இஸ்ரேல் பற்றி சாதகமான கருத்துணர்வு நிலவும் ஒரே மேலை நாடு!
அமெரிக்கா யூதர்களல்லாத மற்ற இன கிறிஸ்தவர்களாலும் கிறிஸ்தவர்களல்லாத யூதர்களாலும் நிரப்பப்பட்ட ஓர் தேசம். உலகில் இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக, யூதர்கள் அதிகமாக வாழும் நாடு அமெரிக்கா தான். அந்த அளவுக்கு, இஸ்ரேல் உருவாவதற்கு முன்பிருந்தே, அமெரிக்கா யூதர்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஓர் சொந்த தேசம் போலவே இருந்து வருகிறது.
யூதர்கள் உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டிருந்த காலங்களில், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கூட அவர்களுக்கு பாதுகாப்பற்ற அசாதாரண சூழ்நிலைகளே நிலவின. ஜெர்மனியில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள், அடால்ஃப் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் என்றும் மறக்க இயலாதவை. பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து அவர்கள் வெளியேற்றவும் பட்டார்கள்.
ஆனால், அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்கள் மட்டும் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் மத்தியில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்தார்கள். பல துறைகளில் சாதித்தார்கள். இன்றும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களும் நிரம்பியிருக்கும் ஓர் தேசத்தில் ’இஸ்ரேல் பாசம்’ என்பது எந்த அளவுக்கு நிரம்பி வழியும் என்பதை விவரிக்க வேண்டியதில்லை.
பிபிசி 2013-ல் 22 நாடுகளில் நடத்திய ஒரு ஆய்வில், ’இஸ்ரேலைப் பற்றி சாதகமான மக்கள் கருத்துணர்வு நிலவும் ஒரே மேலை நாடு அமெரிக்காதான்’ என்று தெரியவந்தது. இது உண்மையும் கூட. ஏனெனில், இஸ்ரேலுக்கு ஒரு காலத்தில் சாதகக் கருத்துணர்வுடன் இருந்த ஐரோப்பிய நாடுகளெல்லாம் இன்று அதற்கு எதிர்மறையான கருத்துணர்வையும் நிலைப்பாடுகளையுமே கொண்டுள்ளன.
இன்றைய இஸ்ரேல் உருவாவதற்கு முன்பிருந்தே, ’யூதர்களுக்கான தனி நாடு’ என்ற சீயோனிஸ கொள்கையில் அமெரிக்கர்கள் மத்தியிலும், அரசினர் மட்டத்திலும் ஆதரவு கண்ணோட்டமே இருந்தது. அதனை நிரூபிக்கும் வண்ணமாக, நவீன இஸ்ரேல் உருவான அடுத்த பத்து நிமிடங்களுக்குள்ளாகவே அதனை அங்கீகரித்து கடிதம் அனுப்பிய முதல் நாடாகவும் அமெரிக்காவே இருந்தது.
அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அங்கு கணிசமான அளவில் யூதர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள், அந்நாட்டின் சக்தி வாய்ந்த பல முக்கிய நிலைகளில் இருக்கின்றனர்.
இரண்டாவது, அமெரிக்கா கிறிஸ்தவர்கள் அதிகம் நிறைந்த நாடு. ஓர் கிறிஸ்தவ நாடும் கூட. பள்ளிக்கூடங்களில் பத்துக்கட்டளைகள் செதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் எவருக்குமே இஸ்ரேல் என்பது இதயத்திற்கு நெருக்கமான நாடு. யூதர்கள் உலகக் கிறிஸ்தவர்களின் உள்ளத்திற்கு நெருக்கமானவர்கள். ஏனெனில், இஸ்ரேல் அவர்களின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவை உலகிற்கு தந்த தேசம். இரட்சிப்பு என்பதுவும் யூதர்கள் வழியாகத்தான் உலகிற்குக் கடந்து வந்தது. அதனால், கிறிஸ்தவத்தின் துவக்கமும் முடிவும் இஸ்ரேலும் அதன் தலைநகர் ஜெருசலேமும் தான்.
