந்திருக்கிறது. அதுமட்டுமில்லை. ஆப்ரஹாம் லோத்துவின் பெரிய தகப்பன். அந்த தேசத்தில் அவனுக்கென இருக்கிற ஒரே உறவினன். அவன் தகப்பன் வீட்டான்.  ஆரானிலிருந்து கானானுக்கு அவனை அழைத்து வந்தவன். போகும் இடமெல்லாம் தன்னோடே கூட்டிச்சென்றவன். பிரிந்து போகும்போதும் சமாதானத்தோடே அனுப்பி வைத்தவன். ஆபத்து நேரத்தில் யுத்தவீரனாய் வந்து விடுவித்தவன். மாபெரும் தேவ கோபாக்கினையில் இருந்து இவனையும் இவன் குடும்பத்தை மட்டும் காத்தவன். மனைவி, மகள்கள் எல்லாரையும் தாண்டி அவன் வாழ்வில் அதிகம் பங்கெடுத்தவன்.

அடைக்கலமும் ஆறுதலும் கிடைத்திருக்கும்! அனைத்தையும் இழந்த நிலையில் தன்னிடத்தில் வந்திருக்கும், தன் சகோதரனின் மகனுக்கும் அவனுடைய மகள்களுக்கும் ஆப்ரஹாம் நிச்சயம் அடைக்கலம் தந்து, ஆறுதல் செய்திருப்பான். முன்பாவது ஆப்ரஹாமோடு ஒருமித்து இருக்கக்கூடாத படிக்கு, லோத்துவுக்கும் ஆப்ரஹாமைப்போல அதிகமான ஆஸ்தி இருந்தது. இப்பொழுதோ அப்படி எந்த ஆஸ்தியுமில்லை. ஆட்டு மந்தைகளுமில்லை. அவற்றிற்காக வாக்குவாதம் பண்ணும் மேய்ப்பர்களும் இல்லை. அவர்களுக்கான ஏராளமான கூடாரங்களும் இல்லை. அக்கூடாரங்களுக்கான தாராளமான பூமியும் தேவைப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், அவன் ஆப்ரஹாமோடு ஒருமித்து வாசம் பண்ணுவதில் தடையேதுமில்லை.

குறிப்பிட்ட தூரத்திலே தன் பெரிய தந்தையாகிய ஆப்ரஹாம் பெரும் சீமானாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, லோத்துவோ குடியிருக்கக்கூட கூடாரம் அற்றவனாய், மலைக்குப்போய் கெபியிலே குடியிருக்கிறான். மனைவி இல்லா நிலையில், மகள்களோடு கூட வாழ்ந்த அந்த தனிமையான கெபி வாழ்க்கைதான், அவனது மகள்களை தவறான யோசனைக்குத் தள்ளியது. நூற்றுக்கணக்கான தன் வேலைக்காரருக்குக் கூடார வசதிகளை ஏற்படுத்தித் தந்த ஆப்ரஹாம், தன் மகன் முறைமையான லோத்துவுக்கும், தன் பேத்தி முறைமையான அவன் மகள்களுக்குமாகக் கூடாரங்களை ஒதுக்கித்தந்திருக்க மாட்டானா? நிச்சயம் ஒதுக்கித்தந்திருப்பான், லோத்து அவனது நிழலில் ஒதுங்கியிருந்தால்!

பயமற்ற சூழ்நிலையும் பாதுகாப்பும்! சோவாரின் அந்நிய குடிகளின் மத்தியில் குடியிருக்க பயந்து, மலைக்கு ஓடினவனுக்கு, தன் மகள்களோடு எந்தவித பயமுமின்றி எல்லாவித பாதுகாப்போடும் குடியிருக்க, தன் தகப்பன் வீட்டானாகிய ஆப்ரஹாமின் சமூகம் இல்லையோ! 4 ராஜாக்கள் சேர்ந்தும் முறியடிக்க முடியாத 5 ராஜாக்களை ஆப்ரஹாமும் அவனோடிருந்த 318 மனிதர்களும்தானே, முறியடித்துப்போட்டார்கள்! லோத்துவையும், அவனைச்சார்ந்த அனைவரையும் அனைத்தையும், அவன் வசித்துவந்த சோதோமின் குடிகளையும் அவர்களுடைய எல்லாப் பொருட்களையும் அவர்கள் தானே மீட்டார்கள்! சோதோமின் ராஜாவும் சாலேமின் ராஜாவும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்களே! அந்த அளவுக்கு ஆப்ரஹாம் அந்த தேசத்தில் ராஜாக்களுக்கு இணையான ராஜாவாய் இருந்தான். அதுமட்டுமில்லை. ஆப்ரஹாம் தான் தங்கியிருந்த மம்ரே சமபூமி வாழ் மனிதர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்குள்ள மனிதனாக இருந்தான்.