அப்படிப்பட்ட இஸ்ரேல் தேசத்தின் நலன் நாடுவதில் கிறிஸ்தவர்கள் எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அந்த வகையில், உலகில் கிறிஸ்தவர்கள் மிகப்பெரும்பான்மையாய் வாழும் ஓர் தேசத்தில் இஸ்ரேல் பற்றிய சாதகக் கருத்துணர்வும் ஆதரவு நிலைப்பாடுகளும் வெளிப்பட்டுக்கொண்டே இருப்பதில் ஆச்சரியமொன்றும் இல்லை எனலாம்.
ஆம். அமெரிக்கர்களின் இதயங்கள் எப்போதும் இஸ்ரேலுக்காக துடிக்கின்றன….
இஸ்ரேலை முதல் நாடாக அங்கீகரித்து வரலாற்றில் இடம்பிடித்த அமெரிக்கா!
உலக அரங்கில் எழுத்துப்பூர்வமாக இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நாடு அமெரிக்கா. ஆம். 1948- மே 14-ஆம் ஸ்டேட் ஆஃப் இஸ்ரேல் என்ற நாடு அறிவிக்கப்பட்ட பிறகு, அதுகுறித்த கடிதம் ஒன்று அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்படுகிறது. அந்தக் கடிதத்தில், அமெரிக்க நேரப்படி அந்த நாளின் 6 மணிக்கு அடுத்த முதல் ஒரு நிமிடத்திலிருந்து புதிய நாட்டின் சட்டங்கள் எல்லாம் அமலுக்கு வரும் என்றும், இஸ்ரேலை தாங்கள் அங்கீகரிப்பீர்கள் என்றும் பன்னாட்டு சமூகத்தில் வரவேற்பீர்கள் என்று நம்புவதாகவும் இஸ்ரேல் பிரதிநிதியிடமிருந்து கடிதம் சென்றது.
இந்தக் கடிதம் கண்ட உடனேயே அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமனிடமிருந்து அங்கீகரிப்புக் கடிதம், அமெரிக்க நேரப்படி 6.11-க்கு வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படுகிறது. அதாவது, இஸ்ரேலில் 6.01-க்கு புதிய நாட்டின் சட்டங்கள் அமலுக்கு வந்த அடுத்த 10 நிமிடங்களில் அமெரிக்காவிடமிருந்து அங்கீகரிப்புக் கடிதம் புறப்பட்டுச் செல்கிறது. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவு எந்த அளவுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதை விளக்க இந்தச் சம்பவம் ஒன்றே போதுமானது.
ஆனாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணி என்பது, அப்போதே துவங்கிவிட வில்லை. அதற்குக் கொஞ்சங் காலம் தேவைப்பட்டது. கொஞ்சம் காரணங்களும் தேவைப்பட்டன.
உறவை பின்னோக்கி இழுத்த ஐசன்ஹோவரின் வரலாற்றுப்பிழை!
இஸ்ரேலை அங்கீகரித்த ட்ரூமனின் காலத்துக்குப் பிறகு, ட்வைலைட் ஐசன்ஹோவர் அமெரிக்க ஜனாதிபதியானார். இவர், மத்திய கிழக்குப் பகுதியின் மீதான ட்ரூமனின் வெளியுறவுக்கொள்கையை விமர்சித்தார். இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்க நிலைப்பாட்டிலிருந்து விலகி, இஸ்ரேலை எதிர்க்கும் அரபு நாடுகளை அரவணைத்துக் கொள்ள விரும்பினார். அதிலும், 1956-இல் நிகழ்ந்த சூயஸ் பிரச்சினையில் ஐசன்ஹோவரின் நிலைப்பாடுகள், இஸ்ரேலுக்கு எதிரானதாகவே இருந்தன.
1956 அக்டோபரில் இஸ்ரேல், யுனைடட் கிங்டம் மற்றும் பிரான்ஸ் நாடுகள் எகிப்திற்கு எதிராகப் போர் தொடுத்தன. யுத்தத்தில் இஸ்ரேலுக்கு வெற்றி கிடைத்த நிலையில், படைகளை திரும்பப் பெற வேண்டுமென்று உலக நாடுகளிடமிருந்தும், அமெரிக்காவிடமிருந்தும் பெரிய அழுத்தம் உண்டானது.
அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் இஸ்ரேலுக்கு எதிர்ப்பான நிலையை எடுத்து, எகிப்தை ஆதரித்தார். பலவிதமான அழுத்தங்களால், யுனைடட் கிங்டம், மற்றும் ப்ரான்ஸ் நாடுகள் தங்கள் படைகளை திரும்பப் பெற்றன. ஆனால், இஸ்ரேலோ பின்வாங்க மறுத்தது. ஏனெனில், தன் பூர்வ வரலாற்றில் மிக முக்கியமான இடங்களான சீனாய் தீபகற்பத்தையும் காசா நகரத்தையும் அந்நாடு பிடித்திருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வெற்றியை விட்டுத்தர இஸ்ரேல் விரும்பவில்லை.
ஆனால், ஐசன்ஹோவரோ, இவ்விரண்டு இடங்களில் இருந்தும் வெளியேறியே தீரவேண்டுமென மிகப்பெரிய அழுத்தத்தை இஸ்ரேலுக்குத் தந்தார். இஸ்ரேல் மறுத்தபோது, இஸ்ரேலுக்கு எண்ணெய் தரக்கூடாது என ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தினார். இஸ்ரேல் வெளியேறும் வரைக்கும் ஐ.நா.விலிருந்து எந்த உதவியும் தரக்கூடாது என்றும் தடை செய்தார். அமெரிக்கா ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு வழங்கிவந்த 100 மில்லியன் டாலர்களையும் வழங்காதபடிக்கு நிறுத்திவைத்தார். செனட்டும் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் தன் அழுத்தத்தை நிறுத்தவில்லை.
ஐசன்ஹோவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தொடர் அழுத்தம் காரணமாக, 1957 மார்ச்சில் இஸ்ரேல் சினாய் மற்றும் காசா பகுதிகளை விட்டு வெளியேறியது. ’சினாய் யுத்தம்’ என்று இஸ்ரேல் தரப்பில் குறிப்பிடப்படும் இந்த யுத்தத்தில் மிகப்பெரிய வெற்றியை இஸ்ரேல் பெற்றபோதும், ஐசன்ஹோவரின் தவறான வெளியுறவுக் கொள்கையாலும், செயல்பாடுகளாலும் அதனை அது இழக்க வேண்டி வந்தது.
ஆனாலும், தன் எட்டு வருட ஆட்சிக்காலத்தின் முடிவில், மத்திய கிழக்கு நாடுகள் விவகாரத்தில் தன் பார்வை தவறு என்றும், ட்ரூமன் வரைக்கும் இருந்த வெளியுறவுக்கொள்கையே சரி என்றும் ஐசன்ஹோவர் ஒப்புக்கொண்டார். இப்படி, இஸ்ரேலின் துவக்கக்காலத்திலேயே அதற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு ஐசன்ஹோவரால் எட்டு வருடங்கள் பின்னடைவைச் சந்தித்தது.
வரலாற்றை மாற்றிப்போட்ட 1973 யாம் கி பூர் யுத்தம்!
அது அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலம். மத்திய கிழக்குப் பகுதியில் தங்கள் செல்வாக்கை வளர்ப்பதில் இரு வல்லரசுகளும் தொடர் அரசியல் செய்து வந்தன. சோவியத் அரபு நாடுகளுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளைச் செய்து கொண்டிருந்தது.
மத்திய கிழக்குப் பகுதியில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கை தடுத்து நிறுத்த விரும்பிய அமெரிக்காவுக்கு, இஸ்ரேல் தான் அதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும் என்ற கண்ணோட்டம் உண்டானது. அந்தக் கண்ணோட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தோதாக அமைந்தது 1973 அக்டோபரில் நிகழ்ந்த யாம் கி பூர் யுத்தம்.
இந்த யுத்தத்திலிருந்து தான் மத்திய கிழக்குக்கான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலுமாக மாறத்தொடங்கியது. அரசியல் வல்லுநர்கள், அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணி உண்மையிலேயே துவங்கிய வருடமாக இந்த வருடத்தையும், துவங்கிய புள்ளியாக இந்த யுத்தத்தையும் தான் குறிப்பிடுகிறார்கள்.
ஏனெனில், இந்த வருடத்திலிருந்து தான் அமெரிக்கா இஸ்ரேலுக்கு மிக முக்கியமான உற்றத்தோழனாக மாறத்தொடங்கியது. 1967 யுத்தத்தில் இஸ்ரேலிடம் தோற்றதற்கு பதிலடியாக எகிப்து, சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகள் இஸ்ரேல் மீது திடீர் யுத்தம் தொடுத்தன. இந்த யுத்தத்தை இஸ்ரேல் தரப்பில் ‘யாம் கி பூர்’ என்றும் அரபு நாடுகள் தரப்பில் ‘அக்டோபர் யுத்தம்’ என்றும் அழைக்கிறார்கள்.
அரபு நாடுகள் இஸ்ரேலுக்குள் திடீரென நுழைந்து தாக்குதல் தொடுத்தாலும் கூட, இந்த யுத்தத்திலும் இஸ்ரேலே வெற்றிபெற்றது. அதற்கு அமெரிக்கா செய்த உதவியும் மிக முக்கியமான காரணமாக அமைந்தது. யாம் கி பூர் யுத்தம், அமெரிக்காவுக்கும் இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.
ஐ.நா. சபையில் இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கும் ஒரே நாடு!
தனி ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம் நீங்கலாக, ஐக்கிய நாடுகள் சபையில், இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களே பொதுவாக வெற்றி பெற்று வந்திருக்கின்றன. உலகத்தின் எல்லா நாடுகளும், பல்வேறு விவகாரங்களிலும் இஸ்ரேலுக்கு எதிராகவே பொதுவாக வாக்களித்து வர, அமெரிக்கா மட்டும் இஸ்ரேலுக்கு ஆதரவாக தொடர்ந்து வாக்களித்தும் குரல் கொடுத்தும் வருகிறது. உலகின் வல்லரசான தான், ஒரு தீர்மானத்தில் தோற்றுப்போவதைக் குறித்த எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், அமெரிக்க அரசு தொடர்ந்து இஸ்ரேலை ஐ.நா. சபையில் ஆதரித்து வருகிறது
இஸ்ரேலுக்காக அதிக முறை பயன்படுத்தப்பட்ட அமெரிக்க ‘வீட்டோ பவர்’
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டால், அவற்றை தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி பலமுறை தடுத்திருக்கிறது அமெரிக்கா. ஐ.நா. சபையில் ’வீட்டோ பவர்’ எனும் அதிகபட்ச அதிகாரம் பெற்ற நாடுகள் ஐந்து மட்டுமே. ஐக்கிய நாடுகள் சபை தோன்றிய காலத்தில் இருந்து, அமெரிக்கா இதுவரை தன் வீட்டோ அதிகாரத்தை 83 முறை பயன்படுத்தி இருக்கிறது. அதில், சரிபாதியாக 42 முறை அமெரிக்கா தன் அதிகாரத்தை இஸ்ரேல் தொடர்பான விவகாரங்களுக்காகப் பயன்படுத்தி இருக்கிறது.
10 வருடத்தில் 15 முறை!
அதிலும் 1991 முதல் 2011 வரையிலான பத்து வருடக் காலக்கட்டத்தில் மட்டும் அமெரிக்கா 15 முறை தன் வீட்டோ அதிகாரத்தை இஸ்ரேலைக் காப்பாற்றப் பயன்படுத்தி இருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தக் காலக்கட்டத்தில் அமெரிக்கா மற்ற விவகாரங்களுக்காக தன் வீட்டோ அதிகாரத்தை 24 முறை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறது என்பதே.
பாலஸ்தீன் விவகாரத்தில்!
1988-இல் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அரபத் ஆப்பிரிக்காவிலுள்ள டியுனிஷியா நாட்டின் தலைநகர் டியுனிஷிலிருந்து கொண்டு பலஸ்தீனா என்ற நாட்டைப் பிரகடனப்படுத்தினார். அதன்பின் இது விஷயமாகத் தான் ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்த வேண்டுமென்று கோரிக்கையை விடுத்தார்.
ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலகம் அமெரிக்காவிலுள்ள நியுயார்க் நகரிலிருக்கிறது. ஆனால் அவர் அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க அரசாங்கம் அனுமதி தர மறுத்துவிட்டது. ஆகவே இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தை சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் நடத்த அதின் அங்கத்தினர் தீர்மானித்தனர்.
1988 டிசம்பர் 14,15,16 ஆகிய தேதிகளில் உலக ஐக்கிய நாடுகள் சங்கம் ஜெனிவா நகரில் கூடியது. 152 நாடுகள் கலந்துகொண்டன. சபையின் தீர்மானங்களில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியும், இஸ்ரேலின் பிரதிநிதியும் தவிர மற்ற எல்லோரும் இஸ்ரேலுக்கு விரோதமாக வாக்களித்தனர்.
அப்போதைய நிலையில் ஒட்டுமொத்த உறுப்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தபோதும், அந்நாட்டிற்கு ஆதரவாக வாக்களித்த உலகத்தின் ஒரே நாடு அமெரிக்காவே. அதற்கு நெருக்கமான ஐரோப்பிய நாடுகளே கூட இஸ்ரேலுக்கு ஆதரவளிக்காதபோதும், அமெரிக்கா மட்டும் இஸ்ரேலை ஆதரிப்பது என்ற தன் முடிவில் உறுதியாக இருந்திருக்கிறது.
எருசலேம் விவகாரத்தில்!
1967 யுத்தத்தில் தன் பூர்வீகத் தலைநகரான எருசலேமை ஜோர்டான் நாட்டிடமிருந்து கைப்பற்றிக்கொண்டது இஸ்ரேல். 1980-இல் அதனை தன் தலைநகராகவும் அறிவித்துக்கொண்டது. இஸ்ரேலின் இவ்விரு செயல்களையும் உலகின் எல்லா நாடுகளும் எதிர்த்தாலும் அமெரிக்கா மட்டுமே ஆதரித்தது. ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்தைப் பொருத்தவரை ‘கிழக்கு எருசலேம்’ என்பது அவர்களுக்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு’ பகுதிதான். ஆனாலும், எருசலேம் விவகாரம் ஐ.நா.வில் எழுப்பப்படும்போதெல்லாம் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, எருசலேம் இஸ்ரேலின் கைவிட்டுப் போகாதபடி காப்பாற்றி வந்திருக்கிறது.
இஸ்ரேலுக்காக யுனெஸ்கோவில் இருந்து வெளியேறிய அமெரிக்கா!
ஐக்கிய நாடுகள் (UNITED NATIONS) சபையின் கல்வி (EDUCATIONAL), அறிவியல் (SCIENTIFIC) மற்றும் பண்பாட்டு அமைப்பு (CULTURAL ORGANISATION) UNESCO. இந்த அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிலிருந்து 2018 டிசம்பர் 31 நள்ளிரவோடு அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிகாரபூர்வமாக வெளியேறின.
எருசலேமை கைப்பற்றியதை விமர்சித்த யுனெஸ்கோ
இஸ்ரேல் தன் பூர்வீக தலைநகரான கிழக்கு எருசலேமை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தபோதே யுனெஸ்கோ அதனை விமர்சித்தது. இதன்மூலம், அந்த அமைப்பு, கிழக்கு எருசலேமுக்கும் இஸ்ரேலுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த வரலாற்றுத் தொடர்பை மறுத்து, தனக்கும் எந்தத் தொடர்புமில்லாத ஒரு நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டதாகவே சித்திரித்தது. இங்கிருந்தே இஸ்ரேலுக்கு எதிரான யுனெஸ்கோவின் நடவடிக்கைகள் தொடங்கியது எனலாம்.
இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனை சேர்த்துக்கொண்ட யுனெஸ்கோ
2011-ஆம் ஆண்டு. இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீனை அங்கீகரிக்கும் விதமாக அதற்கு தன் அமைப்புக்குள் முழு உறுப்பினர் அந்தஸ்தை தந்தது யுனெஸ்கோ. இதனை எதிர்த்து, தான் யுனெஸ்கோவுக்கு வருடந்தோறும் வழங்கிவந்த 10 மில்லியன் டாலர் நிதியை நிறுத்திவைத்தது இஸ்ரேல். இந்த விவகாரத்தில் இஸ்ரேலை ஆதரிக்கும் வண்ணமாக, யுனெஸ்கோ அமைப்புக்கு தான் ஆண்டுதோறும் வழங்கிவந்த 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிறுத்திவைத்தது அமெரிக்கா. இது யுனெஸ்கோவின் உறுப்பினர் நாடுகள் அதற்கு வழங்கிவரும் மொத்த நிதியில் 22 விழுக்காடு ஆகும்.
எருசலேமிற்கும் இஸ்ரேலுக்குமான வரலாற்றை மறுத்த யுனெஸ்கோ
14 அக்டோபர் 2016 – பழைய ஜெருசலேம் எனப்படும் கிழக்கு எருசலேம் பகுதியின் புனித இடங்களில் இஸ்ரேலுக்கு இருக்கும் வரலாற்றுத் தொடர்பை மறுக்கும் விதமான தீர்மானத்தைக் கொண்டு வந்தது யுனெஸ்கோ.
மிக முக்கியமாக, சாலொமோன் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயமும் எஸ்றா, நெகேமியா காலத்தில் கட்டப்பட்ட தேவாலயமும் இருந்த இடம் TEMPLE MOUNT. அதாவது தேவாலய மலை. இரண்டாவது தேவாலயம் கி.பி. 70-இல் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பால் அழிக்கப்பட்டாலும், அதன் சுற்றுச்சுவர் இன்றும் அந்த ஆலயத்திற்கு சாட்சியாக நிற்கிறது. அந்த இடத்தில் தான் யூதர்கள் கூடி தேவனை தொழுது கொள்கின்றனர். இந்த இடத்திற்கு மிக அருகிலேயே, யூதர்கள் உலகமெங்கும் சிதறி வாழ்ந்த இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட மசூதியின் பெயர் ஹரம் அல் ஷாரிஃப்.
இந்தப் புனிதத்தலத்தோடு யூதர்களுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான வருட வரலாற்றுத் தொடர்புகளை எல்லாம் முற்றிலும் மறுக்கும் விதமாக, அந்த இடத்தை முஸ்லீம்கள் பயன்படுத்தும் பெயரான ‘த ஹராம் அல்-ஷாரிப்’ என்ற பெயரிலேயே குறிப்பிட்டது யுனெஸ்கோ. மேலும், அவ்விடம் பூர்வீகத்திலிருந்தே முஸ்லீம்களுக்கே சொந்தமானது என்பதை நிலைநாட்டும் விதமாக, முஸ்லீம்கள் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு என்றும் குறிப்பிட்டது யுனெஸ்கோ.
இந்தத் தீர்மானத்தை கண்டித்த இஸ்ரேல், அதோடு ஐக்கிய நாடுகள் அவையின் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவுடனான தன்னுடைய ஒத்துழைப்புகளை நிறுத்திக் கொண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஜெருசலம் நகரத்தோடு யூதர்கள் கொண்டுள்ள தொடர்பை கண்டுகொள்ளாமல் இந்த அமைப்பு இஸ்லாமியவாத பயங்கரவாதத்திற்கு துணை போயுள்ளது என்று இஸ்ரேல் கல்வி அமைச்சர் நாஃப்தாலி பென்னட் தெரிவித்திருந்தார்.
இணைந்து வெளியேறின இரு நாடுகளும்!
யுனெஸ்கோவின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த அமெரிக்கா, அவ்வமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டுமென கோரியது. இந்த நிலையில்தான், தான் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதலே, பல்வேறு முக்கிய விவகாரங்களிலும் இஸ்ரேலுக்குச் சாதகமாக அமெரிக்காவின் நிலைப்பாடுகளை நகர்த்திவந்த ட்ரம்ப், இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ பாகுபாடு காட்டுவதாகக் கூறி யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா வெளியேறும் முடிவை அறிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவை ’துணிச்சலான அறம் சார்ந்த முடிவு’ என்று வருணித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ.
யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுவதற்கான தாக்கீதை 2017 அக்டோபர் 12-ஆம் தேதியில் தாக்கல் செய்தது அமெரிக்கா. 2018 டிசம்பர் 31 நள்ளிரவோடு முடிந்து 2019 எனும் புத்தாண்டு பிறந்தபோது அமெரிக்காவும் இஸ்ரேலும் யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியிருந்தன. இதன் மூலம், இஸ்ரேலுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் நிலைப்பாடுகள், உலகின் எந்த உயரிய அமைப்பிடமிருந்து புறப்பட்டு வந்தாலும், அவற்றை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்பதை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது ட்ரம்ப் அமெரிக்கா. .
இராணுவ ரீதியிலான வியக்க வைக்கும் உதவிகள்!
உலக அளவில் இராணுவ ரீதியில் கூட்டாளி நாடுகளாகச் செயல்படும் நாடுகள் பல இருக்கின்றன. இந்தக் கூட்டு என்பது காலக்கட்டந்தோறும் மாறுவதாகவும் அல்லது சூழ்நிலையைப் பொருத்து மாற்றங்களைச் சந்திப்பதாகவும் இருக்கலாம். ஆனால், உலக அரங்கில் பல வருடங்களாக இராணுவ ரீதியிலான கூட்டணியை வெளிப்படையாகக் கடைபிடித்து வரும் கூட்டணியாக இஸ்ரேல் – அமெரிக்கக் கூட்டணி திகழ்கிறது.
பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் மிகச்சிறிய நாடு என்றாலும், அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் இஸ்ரேல் இன்று உலகத்தின் மிக முக்கியமான நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவுக்கு இராணுவத் தளவாடங்களை விற்குமளவுக்கு அந்நாடு, பாதுகாப்புத் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. இதற்கு, அமெரிக்காவின் உறுதுணையே முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது எனலாம்.
சர்வதேச அளவில் பார்க்கும்போது இஸ்ரேல்தான் அமெரிக்காவிடமிருந்து மிக அதிக நிதியுதவி பெறும் நாடு. இதில் பெருமளவு உதவித் தொகை, கடனாக அல்லாமல் கொடையாகவே வழங்கப்படுகிறது. இந்தக் கொடையும் வளர்ச்சி நிதி, வறுமை ஒழிப்பு நிதி என்ற பெயர்களில் அல்லாமல், வெளிப்படையாகவே ஆயுதம் வாங்கவே தரப்படுகிறது. இந்தப் பெரும் நிதி, மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
அமெரிக்காவை போலவே மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் நிதியுதவிகளையும் அளித்து வந்தன. 1967 போரின்போது இஸ்ரேல் தனது பூர்வீகப் பகுதிகள் சிலவற்றை பிடித்துக்கொண்டதற்குப் பிறகு அந்த நாடுகள் தங்கள் உதவிகளை நிறுத்திக்கொண்டன. ஆனால், அமெரிக்கா மட்டும் இன்னும் தன் உதவியை தொடர்ந்து வருவதற்கு, அது இஸ்ரேலை ஆதரிப்பதற்காகவே கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டதே காரணம்.
1985-இல் இருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி வருகிறது. 1976-2004 வரையான காலக்கட்டத்தில், அமெரிக்காவிடமிருந்து ஆண்டுதோறும் அதிகபட்ச நிதியுதவியைப் பெற்ற நாடு இஸ்ரேல் மட்டுமே. வாஷிங்டனின் வெள்ளை மாளிகை இஸ்ரேலுக்கு வருடந்தோறும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வெளிநாட்டு இராணுவ நிதியுதவியாக வழங்கி வருகிறது. இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து இப்படி தொடர்ந்து பெற்றுவந்த மொத்த நிதியுதவி, 2018 வரையிலான கால அளவில் 121 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இவை எதுவும் திரும்பச் செலுத்த வேண்டிய கடனாக அல்ல, கொடையாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இதைக் குறித்த கேள்விகள், மிக அரிதாகவே அமெரிக்க நாடாளுமன்ற அவையில் எழுப்பப்பட்டிருக்கின்றன.
இஸ்ரேலுக்கு வருடந்தோறும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கும் இந்த அமெரிக்க ஒப்பந்தம் 2018-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இந்த நிதியை அளிக்கும் புதிய ஒப்பந்தத்தை அமெரிக்கா நினைத்திருந்தால் நிறுத்தி இருக்கலாம். ஆனால், ஆச்சரியம் அளிக்கக்கூடிய வகையில், ஏற்கெனவே அளித்துவந்த 3 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு, கூடுதலாக 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் அடுத்த பத்து வருட பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்தத் தொகை ட்ரம்ப் நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நிதியுதவிகள் போக, அமெரிக்கா இஸ்ரேலுடன் பலவிதமான இராணுவ பரிமாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதில், இரண்டு நாட்டு இராணுவங்களும் இணைந்து கூட்டுப்பயிற்சிகளில் ஈடுபடுவது, இராணுவ ஆய்வுகள் மற்றும் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளும் அடக்கம். தீவிரவாதத்திற்கு எதிராகப் போரிடுவதிலும் இரண்டு நாட்டு பாதுகாப்புப் பிரிவுகளும் ஆக்கப்பூர்வமான முறையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
Leave a Reply