ஆதி 23:5-6 அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக: 6 எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு;

இப்படிப்பட்டவனிடத்தில் பாதுக்காப்புக்குத்தான் பஞ்சமோ! லோத்து எதிர்பார்த்த பயமற்ற சூழ்நிலையும் பாதுகாப்புணர்வும் மலையில் இல்லை. மாறாக, கானானியர் மத்தியிலேயே மகா பிரபுவாக இருந்த ஆப்ரஹாம் வசித்த மம்ரே சமபூமியில் இருந்தது. மனிதர்களற்ற மலையில் எந்தவித ஆபத்தும் வராது என்பது லோத்துவின் எண்ணம். ஆனால், அவனோடிருக்கும் அவன் மகள்களாலேயே அவனுக்கு ஆபத்துவரும் என நினைக்கவில்லை.

மகள்களுக்கு திருமணமும் நடந்திருக்கும்!  மலைக்கு போவதற்கு பதில் மம்ரே சமபூமிக்கு போயிருந்தால், லோத்துவின் மகள்களுக்கு ஆப்ரஹாமே திருமணம் செய்து வைத்திருப்பான். அதிகபட்சம் தன்னை மிகவும் மதிக்கும் ஏத்தின் புத்திரர்களில் எவருக்காவது அவர்களை அவன் திருமணம் செய்து வைத்திருப்பான். லோத்து தெரிந்துகொண்ட சோதோமின் மருமக்கள்மாருக்கு இவர்கள் எவ்வளவோ மேல் அல்லவா? குறைந்தபட்சம் ஆப்ரஹாமின் முந்நூறுக்கும் மேற்பட்ட வேலைக்காரர்களில் இருவருக்கேனும் அந்த இரண்டு பெண்களும் மனைவியர் ஆகியிருக்க முடியும்? தகப்பனோடே சேர்ந்தாவது பூமியெங்கும் நடக்கிற விவாக முறைமையை நிறைவேற்றத்துடித்த லோத்தின் மகள்கள், ஏத்தின் புத்திரரையோ அல்லது ஆப்ரஹாமின் வேலைக்காரரையோ விவாகம் பண்ணிக்கொள்ள மறுத்திருப்பார்களா என்ன? நிச்சயம் மறுத்திருக்கமாட்டர்கள்.

ஆதி 19:31-32 அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார். பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை. 32 நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.

தங்களோடே சேர பூமியிலே ஒரு புருஷனும் இல்லை என்று உணரும் நிலைக்கு லோத்துவின் மகள்கள் தள்ளப்பட்டார்கள். இது, அவர்கள் வாழ்ந்த மலைப்பகுதியில் அவர்கள் விவாகம் பண்ணுவதற்கான புருஷர்களே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால், ஆப்ரஹாம் வாழ்ந்த மம்ரே பகுதியில் மட்டுமல்ல. அவனிடத்திலேயே ஏராளமான வாலிபப்புருஷர்கள் இருந்தார்கள். அவர்கள் இதே லோத்துவையும் அவன் மனைவி மகள்களையும் காக்க, ஆப்ரஹாமோடே போய் ராஜாக்களோடேயே யுத்தம் பண்ணியிருக்கிறார்கள்.

ஆதி 14:24 வாலிபர் சாப்பிட்டது போக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும். இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

இதிலே வாலிபர் என்று ஆப்ரஹாமால் குறிப்பிடப்படுபவர்கள், அவனுடைய வேலைக்காரர்கள்தான். ஆநேர், எஸ்கோல், மம்ரே என்பவர்களோ ஆப்ரஹாம் வாழும் மம்ரே பகுதியின் குடிகள். அவர்களும் ஆப்ரஹாமோடே யுத்தத்திலே உதவி செய்ய வந்திருந்தார்கள். ஆக, ஆப்ரஹாமிடத்திலே லோத்துவின் மகள்களுக்கேதுவான புருஷர்கள் இருந்தார்கள். லோத்து ஆப்ரஹாமிடத்திலே வந்திருந்தால், அவன் மூலமாக, தன் மகள்களின் விவாகத்தையாவது முடித்திருக்கலாம்.

தனக்குப் பிறகு தன் மகள்களுக்கு இந்த பூமியில் யார் துணை? அவர்களுக்குச் செய்யவேண்டிய விவாகக்கடமையை செய்யவேண்டுமே என்ற இயல்பான தகப்பனின் சிந்தனையோடு, அதனை உரிய முறையில் உரிய மனிதர்கள் மூலம் நிறைவேற்ற அவன் முயற்சி செய்யாமற்போனதும் ஆச்சரியம் தான். அதன் விளைவுதான். அவனது மகள்கள் கடைசியில் தங்களுக்கான சந்ததியை உண்டாக்கிக்கொள்ள தங்கள் தகப்பனையே மதுவின் மூலம் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

லோத்து சோவாரிலேயே கூட பாதுகாப்பாக இருந்திருக்கலாம்!

சிநேயார் பகுதியைச் சேர்ந்த 4 ராஜாக்கள், கானான் தேசத்தையே கலங்கடித்துக்கொண்டு இருந்தபோது, சோதோம், கொமோரா உள்ளிட்ட பட்டணங்களின் 5 ராஜாக்கள் எழும்பி அவர்களுக்கு எதிராகப் போரிடுகிறார்கள். ஆனாலும் முறியடிக்கப்படுகிறார்கள். அவர்களில் பின்னாளில் லோத்து குடியேறின சோவாரின் ராஜாவும் ஒருவன். இவர்களெல்லாம் தொடர் தோல்விகளைச் சந்தித்து, கானான் தேசமே கலங்கிக்கொண்டிருந்தபோது, ஆப்ரஹாம் தலைமையிலான 318 பேர் கொண்ட படை புறப்பட்டு அவர்களை முறிய அடித்துப்போடுகிறது.

15 இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள் மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபா மட்டும் துரத்தி,

கானான் தேசத்தின் பெரும்பான்மை குடிகளான எமோரியர், ஓரியர் உள்ளிட்ட ஆறு ஜாதிகளையும், சோதோம், கொமோரா, உள்ளிட்ட பிரபலமான 5 பட்டணங்களையும் கலங்கப்பண்ணின ராஜாக்களை ஆப்ரஹாமும் அவனது வேலைக்காரரும் தான் முறியடித்தார்கள். அதனால் தான் சாலேமின் ராஜா மெல்கிசேதேக்கும் ஆப்ரஹாமை வாழ்த்துகிறான். இந்த வெற்றியின் மூலம், அந்த 6 ஜாதிகளும் அடுத்தக்கட்ட அழிவிலிருந்து தப்புவிக்கப்படுகிறார்கள். கடுமையான பாதிப்பை சந்தித்த சோதோம், கொமோரா, சோவார் என்னும் பட்டணங்களின் ராஜாக்களும் அவர்களின் குடிகளும் பொருட்களும் விடுவிக்கப்படுகிறார்கள். இதன் மூலம், ஆப்ரஹாம் கானானிய ராஜாக்களின் மத்தியில் செல்வாக்குள்ளவனாகிறான்.

அதிலும் லோத்து பின்னாளில் ஓடிப்போய் குடியேறின சோவாரின் ராஜாவுக்கும் ஆப்ரஹாமின் பெயர் அறியப்பட்டதாகவே இருந்திருக்கும். அப்படிப்பட்ட சோவாரில் குடியிருக்கத்தான் லோத்து பயப்பட்டான். அவன் சோவாரிலேயே தொடர்ந்து குடியிருக்க விரும்பியிருந்தாலும், ஆப்ரஹாம் அதற்கும் தனக்கு இருந்த செல்வாக்கு மூலம் தன் கடந்தகால வெற்றியையும், அதன்மூலம் சோவாரின் ராஜாவுக்கு ஏற்பட்ட அநுகூலத்தையும் நினைவுபடுத்திப்பேசி, தகுந்த பாதுகாப்பையும் தயவையும் ராஜாவின் கண்களிலும் ஜனங்களின் கண்களிலும் ஏற்படுத்தியிருக்க முடியும்!

ஆனால் லோத்துவோ ஆப்ரஹாமிடத்தில் வராமல், மலைக்கு ஓடிப்போகிறான். லோத்துவோ ஏனோ அனைத்தையும் இழந்த நிலையிலும் தன் தகப்பனும் சகோதரனுமாகிய ஆப்ரஹாமை நோக்கிப் போகவில்லை. மலைக்குப்போய் மதுகுடித்து, மகள்களாலேயே சயனிக்கப்பட்டு, தேவனால் சபிக்கப்பட்ட இரண்டு இனங்கள் உருவாவதற்கு காரணமாகிப்போனான்!

ஆம். அனைத்தையும் இழந்த நிலையிலும் லோத்துவுக்கு சமாதானமான ஓர் கடைசித்தீர்வு இருந்தது.

அது ஆப்ரஹாம். அதுவே லோத்தின் ஆரம்பமும் அடையாளமுமாகும். அந்த அடையாளத்திடமே மீண்டும் திரும்பியிருந்தால், லோத்துவின் சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

லோத்துவும் நீதிமான் தான் என்றாலும், அவனோடு கானானுக்குப் புறப்பட்ட ஆப்ரஹாமோடு ஒப்பிடும்போது அவன் வீழ்ச்சியடைந்த நீதிமான்!

ஆபத்துக்காலத்தில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *